Category Archives: பகுக்கப்படாதது

ஐம்பதிலும் ஆசை வரும் 

ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா …….

சிவாஜி கணேசன் தனக்கே உரிய பாணியில் கே.ஆர் .விஜயா அவர்களுடன் ஆடி பாடி நடித்துக்கொண்டிருந்தார் ….

அட ஆமாம் ஐம்பதில் ஆசை வரத்தான் செய்கிறது….

என்னென்ன  ஆசைகள் ?

ஐம்பதில் வேறென்ன ?

மற்ற தோழிகளுடன் பேசும்போது புலப்பட்டது….

  சமையல் சிம்பிளாக செய்ய வேண்டும்

கோவில்களுக்கு போய்  வரவேண்டும் ( கணவரோடு)

வாரத்தில் ஒரு நாள் …

” எனக்கு இன்னிக்கி  சாப்பாடு கட்ட வேண்டாம்மா ” என்று சொல்கிற நாள் ஒரு சின்ன break !

சுட சுட கரமுர தோசைகள் எல்லோர்க்கும் சுட்டு கொடுத்தபின், நீ உக்காரு நான் போட்டு தரேன் என்று யாராவது சொல்ல வேண்டும்(நான் பாக்கியசாலி…என் 2 மகள்களும் செய்வது இதுதான்)

நம்முடன் பள்ளியில் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் வருடம் ஒரு முறையாவது சந்திப்பது…

நாலு நாள் hotel லில் தங்கி நாலு இடங்கள் பார்ப்பது… ஏன் ஹோட்டல்? 

ஏன் என்றால்… 

எழுந்து காப்பி கூட போட கூடாது,  சாம்பாரா வெத்தல் குழம்பா/ கூட்டா கரியா, / இப்படி எதுவுமே மூளையை கசக்காமல், இருக்க தான் ….

மருந்து சாப்டியா, உனக்கும் சுண்டல் எடுத்து  வைத்துக் கொண்டாயா?  என்னை பார்த்து கொள்வதில் உன்னை கவனித்துக்கொள்ள தவராதே எனும் ஒரு சின்ன வார்த்தை செய்யும் பெரிய ஜாலம்….

மனதில் உள்ளதை வெளியில் வெளிப்படையாக பேசு… மனதில் பூட்டி வைத்து அழுத்திக்கொள்ளதே என்று சொல்லும் பாங்கு..(ஏனோ முக்கால்வாசி ஆண்களுக்கு இது  50 தாண்டியப்பின் தான் உதிக்கிறது)!

நீ பேசு நான் இடைமரிக்காமல் கேட்கிறேன் என்று சொல்வது…

இங்கு தான் என்று இல்லாமல், காலாற நடந்துவிட்டு வரலாம் என்று கூப்பிடுவது…

ஒரு long drive போகலாமா…என்று கேட்பது

இன்னும் எத்தனை எத்தனையோ…எல்லாம் சின்ன ஆசைகள் ஆனால் பெரிய நிறைவுகள்… 

உங்களுக்கு என்ன ஆசை …?

கீழே பதிவு செய்யுங்களேன்…

ஆண்களும் பங்கேற்கலாம்…உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்று எங்களுக்கும் தெரியட்டுமே…

பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..

அவள் ஒரு இல்லத்தரசி. மாலை வேளையில் முகம் கழுவி, தலை சீவி, பொட்டு வைத்து, கடவுள் முன் விளக்கேற்றி வழிபட்டு தன்னை நேர்த்தியாக பராமரித்துக் கொன்டு கணவனுக்காக காத்திருப்பவள்.

மணம் முடித்து வருடங்கள் பல ஆகியும், அவள் இதை பின்பற்றிக்கொன்டிருந்தாள்.

இரவு
கணவன் கைதொலைப்பேசியில் பேசிக்கொன்டே அழைப்பு மணியை அழுத்திய போது, துள்ளி எழுந்து வாயிற் கதவை திறந்தவளை பார்த்து கண் சமிட்டியபடியே உள்ளே நுழைந்தான். அவளுக்கு உள்ளமெல்லாம் பூரிப்பு.

படபடவென்று சாப்பாட்டு தட்டை வைத்து பரிமாறினாள். அவன் சம்பாஷனை முடியாததால் பேசிக்கொன்டே சாப்பிட்டு எழுந்தான்
அவள் மற்ற வேலைகளை முடித்துக் கொன்டு படுக்கை அறைக்கு வந்தாள்.
(தலைப்பில் இருப்பது போல் பாலும் பழமும் கைகளில் ஏந்தாமல்)
குளிர்சாதன பெட்டி இதமாக மெட்டு கட்டிக் கென்டிருந்தது. ஒரு பக்கம் தொலைக்காட்சி பெட்டியில் ஒருவர் அனல் பரக்க விவாதித்துக் கொன்டிருந்தார்.

கணவன்அருகில் வந்து படுத்தாள்.அவளை பார்த்து புன்னகைத்தான் கணவன்.தன் விரல்களால் விளையாடினான்.இடையிடையே பேசினான்.சிரித்தான்நடுவில் முகத்தை துடைத்தான்.ஒரு மணி நேரத்திற்கு பின்பு ……………….தன் விரல்களால் விளையாடி,இடையிடையே பேசிக்கொன்டிருந்த,சிரித்துக் கொன்டிருந்த,ஸ்க்ரீனை துடைத்த”கை தொலைபேசியை”வைத்துவிட்டு திரும்பிய போது அவள் ஒரு மணி நேரம் முன்பே ஆழ்ந்து உறங்கியிருந்தாள்…..மனைவிகளுக்கு இக்காலத்தில் கணவன்களின்கைதொலைபேசிகள் தான் சக்களத்திகள் !!!!!

மாலை சூடும் மண நாள்

image

மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள் ….
இன்று  அன்னாளை 25வது முறையாக கொண்டாடுகிறோம்.
பிறந்த வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்ததை விட 4 வருடங்கள் கூடுதலாக உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்

என்ன தவம் செய்தேனோ….
உன்   ஒரு பாதியாய் வாழ்வதற்கு

பெற்றவனையும், சிற்றையனையும் காப்பேன்
என்னுடன் இருப்பாயா என்றாய்…

என்னை பெற்றவர்களுக்கும் ஆண் பிள்ளை இல்லை
அவர்களை பேண நீ என்னுடன் இரு,
நானும் இருக்கிறேன் என்றேன்

image

உன் வாக்கை நீ நிறைவேற்றிவிட்டாய் …
என்ன புண்யம் செய்தார்களோ உன்னை மருமகனாய்  அடைய

நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் (உன் துணையுடன்)….

image

என் ஆசிகளை மட்டுமே எண்ணிப்  பார்கிறவள் நான்
என் வாழ்வின் ஐந்து ஆசிகள் ….நீயும், என் மகள்களும், அம்மாவும் அப்பாவும்….
ஒரு பதிவில் கூறி விட முடியாது நம் உறவை.
என் மரியதைக்குரியவனே பல தருணங்களில் நீ என் முன் விஸ்வரூபமாய் உயர்ந்திருக்கிறாய்
பல சமயங்களில் உன்  மனதை நானும்
என மனதை நீயும் வேதனை அடைய செய்திருக்கலாம்
ஆனால் அது நல்ல தாம்பத்யத்தின் ஒரு பங்கு

image

கண்ணன் வருவான்

இன்று காலை கை தொலை பேசியில் ஒரு forward .

தோல்வியை கண்டு அஞ்சாதே… எதிர்த்து போராடு..

மிக அழகாக ஆங்கிலத்தில் …எழுதப்படிருந்தது…

தோல்வியை / இழப்பை கண்டு துவண்டு போவது சகஜம்.
அதிலிருந்து மீண்டுவிடுகிரோம் என்பது நிஜம்….

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி தான் வரும் என்று
நான் கூறவில்லை
கண்ணபிரானே கூறியுள்ளார்…
அவருக்கென்ன கூறிவிட்டு போய்விட்டார்…
நாங்கள் தானே அனுபவிக்கிறோம் என்று நீங்கள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது….
அவர் மற்றொன்றையும் கூறினார்…
வெற்றி தோல்வியை
சமமாக பாவிக்கும்படியும் கூறியுள்ளார்.
அது எடுத்த எடுப்பில் வராது..அவ்வளவு சுலபமும் அல்ல ஆனால்
முடியாதது அல்ல.
சின்ன வீழ்ச்சி வந்தால் அதள பாதாளத்தில் போவதும்
சின்ன வெற்றி கண்டால் வானில் பறப்பதும் வேண்டாமே.
வெற்றியும் …அடுத்த வெற்றி வரை தான்
தோல்வியும் அடுத்த தோல்வி வரை தான்
என் தகுதியில் உள்ள செயலை செய்து விட்டு பலன் / விடை தெரியாமல் காத்திருக்க நான் பழகி விட்டேன்.
விடை தெரியாமல் …விடைக்கு பயந்து அல்ல….
எது எனக்கு எது சரியானதோ அதை இறைவன் நடத்திக்கொடுப்பார் என்ற நம்பிக்கை….
அங்கு தான் இருக்கிறது சூட்சமம்

எனது நம்பிக்கை….
இறைவனின் தீர்ப்புகளில்
என் பக்தியில்
என்னை படைத்தவனுக்கு என்னை பாதுக்காக தெரியும் என்பதில்
இன்று எனக்குள்ள

வாழ்வு …எவ்வளவோ பேருக்கு இல்லை
அதனால் புலம்பல் கூடாது என்பதில்
எவ்வளவு முறை சறுக்கினாலும் இறை அருளால் எழுந்துவிடுவேன் என்பதில்
துக்கம் வருத்தம் ஏமாற்றம் எல்லாமே தற்காலிகம் தான் என்கிற நம்பிக்கையில்
இது ஒரு கெட்ட நாள் ….மட்டுமே கெட்ட வாழ்க்கை இல்லை என்ற எண்ணம் மேலோங்குவதில்
மிக மகிழ்ச்சியான தருணங்களும்
கடந்து விடும் …அதாலால் ஆட்டம் போடக்கூடாது என்ற எனது மனப் பக்குவம் எனக்கே என்னிடம் பிடித்த விஷயம்…
என் பக்தி …அது கொடுக்கும் மன சாந்தி …..
நல்லதே நடக்கும்…
சாதகமமில்லாதது நடந்தாலும் அதிலிருந்து மீண்டு விடலாம் என்ற தைரியம்
இடைவிடாது ஜபிக்கும் கிருஷ்ணா நாமம் ….

எங்கோ படித்த வரிகள் கண்ணபிரான் கூறுவதாக………

சத்திய வாக்கு எனக்கு…..

image

ஊன்றி எழ உடலுக்கு கை
மனதுக்கோ நான்

சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா…

அட….இவங்களும் ரமணி சந்திரன் புக் படிக்கறாங்க பாருங்க ….

முகத்தில் பெரிய சிரிப்பு, நிம்மதி ( தமிழ் எழுத்துக்கள் கண்ணில் பட்டதாலும் அதை பிடித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்தும் )..

தேவி …..

இவர் என் சக பயணியாக இரண்டு தினங்களுக்கு முன்னால், என்னுடன் விமானத்தில் பயணம் செய்தவர்.. தேவியை பார்த்தவுடன் எனக்கு பிடித்து போயிற்று. நகர் புரத்தின் தாக்கம் இல்லாத, மரியாதை அறிந்த, வெகுளியான பெண்மணி. சென்னையில் வசிக்கிறார் என்று எண்ணி, கேட்டபொழுது,

இல்லைங்க மேடம் விழிப்புரம் என்றார்…

திருவெண்ணெய் நல்லூர் ….நீங்க இவ்ளோ வருஷமா பாம்பே ல இருக்கறதால உங்களுக்கு இந்த ஊரெலாம் மறந்து போச்சு என்று கூறவும் …நான் சென்னை இருந்திருந்தாலும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றேன்….

பேச்சுக்கு பேச்சு மேடம்…எனக்கு தர்மசங்கடம் ….அனால் ஒரு அரை மணியில் பழகியது எனக்கு…
இரண்டாவது தடவையாக விமான பயணமாம்…முதல் முறை போனது மறந்து .விட்டது.என்றார் வெள்ளந்தியாக..
சூது வாது கபடம் இதெல்லாம் எதுவும் இல்லாமல் தனக்கு தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் நபர்…
கொஞ்சம் விஷயம் தெரிந்தாலே, ஒரே பகட்டாக தன்னை கட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு நடுவில் இப்பிடி ஒருவர்…

ஒரு வார பம்பாய் வாசம்.
தமிழ் மக்கள் கண்ணில் படவில்லையாம், தமிழ் கேட்கவில்லையாம்…நல்ல சாப்பாடு இல்லையாம்…காபி டீ கூட பிடிக்கவில்லயாம்.

பசும் பாலில் போட்ட காபி டீ தான் குடிப்பேன் மேடம்..என்றார்…
சரியாக சாப்பிடாததால் வயிற்று வலி …தெரிந்திருந்தும், சாப்பிட முடியவில்லை அவரால் …
விமானத்தில் உணவு பரிமாற பட்டபோது, அவர்கள் அசைவ உணவு வாங்கிக்கொண்டார்கள். நான் சாப்பிட தொடங்கியும் அவர் சாப்பிடாததால்,
ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டதற்கு….
நான் பக்கத்திலேயே உட்கார்ந்து அசைவம் சாபிட்டால்
உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா ? என்று கேட்டபோது எனக்கு அவர் மேல் மரியாதை கூடி போயிற்று..

வேலைக்கு போகும் இடத்தில் கூட எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டாராம்…
வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளவில்லயாம் …தானே செய்தால் தான் திருப்தி.
உங்கள் மகன்கள் வெளி இடத்தில் வேலைக்கு போனால், அவர்களுடன் இருக்க வேண்டி வந்தால் என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு,
அப்ப பாத்துக்கலாம் மேடம் பதிலாக வந்தது….

தேவை என்ற ஒன்று வராததால், தேவிக்கு இது முடிகிறது…
அவர்கள் ஊரை விட்டு, பழக்க வழக்கங்களை விட்டு, என்று எந்த தேவையும் இதுநாள் வரை இல்லாததால், அவர் தன்னை மாற்றிக்கொள்ள வில்லை.
தேவை என்று வரும் போது அதற்க்கு ஏற்ப ,இசைந்து கொடுத்து, மாறி விடுவது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம்.
மணமாகி கணவன் வீடிற்கு போகின்ற ஒவ்வொரு பெண்ணும் இதை செய்கிறாள்….
ஒரு புறம் பெண் விமானம் ஓட்டுகிறாள் …
ஒரு பெண், எங்க வீட்டு ரசம் தான் சாப்பிடுவேன்,
பசும் பாலும் தயிரும் தான் சாப்பிடுவேன் என்கிறாள்…
சென்னையிலிரிந்து காரில் விழுப்புரம் பயணம்….
வழியில் ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்கள் என்று நான் சொல்ல…

அட, வீட்ல போய் அரிசிய ஒலைல போட்டுட்டு ஒரு குளி குளிச்சிட்டு வந்து ஒரு ரசம் வெச்சு சாப்பிடுவேன் ….அப்ப தான் தூக்கம் வரும் என்றார்….
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா……..

2014 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

Here’s an excerpt:

A San Francisco cable car holds 60 people. This blog was viewed about 560 times in 2014. If it were a cable car, it would take about 9 trips to carry that many people.

Click here to see the complete report.

இணைப்பு

மலையும் எலியும்

மலையும் எலியும்

downloadஒரு நாள் ஒரு பெரிய மலைக்கும் ஒரு சுண்டெலிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது

மலை கூறியது, சீ நீ எவ்வளவு சிறிய உருவம் படைத்தவன். என்று.

அதற்க்கு சுண்டெலி உடனே,

எனக்கு தெரியும், நான் உன்னை போல பெரிய உருவம் கொண்டவன் இல்லை என்று…. ஆனால், நீ என்னை போல் இல்லை….

பெரிதாக இருப்பதனால், எவ்வளவு நன்மைகள் என்று உனக்கு எங்கு தெரிய போகிறது என்றதாம் மலை.
என்னைத் தாண்டிச் செல்லும் காற்றினையும் மேகங்களையும் கூட என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்று மார் தட்டியதாம்.

ஆமாம் ஆமாம் கண்டிப்பாக, என்று ஒத்துக்கொண்டு விட்டு, சுண்டெலி கூறியதாம்,

உன் அடிவாராத்தில், பெரிய பெரிய பொந்துகளை சுரண்டுவதிலிரிந்து ஆனால் நீ என்னை தடுக்கு முடியாது ….என்று கூறி மலையின் அகம்பாவதிர்க்கு வைத்ததாம் ஒரு முற்றுப்புள்ளி…

மேலே உள்ள கதையை கூறி என் இளைய மகள் ஜூனியர் கே ஜி யில் இருக்கும் போது முதல் பரிசு வாங்கினாள் ….
அவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொது vikas story books என்று வேறு வேறு வண்ணங்களில் வரும்… இன்னமும் இருக்கிறது… குழந்தைகள் படிக்கிறார்களா என்று தான் தெரியவில்லை….
அதிலிருந்து, அத்தனை கதைகளும் படித்திருக்கிறார்கள். அதை தவிர, அவர்களின் தாத்தா தினமும் கதை சொல்லித்தான் தூங்க வைப்பார்….அவரின் கதை சொல்லும் திறனே திறன். ஒரே மாதிரி வார்த்தைகள், ஒரே கோர்வை, ….. அது ஒரு கலை … எனக்கு கூட அவர் சொல்லும் குட்டிக் குரங்கு கதை ரொம்ப பிடிக்கும்.

அன்று படித்தது, உள் வாங்கியாது, இன்றும் அவர்களுக்கு உதவுகிறது…. அவர்களை, அவர்களின், உருவ அமைப்பை யாரேனும் குறை கூறினால், இந்த மாதிரி கதை ஞாபகம் வந்து, நல்ல பதில் அடி கொடுக்கிறார்கள்.

மிகச் சமீபமாக நேற்று ஒரு மனிதர், நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்…..பெரியவர்கள், அவர்கள் வயதிற்கு ஏற்ப பேசவில்லை என்றால் இது தான் கதி …..

அந்நாளில் அவர்கள் பார்த்த cartoon கூட, நல்ல விஷயங்களை கற்றுத் தந்தன…. பிங்கு என்ற penguin …. வார்த்தைகளே பேசாது… எல்லாம் செய்கை தான்… ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்… இந்நாளில் உள்ள zoozoo போல….எனக்கு பிங்கு ரொம்ப பிடிக்கும்,… எப்போதாவது போட்டு பாக்க, தனியாக ஒரு சி .டி …வைத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் போலவே, எனது, தோழி, ரஞ்சனி நாராயணனும் பிங்கு பிடிக்கும் என்று எழுதியிருந்தார்.
நல்ல விஷயங்கள் என்றும் மாறாது……

படம்

அந்த 21 நாட்கள்!!!!!!!

என்ன ஒரு அழிச்சாட்டியம்…..

என்னை நானே திட்டிக் கொண்டேன்……

எழுத பிடித்திருக்கிறது, நான் எழுதுவதும் மற்றவர்களுக்கு பிடித்திருக்கிறது, இருந்தும் எழுதுவதில்லை….
இது அழிச்சாட்டியம் தானே. ?

ஓயாமல் என்னை உற்சாகப் படுத்தும் ஒரே ஜீவன் ரஞ்சனி நாராயணன்.!!!!

” எழுதுங்கள் அனு ”

என்று ஒவ்வொரு முறையும் நான் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

நேற்று கூட, வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,
‘ அதிகம் முடியாவிட்டாலும் வாரத்துக்கு ஒரு போஸ்ட் என்று ஆரம்பித்து தொடர்ந்து எழுதுங்கள் ‘ என்றார்.

ஒரு நல்ல ஆசிரியை உந்துதல் இல்லாத மாணவிக்கு உதவுவது போல, என்னை ஊக்குவிதிதார்…

இதற்க்கு மேலும் செய்யாதிருந்தால், மஹா மட்டம் என்று தோன்றியது.

அதன் விளைவு, இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது!!!!!!

அது சரி, ஆனால், நேற்று முழுவதும், ஆராய்ந்து கொண்டிருந்தேன், ஏன் இந்த, இடைவெளி?
ஏன் இந்த உற்சாகம் இல்லாமை?
ஏன் இந்த, discipline இல்லை ?

அதை சொல்லுங்கள், discipline இல்லை …………..
எதை எடுத்தாலும், தொடர்ந்து செய்வதில்லை.
ஏன் இப்படி ஆகிறது…..

consistent ஆகா செய்ய மாட்டேன்கிறாய்……
என்னவரின் புகார் என் மேல்….

ஒரு வாரமாக, எனக்கு நானே போட்டுக்கொண்ட timetable படி, ஒரு விஷயம் நடந்துக் கொண்டிருப்பது நினைவிற்கு வந்தது,

அட,!!!! பரவாயில்லையே, அனுராதா !!! ஒரு வாரம் தாண்டி விட்டதே, …. இன்னும் இரண்டு வாரங்கள் தான் டி செல்லம் என்று என்னை நானே முதுகில் ……….மன்னிக்க தோளில் தட்அதாங்க டிக்கொடுதுக்கொண்டேன்.

அதென்ன இன்னும் இரண்டு வாரம்…. ஆகா மொத்தம் மூன்று வாரம்…

அதாங்க the 21 day challenge

Maltz என்பவற்றின் ஆராய்ச்சியின் படி,நமது மூளைக்கு ஒரு விஷயம் பழக்கமாக பதிவாக 21 நாட்கள் தொடர்ந்து செய்வது அவசியமாகிறது. இன்னும் சொல்லப் போனால், 21 நாட்களுக்கு பின்பு அந்த பழக்கத்தை விடுவது கஷ்டமாம்.

21 நாட்கள், தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு நாள் கூட நடுவில் விடக்கூடாது.

அது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த, பழக்கத்தை, நீங்கள், விடாமல் உங்கள், நடை முறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயமாக கூட இருக்கலாம்.
http://www.pluginid.com/21-day-challenge/

அதற்காக, 21 நாட்கள் தொடர்ந்து எழுதி, உங்களை கொல்லப் போகிறேன் என்று பயந்து விடாதீர்கள். ….

வேறு எந்த பழக்கத்தையாவது கடை பிடிக்கவோ, விட்டு விடவோ, பிரயத்தனப் பட்டுக்கொண்டு இருந்தீர்களானால், இந்த வழியில் செய்யலாம் என்று சொல்ல வந்தேன்.

நன்றி, நண்பர்களே, மீண்டும் அடுத்த வியாழன் ஒரு போஸ்டுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஒரு வேளை உற்சாக மிகுதியில், இடையில் எழுதினால், உங்களின், அருமையான, விலை மதிப்பில்லாத கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்க

பெண்ணின் கண்ணீர்….

எனக்கு மின் அஞ்சலில் வந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிரலாம் என தோன்றியது….

பெண் ஒருத்தி அழுதுக்கொண்டிருந்தாள், அவள் மகன் அவளிடம் கேட்டானாம்,

ஏன் அம்மா அழுகிறாய் என்று…
அவள் சொன்னாளாம்,
நான் ஒரு பெண் என்பதால் என்று.

எனக்கு புரியவில்லையே அம்மா என்றானாம் அவன்,
அந்த தாய் அவனை கட்டிக்கொண்டு கூறினாளாம்

உனக்கு எப்பவுமே புரியாது என்று…

அந்த பையன் அவன் தந்தையிடம் சென்று,

காரணமே இல்லாமல் அம்மா ஏன் அழுகிறாள் என்று கேட்டதற்கு,

எல்லா பெண்களுமே அப்பிடித்தான் காரணமில்லாமல் அழுவார்கள் என்று கூறினாராம் …
தன தேடலுக்கு பதில் தெரியாமலேயே, அவனும் பெரியவன் ஆனான்.

கடைசியில் ஆண்டவனை தொலைபேசியில் அழைத்து, ( அவர் நம்பர் என்ன என்று என்னை கேட்காதீர்கள்)!!!!!
ஏன் கடவுளே இந்த பெண்கள் சுலபமாக அழுதுவிடுகிரர்கள் ?
என்று கேட்டானாம்.

கடவுள் பின் வருமாறு கூறினாராம் …..

பெண்ணை படைத்தபோது, அவளை தனித்தன்மையுடன் படைக்க நினைத்தேன்….

அதனால் தான், அவள் தோள்களை படைத்த போது , அவை உலகத்தின் பாரங்கள் அனைத்தையும் தாங்கும் சக்தி உடையதாக வலுவானதாக அதே சமயம், அவள் தோள்களில் சாய்ந்தால், அது மிக மென்மையானதாக, ஆதரவு அளிப்பதாக இருக்கும்படி செய்தேன்

அவளுக்கு குழந்தை பேரின் போது வலியை தாங்கும் உடலும், பெற்ற பிள்ளை வளர்ந்து உதாசீனப் படுத்தும்போது, அந்த வலியையும் தாங்கும் மன வலிமையையும் கொடுத்தேன்.

தன குடும்பத்தினரின், பசி தூக்கம், உடல் நலக் குறைவு என்று எல்லா தேவைகளையும், அலுக்காமல் சலித்துக்கொள்ளாமல் முகம் கோணாமல், செய்து முடிக்கும் மனோ பலத்தையும் கொடுத்தேன்.

என்னால் முடியாது என்று எளிதில், கை விடாமல் கடைசி வரை முயற்சித்து பார்க்கும், உந்துதலையும் அவளுக்குள் பதித்தேன்.

தான் பெற்ற பிள்ளைகள் தன்னை உதாசீனப்படுத்தினாலும், எல்லா காலங்களிலும் அவர்களுக்கு, தன பாசத்தை மட்டுமே தரும் உன்னதமான குணத்தை படைத்தேன் .

ஒரு நல்ல கணவன் ஒரு போதும் தன் மனைவியை, துன்பப்படுத்த மாட்டான், அனால், சோதிப்பான் என்பதை உணரும் அளவுக்கு, பக்குவத்தை கொடுத்தேன் …..

கடைசியாக, அவளுக்கு கண்ணீர் என்று ஒரு விஷயத்தை கொடுத்தேன்.

அதை எப்போது, எப்படி, எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதை அவளிடமே விட்டு விட்டேன்….
என்று கூறினாராம் …..

பெண்கள் மனதை தொடும் தருணங்களில் எல்லாம் அந்த கண்ணீரை சிந்துகிறார்கள்
ஆத்மாவை தொடும் தருணங்களில் சிந்தப்படும் கண்ணீர், அவளது இயலாமையில் சிந்தும் கண்ணீராக, புரிந்துக்கொள்ள படுகிறது.
அழுமூஞ்சி என்ற பட்டம் வேறு….
பெண் என்பவள் ஒரே சமயத்தில் மென்மையானவளும் வலுவானவளும்

உலக பெண்கள் தின வாழ்த்துக்கள்…..

உலக பெண்கள் தினம்……

ஒரு சிறு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் எழுத வேண்டும் போல் இருந்த போது, என் இந்த நன்னாளில் எழுத கூடாது என்று தோன்றியது.
மகள், சகோதரி, மனைவி, அம்மா, என பல வேடங்கள் …
எல்லாவற்றையும் செவ்வனே செய்யத்தக்க நேர்த்தி,
எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ள கூடிய பரிவு,
நேற்றைய குழந்தை மனப் பெண்ணாகimages இருந்த போதும், இன்றைய நவ நாகரீக நங்கையாக இருக்கும் போதும், தன பொறுப்புணர்ந்து, செயல் படுபவள்,
இல்லறத்தையும் பணி  புரியும் இடத்தையும், மிக அழகாக சமாளிப்பவள்,
தசாவதானி ….
அதற்க்கும் மேலும் கூட செய்ய கூடியவள்
ஒரே சமயத்தில் இளகின மனமுடயவளாகவும், எந்த சந்தர்ப்பத்தையும் தைர்யமாக எதிர் கொள்ள கூடியவளுமாக இருப்பவள்.
தன அன்பால் எல்லோரையும் கட்டிப்போடக் கூடியவள்.
 
நம் ஒவ்வொருவரையும் இந்த உலகுக்கு கொண்டு வந்த நம் தாய்க்கு நன்றி சொல்லி, 
தாய்மையை போற்றுவோம்,
நம் சகோதரிகளையும், மனைவியையும், மருமகளையும், மகளையும் நேசிப்போம்……