Daily Archives: திசெம்பர் 6, 2012

சந்தாரா …………..எப்பிடி முடிகிறது இவர்களால் ?????

வாரக் கிழமைகளிலோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, மாதத்தில் ஒரு முறையோ உபவாசம் இருக்கும் போதே, எங்கோ ஒரு மூலையில்,

” இன்று உபவாசம், இதை வாயில் போட்டுக்கொள்ள கூடாது ” என்று மனது எச்சரித்து, நச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
அன்ன, ஆகாரம் இல்லாமல் எப்படி இதனை நாள் இருக்க முடிகிறது ?
எனக்கு தெரிந்தவர் ஒருவரது மாமியார், தன்  சுயநினைவோடு எடுத்த முடிவு, என்னை உலுக்கியது.
நவம்பர் பதினாறாம் தேதி, ” உங்கள் பிரார்த்தனையுடன் வெற்றிகரமான ஏழாவது நாள் சந்தாரா என்று எழுதி அவரின் மாமியார் கட்டிலின் ஒரு மூலையில் சம்மணம் இட்டு உட்காந்திருப்பதை படம் பிடித்து எனக்கு அனுப்பியிருந்தார்.
அட, சந்தாராவா  …? இதென்ன என்று வலைதளத்தில் தேடிய போது , அதிர்ந்தேன் !
ஜைன மதத்தவர்களின்  சமய வழக்கங்களில் ஒன்று தான் இந்த சந்தாரா.
அதாவது, சாகும் வரை உண்ணாவிரதம்.
அவர்கள் சுய நினைவோடு எடுக்கும் முடிவு தான். இந்த பிறவியில், தனது கடமைகள் முடிந்து விட்டன என்று தோன்றினால், தான் இந்த முடிவை எடுக்க முற்படுகிறார்கள்
இது தற்கொலை கிடையாது ஏனெனில்  அது  க்ஷண நேரத்தில் எடுக்கும் முடிவு. இது ஆலோசித்து  எடுப்பது …
 
எவ்வளவு மனஉறுதி வேண்டும் இந்த முடிவுக்கு வருவதற்கு. பிறவி எடுத்ததன் பயன் முடிந்தால் இந்த முடிவுக்கு வரலாம் என அவர்கள் மதம் கூறுகிறது. அல்லது, நோயின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவரும் இந்த முடிவை எடுக்கலாமாம். ஒரு வருடத்தில் இரனூருக்கும் மேல் பட்டவர்கள் இந்த சந்தாராவை மேற்கொள்கிறார்கள்.

இதற்க்கு இணையாக இந்து மதத்தில் ” ப்ரயோபவேசா ” அனுசரிக்கப்படுகிறது. அதே தத்துவம் தான், பொறுப்புகளை முடித்தவரும், வாழ்ந்தது போதும் என்று நினைப்பவரும், இந்த முடிவுக்கு வருவார்களாம்.
பரீக்ஷித் மகாராஜா இதை நடைமுறைபடுத்திய பொது, அவருக்கு பாகவத புராணத்தை விளக்கினாராம், வியாசரின் மகனான சுகன்.
இதெல்லாம் படித்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த அம்மையார் பதினொரு நாள் உண்ணாவிரதத்தை எட்டியிருந்தார்.
மெது மெதுவாக, நம் கண் முன்னே ஒருவர்  மரணத்தை தழுவுவது மயிர்க்கூச்சல் ஏற்படுத்துகிற விஷயம்.

உடல் நிலை சரியில்லாமல், நம் கண் முன்னே ஒருவர் மெல்ல மெல்ல உயிரை விடுவதே வேதனையாக இருக்கிறது…இதில், வேண்டுமென்றே இப்படி முடிவு செய்ய வேண்டுமானால், அவர்களின் மனோ திடத்தை என்னென்று சொல்வது. அவர்களின் மகள், மகன், கணவர், அவர்களின் மன நிலை என்னவாக இருக்கும் ? ஒரு வேளை  இப்பிடி ஒரு மனிதரோடு வாழ்ந்தவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்களோ ?
என் தாயார் படுக்கையில் இருந்த பொது, முதல் சில வருடங்கள் அழுதேன், முட்டிக்கொண்டு கதறினேன், அவளின், தவிப்பை பார்க்க முடியாதவளாய்,
” அம்மாவை அழைசுக்கோ பெருமாளே ” என்று புலம்பியிருக்கிறேன்
பின் ஒரு நாள் திடீரென்று ஒரு ஞானோதயம் ….நான் யார், கடவுளுக்கு ஆணையிட….? என்று.
பின் சற்று தொலைவிலிருந்து பார்க்க தொடங்கினேன்….
” அது அவள் கர்மா அவள் அனுபவிக்கிறாள் ” என்று என்னை தேற்றிக்கொண்டேன்.
அவள் மூலம் இந்த உலகத்தில் வந்ததால், எனக்கு வலிக்கிறது. அவ்வளவு தான். மற்றபடி அவள் வலியை  நான் எந்த விதத்திலும் மற்ற முடியாது என்பது புரிந்தது.
என் கடமையை மட்டும் செய்து விட்டு மற்றவற்றை பெருமாளிடம் விட்டேன்.
அதெல்லாம் சொல்லுவது சுலபம் அனு ….கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.
ஒப்புக்கொள்கிறேன் கஷ்டம் தான். ஆனால், முனைந்து, பழகிநோமானால், அதில் கிடைக்கும் நிம்மதி அனுபவித்தால்தான் புரியும்.
எனக்கு புரிந்தது. !
அம்மா என்னை விட்டு பிரிவதற்கு சில மணி நேரங்கள் முன்பு, அவளை, உச்சி முகர்ந்து, நான் சௌக்கியமாக இருப்பதையும், என் கணவர் அவள் கண்ட கனவு போல் நல்ல நிலைமையில் இருப்பதையும், என் மகள்கள் நன்றாக வளர்வதையும், நன்றாக படிப்பதையும் அவள் காதுகளில் கூறினேன்.
” அம்மா, நீ உன் கடமைகளெல்லாம் முடிச்சுட்டே, இந்த சரீரத்தை விட்டுட்டு கிளம்பு மா ” என்று கூறி முத்தமிட்டுவிட்டு, சற்று நேரம் அவளை பார்துக்கொண்டிருந்து விட்டு படுத்தேன். அடுத்த சில மணி நேரங்களில் அவள் உயிர் பிரிந்தது.
இதைத் தான், பகவன் கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் தவா  சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹா 
 
என்கிறார்.
நேற்று சாயந்திரம் நாலே முக்கால் மணிக்கு, அந்த அம்மணி உயிர் நீற்றார் என்று என் தோழர் எனக்கு தகவல் அனுப்பினார் .
அல்ப விஷயங்களுக்காக, நாம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் வெறுப்பு காட்டாமல் இருப்போமா ?