கூந்தல் கருப்பு….ஆஹா !!!
டையின் சிறப்பு …ஓஹோ…!!!
நம்மில் பலர் ” டை” போடுவதால் தான் கூந்தலின் நிறத்தை அப்பிடியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
நரை முடி வயது முதிர்வதையும், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தையும் குறிக்கும் என்ற காலம் போய் , முதிர்வதை, விரும்பாதவர்கள்/ ரசிக்காதவர்கள் அதற்க்கு கலர் அடிக்க துவங்கினார்கள்.
இளநரை ஒரு பெரும் பிரெச்சனை. இன்றைய டென்ஷன் கலந்த வாழ்க்கையில்,
( வாழ்வின் பெரும் பகுதி டென்ஷனில் தான் செலவழிகிறது ..நர்செரி படிக்கும் குழந்தைக்கு கூட டென்ஷன் தான்.)
இளநரையை மறைக்க தேவைபடுகிறது ‘டை’.
எது எப்படியோ,
எனக்கு எதற்கு இதெல்லாம்? என்றோ ஒரு நாள் நான் இப்படித் தானே தோற்றமளிக்கப் போகிறேன் என்று சில மாதங்கள் டை பக்கமே போகாமல் இருந்தேன்.
என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் !! என்று கணவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேசினேன் !
முதலில் என்னை நானே ஏற்றுக்கொண்டேனா என்றால் 80% ஒப்புக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
நீண்ட முடியும், இருபது நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டி இருப்பதும் அலுப்பை தந்தது…..
இடையிடையே, தலைமுடிக்கு டை போடாததால் இந்த உடை அணியமுடியவில்லையே ….இந்த நகை, ஜிமிக்கி இவையெல்லாம் அணிய முடியவில்லையே என்று சில பல தடைகள் வந்தது உண்மைதான்.
காதில் வைரத்தோடும் மூக்கில் வைர மூக்குத்தியும் நிரந்தரமாகிப் போயின …அழகாகத்தான் இருந்தது… அனால் ஜிமிக்கி அணிந்தால் பாந்தமாக இல்லாதது ஒரு குறை.. அவ்வளவு பிடிக்கும் ஜிமிக்கி…
” நீ உன் முடியை சர்ப் எக்ஸ்செலில் தோய்த்தாயா ” என்ற ஒருவரது நாகரீகமில்லாத பேச்சு மனதை காயப்படுத்தியது.
இரண்டு நாட்கள் புலம்பிவிட்டு புறக்கணித்தேன் .
என்னைப் பார்த்து பேசாமல், என் மண்டையையே பார்த்து பேசும் என்னவர் மேல் கோபம் கோபமாக வந்தது .
பார்த்தவுடன், ‘அய்யய்யோ , என்னாச்சு, டை போட நேரமில்லையா ‘ என்று கேட்பவர்களுக்கு, மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தேன்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விமர்சனம் தோழி ஒருத்தியிடமிருந்து,…
‘ வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா ‘ என்றாள்
‘ ஏன் ஒன்றும் இல்லையே நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்றேன்…’
‘இல்லை …..டை போடுவதை கூட விட்டுவிட்டாயே என்று கேட்டேன் ‘ என்றாளே பார்க்கலாம்…..!!!!!!
தூக்கி வாரி போட்டது எனக்கு… எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள் இந்த மனிதர்கள்….
சிலருக்கு விரிவாகவும்
சிலருக்கு சுருக்கமாகவும் ,
சிலருக்கு புன்னகைத்தும்
சமாளிதுக்கொண்டிருந்தேன்,
முதலிலிருந்தே என் குழந்தைகளின், ஏக போக, ஆதரவு….
‘ நீ இப்பிடித்தான் மா நன்னா இருக்கே ‘ என்று…
அனால் ஒவ்வொரு முறை, யாரேனும் விமர்சிக்கும் போது வந்து அவர்களிடம் கூறக் கூற அவர்களுக்கு ஒரு சமயத்தில், சலிப்பாக இருந்தது….
‘ உனக்கு வேனும்னா கலர் பண்ணிக்கோ மா ‘ என்று கூறத் தொடங்கினார்கள்….
மூன்று மாதங்கள் தாக்கு பிடித்தேன் …..அதற்க்கு மேல் முடியவில்லை…
சரி திரும்பவும் போட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்து, மறுபடியும் துடங்கினேன் ..
ஆஹா….. என்ன ஒரு மாற்றம்…
எனக்கே நான் ப்ரெஷ்ஷாக இருப்பது தெரிந்தது….( மறுபடியும் ஜிமிக்கி ) !!!!!
என்னவர் ஒரு பெரிய பெருமூச்சு விட்டார் …… ஒரு ஐம்பது வயசு வரைக்கும் போட்டுக்கோ ….அப்பறம் பாக்கலாம்…..!!!! ( இதெப்படி இருக்கு ….)
வெளியே இறங்கினால், நண்பர்களின் கண்களில் நிம்மதி….
பக்குவம் என்பது அவரவர் மனது சம்பந்தப்பட்ட விஷயம்
சரி, நாப்பத்தி மூணு வயசில், தொண்ணூறு வயது தோற்றமளிக்காமல் இருக்கலாமே என்று, தொடர்ந்து கலர் செய்ய தொடங்கிவிட்டேன்…..
மனப்பக்குவம் தொண்னூறு போல் உள்ளது என்ற நிம்மதியில் !!!!!!