சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா…

அட….இவங்களும் ரமணி சந்திரன் புக் படிக்கறாங்க பாருங்க ….

முகத்தில் பெரிய சிரிப்பு, நிம்மதி ( தமிழ் எழுத்துக்கள் கண்ணில் பட்டதாலும் அதை பிடித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்தும் )..

தேவி …..

இவர் என் சக பயணியாக இரண்டு தினங்களுக்கு முன்னால், என்னுடன் விமானத்தில் பயணம் செய்தவர்.. தேவியை பார்த்தவுடன் எனக்கு பிடித்து போயிற்று. நகர் புரத்தின் தாக்கம் இல்லாத, மரியாதை அறிந்த, வெகுளியான பெண்மணி. சென்னையில் வசிக்கிறார் என்று எண்ணி, கேட்டபொழுது,

இல்லைங்க மேடம் விழிப்புரம் என்றார்…

திருவெண்ணெய் நல்லூர் ….நீங்க இவ்ளோ வருஷமா பாம்பே ல இருக்கறதால உங்களுக்கு இந்த ஊரெலாம் மறந்து போச்சு என்று கூறவும் …நான் சென்னை இருந்திருந்தாலும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றேன்….

பேச்சுக்கு பேச்சு மேடம்…எனக்கு தர்மசங்கடம் ….அனால் ஒரு அரை மணியில் பழகியது எனக்கு…
இரண்டாவது தடவையாக விமான பயணமாம்…முதல் முறை போனது மறந்து .விட்டது.என்றார் வெள்ளந்தியாக..
சூது வாது கபடம் இதெல்லாம் எதுவும் இல்லாமல் தனக்கு தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் நபர்…
கொஞ்சம் விஷயம் தெரிந்தாலே, ஒரே பகட்டாக தன்னை கட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு நடுவில் இப்பிடி ஒருவர்…

ஒரு வார பம்பாய் வாசம்.
தமிழ் மக்கள் கண்ணில் படவில்லையாம், தமிழ் கேட்கவில்லையாம்…நல்ல சாப்பாடு இல்லையாம்…காபி டீ கூட பிடிக்கவில்லயாம்.

பசும் பாலில் போட்ட காபி டீ தான் குடிப்பேன் மேடம்..என்றார்…
சரியாக சாப்பிடாததால் வயிற்று வலி …தெரிந்திருந்தும், சாப்பிட முடியவில்லை அவரால் …
விமானத்தில் உணவு பரிமாற பட்டபோது, அவர்கள் அசைவ உணவு வாங்கிக்கொண்டார்கள். நான் சாப்பிட தொடங்கியும் அவர் சாப்பிடாததால்,
ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டதற்கு….
நான் பக்கத்திலேயே உட்கார்ந்து அசைவம் சாபிட்டால்
உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா ? என்று கேட்டபோது எனக்கு அவர் மேல் மரியாதை கூடி போயிற்று..

வேலைக்கு போகும் இடத்தில் கூட எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டாராம்…
வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளவில்லயாம் …தானே செய்தால் தான் திருப்தி.
உங்கள் மகன்கள் வெளி இடத்தில் வேலைக்கு போனால், அவர்களுடன் இருக்க வேண்டி வந்தால் என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு,
அப்ப பாத்துக்கலாம் மேடம் பதிலாக வந்தது….

தேவை என்ற ஒன்று வராததால், தேவிக்கு இது முடிகிறது…
அவர்கள் ஊரை விட்டு, பழக்க வழக்கங்களை விட்டு, என்று எந்த தேவையும் இதுநாள் வரை இல்லாததால், அவர் தன்னை மாற்றிக்கொள்ள வில்லை.
தேவை என்று வரும் போது அதற்க்கு ஏற்ப ,இசைந்து கொடுத்து, மாறி விடுவது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம்.
மணமாகி கணவன் வீடிற்கு போகின்ற ஒவ்வொரு பெண்ணும் இதை செய்கிறாள்….
ஒரு புறம் பெண் விமானம் ஓட்டுகிறாள் …
ஒரு பெண், எங்க வீட்டு ரசம் தான் சாப்பிடுவேன்,
பசும் பாலும் தயிரும் தான் சாப்பிடுவேன் என்கிறாள்…
சென்னையிலிரிந்து காரில் விழுப்புரம் பயணம்….
வழியில் ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்கள் என்று நான் சொல்ல…

அட, வீட்ல போய் அரிசிய ஒலைல போட்டுட்டு ஒரு குளி குளிச்சிட்டு வந்து ஒரு ரசம் வெச்சு சாப்பிடுவேன் ….அப்ப தான் தூக்கம் வரும் என்றார்….
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா……..

3 responses to “சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா…

  1. அட எங்கஊர்ப் பக்கத்து அம்மா. கிராமத்து வாழ்க்கை வாழுபவர்கள். ஒரு சாதத்தை வைத்து ரஸம் ஒரு நிமிஷமா வைத்துவிட்டால்ப்போகிரது. அனு ஞாபகம் இருக்கா என்னை. அன்புடன்

    Like

பின்னூட்டமொன்றை இடுக