Category Archives: கண்ணோட்டம்

கணக்கும், கடுக்காயும்…….

கணித மேதை ராமானுஜமும் நானும் என்ற தலைப்பில் எழுதவேண்டும்a என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதி விட்டார்கள்……

www.ranjaninarayanan.wordpress.com

அவர்களின் ஒவ்வொரு வரியும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நான் பேசிக்கொண்டிருந்ததாகவும் இருந்தது !!!!

என்ன ஆச்சர்யம் இப்பிடிக் கூட ஒருவருடன் ஒருவர் எண்ணங்களில் ஒற்றுப் போக முடியுமா என்ன…

இருந்தாலும், என் கண்ணோட்டத்தில் அதே தலைப்பில் எனது எண்ணங்களை வெளியிட நினைத்தேன்.

ஆக பின் வரும் வரிகளில், எனது எண்ணங்கள் ….

ராமானுஜமும் நானும்……

எனக்கும் அவருக்கும் எட்டாத தூரம்……

அவர் மேதை…………. நான் பேதை…..

இருந்தாலும் அவரை பார்த்தும் அவரை பற்றி படித்தும் வியந்து போயிருக்கிறேன்.

கணக்கு ஏனோ என்னோடு நட்பு பாராட்ட மறுத்தது. ( மத்த பாடங்கள் என்ன வாழ்ந்தது என்று கேட்காதீர்கள் ) !!!!

ஆங்கிலம் மட்டும் பாசம் மேலிட ஈஷிக்கொண்டது……!!!

நான் தமிழை காதலித்தேன்…. !!!

எஞ்சியது, அறிவியல், பூகோளம், சரித்ரம்……அவை தூரத்து பங்காளிகள் போல் பட்டும் படாமலும் உறவு கொண்டன என்னிடம்…!!!!

கையே ஆயுதம் என் அம்மாவுக்கு … டீச்சர் வேறு…வலது கை பழக்கமுள்ளவர் தான் என்றாலும், நான் இடது கை பக்கம் உட்கார்ந்திருந்தாலும், செம்மையாக அடி வாங்குவேன்…அவ்வளவு சமத்து பாடம் படிப்பதில்…..

பாவம் எவ்வளவு பாடு பட்டார்கள் என்னோடு என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.

ரொம்ப எதிர்ப்பார்ப்பு… ஈடு கொடுக்க என்னால் முடிய வில்லை.

நானும் எவ்வளவோ போரடிப் பார்த்தேன்.

statement sumsல் கணக்கு புரியும், போடத் தான் வராது…..

குட்டும், அடியும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் பழகி / மரத்து போனது….

அப்பா மட்டும், என்னையும் அம்மாவையும் ஒரு சேர சமாளிக்கப் பார்ப்பார்….

கொஞ்சம் கவனிச்சு படி என்று என்னையும்,

போனா போட்டம், அதுக்கு புரியராப்ல கொஞ்சம் மெதுவா சொல்லிக்கொடு என்று அம்மாவையும் சமாதானப் படுத்துவார்….

திக்கித் தடுமாறி, பத்தாவது …………………….fail ஆனேன்… ஆனால் கணக்கில் இல்லை.. அறிவியலில்….. ( கூத்து தானே….)!!!

சீ…. வெக்கமாயில்லை ? என்று கேட்கிறீர்களா …?

“இல்லை ” என்று பளிச்சென்று சொல்வேன்….

என் வெட்கப்பட வேண்டும்….

வாழ்க்கை ஒன்றும் அன்று முடிந்து விட வில்லையே….

அது ஒரு சின்ன சறுக்கல் …. அவ்வளவு தான்…

சறுக்கினால் என்ன உயிரா போய் விடும் ?

திரும்ப எழுந்தால் போச்சு….

சிம்பிள் ……

அப்படித்தான் நானும் எழுந்தேன் …வெறியுடன் படித்தேன்… ஒரு வருஷம் போனது போனது தான் ….ஆனால் முழு மூச்சுடன் படித்து 70% வாங்கினேன் அறிவியலில்…..

11வதில் அறிவியல் பாடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என் பள்ளியில்…..

‘அடக் கடவுளே, ஏதோ மார்க் வாங்கி விட்டேன் என்பதற்காக அறிவியலை தொடரச் சொல்கிறார்களே ” என்ற கவலை…

வேண்டவே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு commerce பக்கம் வந்தேன்…

அங்கேயும் கணக்கு…..

சரி காசிக்கு போனாலும் , பாவம் விடாதா…. என்னவோ சொல்வார்களே… அதை போல், என்னை கணக்கு அனகோண்டா பாம்பு போல் சுற்றி அழுத்தியது……

12இல் பொது பரிட்சையின் போது கண்ணீர் மல்க எழுதிக்கொண்டிருந்தேன்…….

கணக்குக்கு பிரியா விடை கொடுக்கும் தருணம் அல்ல….

ஒரு மண்ணும் தெரியவில்லை …அதனால்…..

எனக்கு அன்று வந்த மேற்பார்வையாளர் கண்களில் பரிதாபம் ….

ஏதோ என் அப்பா அம்மா செய்த புண்யம், மூதாதையர்கள் ஆசீர்வாதம், 72 மார்க் வாங்கி தப்பித்தேன்……70 பாஸ் மார்க்…..

அன்று போட்டேன் ஒரு முழுக்கு…….

பின் ஆங்கில இலக்கியம்…..முடித்து, கழுத்தை என்னவருக்கு நீட்டினால்….தெரிந்த, கணக்கு புலிக்கு நீட்டியிருக்கிறேன் கழுத்தை என்று…..

வேண்டாத தெய்வமில்லை….XX XY க்ரோமொசோன்கள் நல்ல படியாக வந்து, என் சந்ததிகள் கணக்கில் புலியாகவும், சிறுத்தயாகவும், இருக்க வேண்டுமே என்று….

என்னவரோ வாயாலேயே பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய கணக்கெல்லாம் நொடியில் போடுவார்… வாய் பொளந்து கொண்டு பார்ப்பேன்.

ரசிப்பது தப்பில்லையே….எனக்கு நல்ல ரசனையுண்டு….!!!!!

இன்று வரை…எந்த சின்ன கணக்கு போட வேண்டும் என்றாலும், போட்டு விட்டு….’ சரிதானே ‘ என்று என்னவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கி கொள்கிறேன்…

மளிகை சாமான் வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும், கரெக்டாக சில்லறை வாங்கி வந்துவிடுவேன்…..

அப்பா என்ன ஒரு மேதை என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது….கணக்கு இல்லேனா வாழ்க்கை இல்லை என்று சொல்வது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது….

என் செல்வங்களில் ஒன்று கணக்கில் என்னை கொண்ட போது , உணர்ந்து, அவளுக்கு உற்சாகம் அளித்து, கணக்கு இல்லாத க்ரூப் எடுத்து படிக்க வைத்து,

சில பல ஏசல்களுக்கு பாத்திரமாகி …..உன்னைபோலவே அவளையும் ஆக்காதே…. என்று கூரினவர்களுக்கு மத்தியில்,

அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தோன்ற…அவளுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்துவிட்டேன்….

ஒரு கஷ்டமும் இல்லாமல் படிக்கிறாள் ….

என்னமோ …. யோசித்துப்பார்த்தால், கணக்கோ ஆங்கிலமோ அறிவியலோ….. எதில் புலியோ, பூனையோ… நல்ல மனிதனாக இருக்க வேண்டும் முதலில்….

தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )

எத்தனை முறை விழுகிறோம் என்பது பெரிதல்ல, விழுந்த பின் எழுந்திருக்கிரோமா என்பது தான் கேள்வி…

இவை எல்லாவற்றையும் தாண்டி நமக்கென்று ஒரு வாழ்க்கை கடவுள் வடிவமைத்துள்ளான் என்ற நம்பிக்கை வேண்டும்…..

நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….

ராமானுஜருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்……..

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்…..

Image‘ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்…….” என்று நண்பர் ஒருவரது கைத் தொலைபேசியில் ஒலிக்கும் அவரை கூப்பிடும் போது . சட்டென்று நம் மனதில், ஒட்டிக் கொள்ளும் புத்துணர்ச்சி…. 

“அட, ஆமாம் . எதுவுமே சாத்தியம் தானே என்று தோன்றும்…. “
அந்த பாடல் வரிகளுக்கு அவ்வளவு கனம்
 
நம் வீட்டு பில்டர் காப்பியை விட பெரிசா ஒண்ணும்  நன்றாக இல்லை என்று என் உறவுக்காரர் ஒருவர் சொல்வார்…
 
இருக்கலாம் ஆனால், இன்றைய தலைமுறை, விரும்பிச் செல்லும் இடமாகவும், விரும்பிக் அருந்துவதுமாக இருக்கிறது காப்பி.
அதான் , Cafe Coffee Day ..
எனக்கும் பிடிக்கும் அங்கே போய்  காப்பி குடிப்பதற்கு…..
நல்ல சூழ்நிலை. நுரை பொங்கும் cappuccino  காப்பி…நம்மோடு அதை அனுபவிக்கும் நண்பர்கள், உறவுகள்…. 
மனதுக்கு நல்ல புத்துணர்ச்சி தருகிறது…. 
எல்லாவற்றையும், சீ இது சரியில்லை, இது மோசம், என்ன வேண்டியிருக்கு என்கிற மனோபாவத்துடன் பார்க்காமல்….
ஒரு தடவை ருசித்து பார்ப்போமே, ரசித்து பார்ப்போமே, என்கிற கண்ணோட்டம் வேண்டும் வாழ்க்கையில். 
 
அப்பிடித்தான், அவசரமாக, ஒரு” டேக் அவே ” ( முன்னாடி இது ‘பார்சல் ” ) காப்பி ஒன்று வாங்கப் போனேன் இருதினங்களுக்கு முன்.
CCD யின் கதவை திறந்துக் கொண்டு சென்று, கவுன்டரில் இருந்த பையனிடம், 
“ஒன் கப்புச்சினோ ரெகுலர் டேக் அவே என்றேன். “
 
” கீழே பாருங்கள் என்று கையை காட்டினான்….”
கீழே மெனு கார்ட் இருந்தது….
” இல்லை வேண்டாம் ” என்று கூறிவிட்டு, என் ஆர்டரை மீண்டும் கூறினேன். 
 சைகையால், தனக்கு காதும் கேட்காது, வாயும் பேசாது என்றான் அந்த பையன். 
எதிர்பாராததால், ஒரே ஒரு க்ஷண நேரம் திகைத்தாலும், என்னை சுதாரித்துக்கொண்டு, 
ஓ  ஓகே , என்று கூரிவிட்டும் மெனு கார்டில், எனக்கு வேண்டியதை சுட்டி காட்டி, சின்ன கப் என்பதை சைகையில் காட்டி, டேக் அவே என்பதையும் சைகையில் காட்டினேன் .
 
ஐந்து நிமிடங்களில் ஆவியுடன் காபி என் கைகளில்…
ஒரு நிமிடம் என்று சைகை செய்த மற்றொருவன், மும் பக்கம் ஓடி வந்து, சக்கரை பொட்டலங்களும், டிஷ்யு பேப்பர், காபியை கலக்குவதற்கு ஒரு சின்ன குச்சியும் எடுத்து கொடுத்தான்…..
 
சாதரனமாக, ஆட்டோ காரர்கள், முகம் சுளிக்காமல், சில்லறை கொடுக்கும்போதும்,
ஹோடேல்களில் செர்வர்கள் நாம் சாப்பிட்ட தட்டை எடுக்கும்போதும், 
பெட்ரோல் பங்க்கில் என் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேன்க் மூடியை திறக்க  உதவும் போதும் 
ஏன், நான் ரோடை கிராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி ‘போங்கள் ‘ என்று சைகை செய்யும் முகம் தெரியாத மனிதருக்கும். கூட நன்றி சொல்ல மறக்காதவள், 
இந்த பையனை சும்மா விடுவேனா?
என்னுடைய அடையாள புன்னகை ஒன்றை வீசிவிட்டு…..( அவனுடைய confidence  குடுத்த உற்சாகம் )!
thank you ……… என்று கூறிவிட்டு வெளியே வந்தேன்…..
 
லொட லொட என்று பேசுபவர்கள் மத்தியில் ( பேசுவது பாதிக்கு மேல் அபத்தம், மற்றவர்களின் குறை காணல் , தற்பெருமை, மற்றவரை புண் படுத்துவது )
உயர்ந்து நின்றார்கள் இந்த இருவரும் .
அவர்களின், தன்னம்பிக்கை என்னை அசத்தியது. 
அவர்களை வேலைக்கு வைத்த  நிறுவனமும் என் பார்வையில் உயர்ந்தது .
சின்னதாக ஒரு பின்னடைவு வந்தாலே, கப்பல் மூழ்கினாற்போல் துவண்டு விடுபவர்கள், இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 
வாழ்க்கை வாழ்வதற்கே.
யாருக்கும் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை…கிடைத்தாலும் அதன் மதிப்பு நமக்கு தெரிய போவதில்லை…. 
போராட்டங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை..
எதி நீச்சல் போடுங்கள், 
கரடு முரடான பாதைக்கு பிறகு concrete போட்ட ரோடு வரும் என்று நம்புங்கள்…..
நம்பிக்கை தான் எல்லாம் ( நகைக் கடை விளம்பரம் அல்ல !!!!)
 
 
நிலா பேசுவதில்லை 
அது ஒரு குறை இல்லையே….
குறை அழகென்று கொண்டால் 
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே……
 
கவிஞர் வைரமுத்துவின் நெஞ்சை மிக மிக ஆழமாக தொட்ட, கண்களில் நீர் முட்டச் செய்த, ஆத்மா திருப்தி அளித்த…..வரிகள்…..
 

மூட் நம்மை முடக்கக்கூடாது ..

sorrow faceஎவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு  நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,

படித்ததும், கேட்டதும், உணர்ந்ததும், கடை பிடிக்க முயன்றதும் நம் கைவிட்டு போகிறது…
நமக்கு வேண்டப்பட்ட ஒருவர், நாம் நன்றாக அறிந்தவர், ஒரு வார்த்தை சொல்லி விட்டால், நாம் ஏன் இவ்வளவு பரிதவித்து போகிறோம்?
உடனே கோபமும், அழுகையும் பொத்துக்கொண்டு வருகிறதே ?
பழசையெல்லாம் கிண்டி கிளறி எடுக்கிறது மனசு
அந்த குப்பயோடேயே வருகிறது, சுய பச்சாதாபம் ….
‘நானாக்கம் இதெல்லாம் தாங்கின்டேன் ” என்று புலம்புகிறது மனசு….
“அதனாலென்ன, இன்று எல்லாம் நன்றாகத்  தானே இருக்கு”  என்று புத்தி ஒரு பக்கம் சமாதானம் கூறினாலும்,
” அதெப்படி, அப்பிடி ஒரு வார்த்தை என்னை பார்த்து சொல்லி விட்டார்கள் ” என்று திரும்ப திரும்ப வேதனையை பறைசாற்றுவதற்கு அங்கீகாரம் தேடுகிறது மனசு….
ஒரு நாள் முழுவதும் மூஞ்சி பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
எதிலும் ஈடுபட மறுக்கிறது
வருத்தப்படுவதையும், மூஞ்சி அறுந்து தொங்குவதையும் நியாயப்படுத்த தேடுகிறது மனசு….( அதில் ஒரு தனீ  சுகம் அந்த வேளையில் )
உண்டா இல்லையா ? மறைக்காமல் சொல்லுங்கள் !!!!!
வாய் விட்டு அழுதாலும், நண்பர்களை அழைத்து தொலை பேசியில் புலம்பித்  தீர்த்தாலும் அடங்குவதில்லை…
இப்போதெல்லாம் முகநூலில் ( facebook ) ஸ்டேடஸ் அப்டேட் (status update ) செய்தால் கூட தணிவதில்லை !!!!!
அதற்க்கான நேரம் குறைந்தது ( நம் பிடியில் விஷயம் இருந்தால் ) 24 மணி நேரம்…..
புயல் சின்ன அறிகுறி போல் …………..
சூறாவளியாக வீசிவிட்டு மெது மெதுவே சகஜ நிலைக்கு திரும்புகிறது.
நாம் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் கூட நம்முடன் தங்கிவிட்டு போக தயார்தான்…..
ஆனால் அடித்து விரட்டவிட்டால், ஈஷிக்கொண்டு இருந்துவிடும்
அப்பறம் நாம் முன்னேறுவது எங்கிருந்து ???

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

டையின்  சிறப்பு …ஓஹோ…!!!
நம்மில் பலர் ” டை”  போடுவதால் தான் கூந்தலின் நிறத்தை அப்பிடியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
நரை முடி வயது முதிர்வதையும், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தையும் குறிக்கும் என்ற காலம் போய் , முதிர்வதை, விரும்பாதவர்கள்/ ரசிக்காதவர்கள் அதற்க்கு கலர் அடிக்க துவங்கினார்கள்.
இளநரை ஒரு பெரும் பிரெச்சனை. இன்றைய டென்ஷன் கலந்த வாழ்க்கையில்,
( வாழ்வின் பெரும் பகுதி டென்ஷனில் தான் செலவழிகிறது ..நர்செரி  படிக்கும் குழந்தைக்கு கூட டென்ஷன் தான்.)
இளநரையை  மறைக்க தேவைபடுகிறது ‘டை’.
எது எப்படியோ,
எனக்கு எதற்கு இதெல்லாம்? என்றோ ஒரு நாள் நான் இப்படித் தானே தோற்றமளிக்கப்  போகிறேன் என்று சில மாதங்கள் டை பக்கமே போகாமல் இருந்தேன்.
என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் !! என்று கணவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேசினேன் !
முதலில் என்னை நானே ஏற்றுக்கொண்டேனா என்றால் 80% ஒப்புக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
நீண்ட முடியும், இருபது நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டி இருப்பதும் அலுப்பை தந்தது…..
இடையிடையே, தலைமுடிக்கு டை போடாததால் இந்த உடை அணியமுடியவில்லையே ….இந்த நகை, ஜிமிக்கி இவையெல்லாம் அணிய முடியவில்லையே என்று சில பல தடைகள் வந்தது உண்மைதான்.
காதில் வைரத்தோடும் மூக்கில் வைர மூக்குத்தியும் நிரந்தரமாகிப் போயின …அழகாகத்தான் இருந்தது… அனால் ஜிமிக்கி அணிந்தால் பாந்தமாக இல்லாதது ஒரு குறை.. அவ்வளவு பிடிக்கும் ஜிமிக்கி…
” நீ உன் முடியை சர்ப் எக்ஸ்செலில்  தோய்த்தாயா ” என்ற ஒருவரது நாகரீகமில்லாத பேச்சு மனதை காயப்படுத்தியது.
இரண்டு நாட்கள் புலம்பிவிட்டு புறக்கணித்தேன் .
என்னைப்  பார்த்து பேசாமல், என் மண்டையையே பார்த்து பேசும் என்னவர் மேல் கோபம் கோபமாக வந்தது .
பார்த்தவுடன், ‘அய்யய்யோ , என்னாச்சு, டை போட நேரமில்லையா ‘ என்று கேட்பவர்களுக்கு, மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தேன்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விமர்சனம் தோழி ஒருத்தியிடமிருந்து,…
‘ வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா ‘ என்றாள்
‘ ஏன் ஒன்றும்  இல்லையே   நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்றேன்…’
‘இல்லை …..டை போடுவதை கூட விட்டுவிட்டாயே என்று கேட்டேன் ‘ என்றாளே  பார்க்கலாம்…..!!!!!!
தூக்கி வாரி போட்டது எனக்கு… எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள் இந்த மனிதர்கள்….
சிலருக்கு விரிவாகவும்
சிலருக்கு சுருக்கமாகவும் ,
சிலருக்கு புன்னகைத்தும்
சமாளிதுக்கொண்டிருந்தேன்,
முதலிலிருந்தே என் குழந்தைகளின், ஏக போக, ஆதரவு….
‘ நீ இப்பிடித்தான் மா நன்னா இருக்கே ‘ என்று…
அனால் ஒவ்வொரு முறை, யாரேனும் விமர்சிக்கும் போது  வந்து அவர்களிடம் கூறக் கூற அவர்களுக்கு ஒரு சமயத்தில், சலிப்பாக இருந்தது….
‘ உனக்கு வேனும்னா  கலர் பண்ணிக்கோ மா ‘ என்று கூறத் தொடங்கினார்கள்….
மூன்று மாதங்கள் தாக்கு பிடித்தேன் …..அதற்க்கு மேல் முடியவில்லை…
சரி திரும்பவும் போட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்து, மறுபடியும் துடங்கினேன் ..
ஆஹா….. என்ன ஒரு மாற்றம்…
எனக்கே நான் ப்ரெஷ்ஷாக  இருப்பது தெரிந்தது….( மறுபடியும் ஜிமிக்கி ) !!!!!
என்னவர் ஒரு பெரிய பெருமூச்சு விட்டார் …… ஒரு ஐம்பது வயசு வரைக்கும் போட்டுக்கோ ….அப்பறம் பாக்கலாம்…..!!!! ( இதெப்படி இருக்கு ….)
வெளியே இறங்கினால், நண்பர்களின் கண்களில் நிம்மதி….
பக்குவம் என்பது அவரவர் மனது சம்பந்தப்பட்ட விஷயம்
சரி, நாப்பத்தி மூணு வயசில், தொண்ணூறு வயது தோற்றமளிக்காமல் இருக்கலாமே என்று, தொடர்ந்து கலர் செய்ய தொடங்கிவிட்டேன்…..
மனப்பக்குவம் தொண்னூறு போல் உள்ளது என்ற நிம்மதியில் !!!!!!

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்…ஆராயக்கூடாது !!!!

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தஞ்சாவூர் என்பதால் காவிரி தண்ணீர் என் நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருப்பது உண்மை !!!

என் அம்மாவும் பேச்சுக்கு பேச்சு பழமொழி சொல்வாள்…. (சிலர் இவற்றை … ஏதோ ஒரு வசனம் சொல்லுவாளே …….. என்று சொல்லி ஆரம்பிப்பதும் உண்டு….)

என் மாமனாரோ கேட்கவே வேண்டாம்…. சில நேரங்களில் பழமொழி தான் பேச்சே……

அப்பறம் எனக்கேன் தொற்றிக்கொள்ளாது ?

நாளடைவில்,

‘அது என்னது, நீங்க என்னவோ ஒரு பழமொழி சொல்லுவேளே “….. என்று என் தோழிகள் கூட என்னிடம் குறிப்பிடும் நிலை வந்து விட்டது ….பரவாயில்லை அதனாலென்ன ……

என்னை யார் பாராட்டினாலும் நான் தப்பாகவே நினைப்பதில்லை…..என் தோழிகள், உறவுக்காரர்கள், சொந்த பந்தங்கள் ….யாரோ வாசானுக்கு போச்சான் மதனிக்கு உடபொரந்தான் நெல்லுகுத்துகாரிக்கு நேர் உடபொரந்தான் உட்பட ……………

காலையில் எழுந்து குளித்து வாசலில் கோலம் இட்டு, பால் காய்ச்சி, டிகாஷன் போட்டு இறக்கி, இதற்கிடையில் பெருமாள் சந்நிதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி பூக்கள் சார்த்திவிட்டு, வாய் சுலோகம் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு பக்கம் பாஜி ( சப்ஜி) செய்து, சப்பாத்திகள் போட்டு சுட்டு எடுத்து, டப்பா கட்டி விட்டு திரும்பிப்பார்க்கும் பொது,

எருமைமாடு கன்னுபோட்ட இடமாட்டம் இல்லாமல் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல வந்தேன்…… !!!!!!!!!!!!!!!!!!!!!

என் காரியத்தில் அப்பிடி ஒரு நேர்த்தி…..!!!

பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு கிளம்பி போன பிறகு, அவர்கள் ரூமில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற மாமனார் ……

சரச்ச எடத்துல கத்தியும்  அறுத்தஎடத்துல அருவாளுமாகெடக்கு என்று சொல்லியபடி குளிக்க போனார்.

கேட்டுக்கொண்டு வந்த நான்

திருப்பதிஅம்பட்டன்போல, கை காரியத்தை அப்பிடியே அம்போ என்று போட்டுவிட்டு ரூமை சரி செய்ய தொடங்கினேன் ….

வேலைக்காரி வரும்முன் மேலே எடுத்து வைக்க வேண்டும்….இல்லையென்றால் அவள் வேலையில் டிமிக்கி கொடுப்பாள்…..

மரமேர்றவன்  குண்டியை  எவ்வளவு  தூரம்தான்  தாங்கமுடியும் (sorry for using unparliamentary words!!! ) என்று சின்னதாய் ஒரு சலிப்புடன், எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் தங்கள் சாமான்களை ஏன் சரியாக வைக்க மறுக்கிறார்கள் …………………….

என்ன செய்வது வீட்டில் பொருட்கள் இறைந்து கிடப்பதற்கு பிள்ளளைகள் மட்டு காரணம் என்று சொல்ல முடியாது . பார்பதெல்லாம் வாங்கி விடுகிறோம். இதில் சாமான்கள் சேர்பதில் பெண்களின் பங்கு சற்று அதிகம் தான்

என் வீட்டில் 2 பெண் பிள்ளைகள், நான் என் மாமியார்…..( மாமியாரின் சாமான்கள் எங்கும் இறைந்து கிடைக்காது என்பது வேறு விஷயம்.) இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அறுக்கமாட்டாத  அம்பட்டனுக்கு  அறுவத்தெட்டு  அருவாளும்  கத்தியுமாம் என்பது போல, வீட்டில் பரவலாக, லிப்ஸ்டிக், நைல் பாலிஷ் கிளிப், ரப்பர் பேண்ட், காது தோடுகள், கண் மை, என்று பெண்மையான (!!!!) வீடாக தோற்றமளிக்கும். இது உங்கள் வீட்டு கதையும் தானே……

என்னமோ ……

பொறந்தாது  பெருமையை  ஒடபொராந்தான்கிட்ட  பீத்திண்டாப்ல ….

உங்களிடம் கூறுகிறேன்……

எல்லாவற்றையும் எடுத்து நேராக்கி விட்டு திரும்பினால், ரூம் படு சுத்தமாக இருந்தது……

ஆம்படையான்  அடிச்சாலும்  அடிச்சான்  கண்ணுல  புளிச்சபோச்சுன மாதிரி…….ரூம் சுத்தமானதை எண்ணி திருப்தி அடைந்தேன் …..

சாயந்திரம் பெண்களிடம் கூறினால்,

அம்மா நீ ஒன்னு பண்ணு….

ஒரு டைம் டேபிள் போட்டுக்கோ ,

உனக்கு சமைக்கணும் வெளி வேலையும் பாக்கணும்

க்ரோஷா போடணும்…..

Facebook பாக்கணும் ……

Blog எழுதணும் ….

….ஹ்ம்ம் …….பத்துபுள்ள  பெத்தவள பார்த்து தலைச்சன்பிள்ளைக்காரி சொன்னாளாம் ,

முக்கிபெருடின்னு “……………..

என்பது போல் இருந்தது என் கதை ……!!!!!!!!!!!!!!!!

இதனிடையில் என்னவர் ஆபீசிலிரிந்து வந்தவர்,

கெடக்குறதெல்லாம்  கெடக்கறது, கெழவியை தூக்கி  மணைலவைங்க்ராப்ல ……

என்னை துரித படுத்தி, ஒரு கல்யாண வரவேற்ப்புக்கு போக தயராகச்சொன்னார் .

மடமடவென்று தயாரானேன் …..ஏற்க்கனவே, மணி 7.45….இன்னும் 45 நிமிடங்களாவது ஆகும் போய் சேர …நேரத்துக்கு போகவில்லை என்றால்

ஆடிகழிஞ்ச  அன்ஜான்னாள்   கோழி  அடிச்சு  கும்பிட்டானாம் என்று ஆகிவிடும் …..

அனு ……………..ரெடியா ……………..என்று என்னவர் குரலும்,

______________சிங்காரிசிக்கர்துக்குள்ளே  பட்டணம்  கொள்ளைபோய்டும் என்று என் (வேற யாரு ???) என் மாமனார் குரலும் கேட்டுக்கொண்டிருந்தது !!!!!!!!!!!!!!!!!

இங்கிலீஷ் விங்க்லிஷ் !!!!!!!

சிறுமியாக இருக்கும் காலத்திலிருந்தே, இந்த இங்கிலீஷ் மொழி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு…என் தாயரோடு வெளியே செல்லும் போது  அவர்கள் தமிழில் பேசினால்,

“டாக் டு மீ இன் இங்கிலீஷ்,   பீபுள் வில் திங் ஐ டோன்ட் நோ இங்கிலீஷ் ”

என்று சொல்வேனாம்….. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டுமே என்று தோன்ற வில்லை… சிறுமி தானே …..

ஆனால் அந்த ஈர்ப்பு, வளர்ந்து, வளர்ந்து, கொழுந்து விட்டு எரிந்து எனக்குள் ஒரு பெரும் தாகத்தை உண்டு செய்து, என்னை ஆங்கில இலக்கியம் படிக்கச்  செய்தது ……

என்று சொல்ல மாட்டேன் ….காமர்சில் கணக்கு பாடம் இருந்ததாலும், அறிவியலுக்கும் எனக்கு, ஆகவே ஆகாது என்பதாலும் ஆநா ங்கில இலக்கியம் எடுத்து படித்து தேறினேன். !!!!!!!!

ஆனால், நான் உணர்ந்தது என்னவென்றால், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால் எனக்கு பிடித்தது …..அது தான் நிஜம்.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தால், கணவரும் மாமனாரும் மட்டும் ஆங்கிலத்தில் சம்பாஷிக்க தெரிந்தவர்கள்…..[தமிழ் குடும்பத்தில் வாக்கப்பட்டவளுக்கு இது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது…..]!!!!!!

இல்லை தான் அனால் ஏனோ கொஞ்சம் மாதங்களுக்கு இங்கிலீஷ் பேசுகிறவர்கள் யாரும் தென்படாதது ஒரு குறையாகவே இருந்தது ……

பிறகு ஒரு தோழி கிடைத்தாள் ….. போகும் போதும் வரும் போதும், ‘ஹாய் ‘சொல்லி நல்ல நண்பிகள் ஆகிவிட்டோம் …..

இன்று வரை அவளை நான் விடவில்லை !!!!!!

ஒரு நான்கு வருடங்களில், பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில், டீச்சர் வேலையில் சேர்ந்தேன், ….

அதுவும் எல்.கே.ஜி ….டீச்சர். … 52 குழந்தைகள் எடுத்த எடுப்பில்…ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் வெளியே கொட்டும் மழை….[உள்ளேயும் தான்.]

ச்சே ச்சே ……ஏதோ திறந்த வெளி திண்ணை பள்ளிக்கூடம் என்று எண்ணி விடாதீர்கள்……குழந்தைகள்  கண்ணீரை சொன்னேன்….!!!!!!

அழுகை ஓய்ந்து ஒருவழியாக அவர்கள் செட்டில் ஆனதும் A,B,C,Dசொல்லிக்கொடுக்க முற்பட்டேன்…

டேக் அவுட் யுவர் நோடேபூக் ……என்றேன்

எந்த ஒரு reactionம்  இல்லாமல் என்னை பார்த்தார்கள்…..

ச்சே ….சின்ன குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே என் பெருமையை காட்டவேண்டாம் என்று எண்ணி …..

“notebook  நிகாலோ” என்றேன் [இது ஹிந்தியாமா !!!!]

…அப்பவும் அப்படியே பார்த்தார்கள்…..

நான் குழம்பினேன்…..ஐயையோ இப்போது எந்த பாஷையில் பேசுவது??????

ஆபத் பாந்தவனாக ஒரு குழந்தை notebook ????? என்று திரும்ப கூறிற்று …..

அப்பா, ராசா, படையப்பா, அதே தாண்டா  …. என்று எண்ணிய நிமிஷத்தில், கையில் நோட்டை பிடித்துக்கொண்டு,

“வை”என்றது….”. ஆஹா இது வையா “என்று எண்ணி…..

“”வை நிகாலோ “” என்றவுடன் சமர்த்தாக நோட் புக்கை  எடுத்தார்கள்….

அட ராமா  இன்னும் எதனை வார்த்தைகளை வைத்துக்கொண்டு நான் முழிக்க போகிறேனோ என்று எண்ணினேன்…….

சின்ன சின்ன வார்த்தைகளுக்கு கூட ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்க மறுக்கும் அவர்களின் பெற்றோர்களின் தாய் மொழிப்பற்றை என்னவென்று கூறுவது…..!!!!!!!!!!!!!!!!!

நல்ல விழயம் தான் ….தாய் மொழியில் பேசுவதும், தெரிந்திருப்பதும், கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்,….

ஆனால், ஆங்கிலம் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து ……

முட்டி மோதி அவர்கள் என்னிடமிருந்தும் நான் அவர்களிடமிரிந்தும் நிறைய கற்றுக்கொண்டோம்….!!!!!!!!!!!!!!!!!!

இன்று, அந்த குழந்தைகள், படித்து முடித்து, வேலைக்கும் சென்று விட்டார்கள், சிலர் அமெரிக்காவில்……75 சதவிகிதம் பேர் என்னுடன் facebook  தொடர்பில் உள்ளனர்…!!!!!!!!!!!!!!!!!

வேலையே விட்ட பின்பு, வீட்டில் tution  சொல்லிக்கொடுக்கும் பொது வேறு சில அனுபவங்கள் …..

gender  change  சொல்லிக்கொடுக்கும் பொது,

king ————-queen

father ———mother

boy ————–girl

monk —————–?????monkey  என்றான் ஒரு குழந்தை……

மற்றொருவன், wizard  க்கு lizard  பெண் பால் என்றான்…..

awe  எனும் வார்த்தையை ஆவி என்றது இன்னொரு குழந்தை….

இப்படி பல சுவையான அனுபவங்கள்……

தனது தாய் மொழி மீது பற்றும் விசுவாசமும் இருப்பதில் தவறில்லை…..

ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலமும் அதே அளவு தேவை படுகிறது ….

எனது தமிழ் இடுகைகளை [posts ] ஆங்கிலத்தில் எழுதுமாறு சில நண்பர்கள் கேட்டார்கள்….அது என் எழுத்தின் ஆழத்தை குறைத்து விடும் எனக்  கூறினேன்……

தமிழுக்கும் அமுதென்று பேர்….. தொலைகாட்சி பெட்டியில் பாட்டு போய்க்கொண்டிருக்கிறது ………

இன்று ஒரு மைல் கல் ……….

இன்று ஒரு மைல் கல்…
பல காலங்கள் கழித்து திரும்பிப்பார்க்கும்போது, உன்னை நினைத்து நீயே பெருமை படும் நாளாக இன்றைய நாள் அமையும்.
நான் எப்பொழுதும் கூறும் வார்த்தையை/தைரியம் ஊட்டும் வாக்கியத்தை கூறினேன், ஏனோ உன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
அனால் அது நான் எதிர்ப்பார்த்ததுதான்…..அதனால், என்னை திடமாக வைத்துக்கொண்டு, உன்னை தேற்றினேன் …..(மற்றும் ஒரு முறை ).
உன் மன உளைச்சல் எனக்கு புரிகிறது உணர முடிகிறது…..
உன் பெயருக்கு பின்னால் நீ சேர்த்துக்கொள்ள போகும் பட்டங்கள் நாளை உன்னை பிரதிபலிக்கும், உன் நிறமோ, உன் கூந்தலோ, உன் பல் வரிசையோ, உன் உடல் பருமனோ, உன் உயரமோ அல்ல……..
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது …….
உன் அன்பு ததும்பும் முகமும், சிரிப்பும், அடுத்தவர் வலி உணரும் குணமும் நீ எடுத்துக்கொண்டுள்ள துறைக்கு மிக முக்கியம்.
தைரியமாக எதிர்கொள் வாழ்க்கையை…….
நான் எப்பொழுதும் கூறுவது போல், யார் எவ்வளவு, தைரியம் கூறினாலும், அதை செயல்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது….
பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்….. எப்பிடி இருந்தாலும் பேசும் இந்த உலகம்….
உன்னை மட்டும் தான் விமர்சிக்கிறார்கள் என்று நினைக்காதே…..
மற்றவர்களின் குறு குறு பார்வை நமக்கு பழகிவிட்டது இப்போது…. (நமக்கு என்று தான் சொல்வேன் ……..அந்த வலியை நானும் ஒவ்வொரு முறையும் அனுபவித்ததனால்)
என் ஜாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பார்கள்…
அவரவரின் நலன் விரும்பியாக நீ பரிந்துரைக்கப்போகும் சத்தான உணவு, அவர்களை மிக விரைவில், நோய்லிரிந்து, நலம் பெறச் செய்து உன்னை வாழ்த்தச் செய்யும் ……..
உன் குடும்பம், உன் நலன் விரும்பிகள்,உன் தோழிகள், அவர்கள் உனக்கு உன் கை தொலை பேசியில் அனுப்பிய வாழ்த்துக்கள், உனக்காக செய்யும் பிரார்த்தனைகள், இவையெல்லாம் வீண் போகாது…..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் இருக்கிறான்,
நம்மை காப்பதை அவனிடம் விட்டபிறகு நமக்கு என்ன வீண் கவலை?