Tag Archives: அந்திமக்காலம்

கப்பலா, சிப்பலா?

இது மனதை சற்று கனமாக்க கூடிய பதிவு. அதே சமயம், மனதிற்கு தைரியமும், நம்பிக்கையும் தரும் என்று முயற்சிக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்கிற தத்துவத்தை முன் நிறுத்தியும் எழுதுகிறேன்.

கப்பல், எல்லோர்க்கும் தெரிந்தது. சிப்பல், இன்றைய தலைமுறை அறிவார்களா என்று தெரியவில்லை.

வீடுகளில், அந்த காலத்தில், வெண்கல பானையில் அரிசி வடிக்கும் போது, அதன் மேல் மூடவும், சிறிது சிறிதாக எடுத்து பரிமாறவும், இந்த சிப்பல் என்ற தட்டு உபயோகித்தார்கள். ஒரே தட்டில், ஒரு பக்கம் ஓட்டைகள் இருக்கும், ஒரு பக்கம் இருக்காது. பொங்கிய சாதத்தில் இருக்கும் அதிகப்படி கஞ்சியை இந்த ஓட்டைகள் வழியாக வடித்தார்கள். சரி இப்போது சிப்பல் என்றால் என்ன அதில் கொஞ்சம் தான் கொள்ளும் என்று தெரிந்தது.

சமீபத்தில், தோழி சாந்தி ராமச்சந்திரன் (சாந்த்ராம் என்று இன்ஸ்டா கிராம் குடும்பத்தில் பிரபலமானவர்) அவர்களின் தம்பி இறைவனடி சேர்ந்தார். புற்றுநோயுடன் போராடி, தன்னால் இயன்றவரை எதிர்த்து இறுதியில் தளர்ந்தார். அன்னாருக்கு எனது நமஸ்காரங்கள்.

Buddy , my brother lost his battle against cancer என்று சாந்தியிடமிருந்து ஒரு நாள் எனக்கு செய்தி. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று சொல்லிவிட்டு, அவரை இரண்டு வாரங்கள் கழித்து நேற்று தொலைபேசியில் அழைத்தேன். அரை மணி பேச்சு, இருவருக்குமே ஆசுவாசத்தை கொடுத்தது. ஒரு அக்காவாக, அவர் வருத்தம், அவரின் வேதனை என்னை உலுக்கியது. அவர் பெற்றோரை நினைத்து எனக்கு, மிக அதிக வேதனையாக இருந்தது. புத்ர சோகம் கொடுமையிலும் கொடுமை. தொண்ணூற்றி மூன்று வயது தந்தை பார்க்க வேண்டியது இல்லை தன் மகனின் மரணம். என் அம்மம்மா, இறந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நூற்றி மூன்று வயது வாழ்ந்தவர்.

தன் கணவரின் மரணம்,

தன் தலைச்சன் மகனின் மரணம்,

தன் இரு மாப்பிள்ளைகளின் மரணம்,

தன் தலைச்சன் மகளின் மரணம், இப்பிடி ஐந்து மரணங்கள் பார்த்தவர்.

ஆனால், நான் ஏன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டதே இல்லை. அது அவர்கள் கர்மா, அதை பார்க்க வேண்டியது என் கர்மா என்ற கண்ணோட்டம்.

நான் அம்மமாவிடம் கற்ற மிக முக்கியமான வாழக்கை பாடம்.

இது கலி காலம் மா, கனியிருக்க காய் உதிரும் என்பார் மாமனார். கனிந்த, முதிர்ந்த, பெரியோர்கள் இருக்கும் போது, பிஞ்சு காய்களான இளம் வயதினர் மரித்தல்.

சாந்திக்கு ஆறுதல் கூறும் போது, என் மாமனார் இச்சந்தர்பங்களில், கூறும் வார்த்தைகள், வழக்கு சொற்கள் கூறினேன்.

ஐயோ ஐயோ…இன்னார் இள வயதில் மரித்தார் என்று நான் அனத்தும் போது,

என்னம்மா பண்ணுவது, சிலர் கப்பலில் கட்டிக் கொண்டு வருவார்கள், சிலர் சிப்பலில் கட்டிக்கொண்டு வருவார்கள். யாருடையது எப்போது தீருகிறதோ அப்போது கிளம்ப வேண்டியது தான். கட்டிக்கொண்டு வருவது என்று குறிப்பிடுவது நம் கர்மா என்று கொள்ளலாம். கப்பல் அளவு தொலைக்க வேண்டிய கர்மாக்களை தொலைத்தால் தானே, அடுத்த கட்டம்.கொண்டு வந்தது தீரும் வரை, இருந்து/ வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒரு வேளை, கொஞ்சம் தான் கழிக்க வேண்டியதிருந்தால், வந்தான் வென்றான் சென்றான் என்று துரிதமாக கிளம்பி விடலாம். இல்லையென்றால் என் அம்மம்மா போல, கண்டு, முதிர்ந்து, அனுபவங்களை ஏற்று, அதை என் போன்ற பேத்திகளுக்கு, கற்பித்து, பின் விடைபெறலாம்.

எது எப்படியோ, புறப்பும் இறப்பும் இன்றும் ஒரு புதிர். அதற்கு விடை கிடைத்து விட்டால், நாம் கடவுள். காலம் நம் கையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

சாந்த்ராம் இப்போது இடும் பதிவுகளில், #thistooshallpass. அது தான் நிஜம். எவ்வளவு அழுது புரண்டாலும், அடுத்த வேளை பொழுது விடியும், நாக்கு காப்பியை தேடும், பசி எட்டிப் பார்க்கும், மௌனம் கலையும், சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை மறுபடியும் அமையும். எதுவும் எதற்காகவும் நிற்காது.

என் அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன், ஒரே மகளான நான், என் அம்மாவின் தோளோடு தோள் நின்று, சமாளித்தேன். ஆனால், இரவில் அழுது மறுகி, அப்பாவின் மூச்சு சீராக உள்ளதா என்று, அருகில் சென்று பார்ப்பேன். செல்ல அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை எப்பிடி கொண்டு செல்வது? சாத்தியமே இல்லையே என்று அன்று நினைத்தேன். ஆனால், அப்பா இறந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டன. அவர் இறந்த பதின்மூன்றாவது நாள் அம்மாவை சென்னையில் விட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். எது நின்றது?உப்பும் தண்ணியும் ஊற ஊற எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்ன அம்மாவை தனியாக விட்டுவிட்டு போகும் போது மனது கனத்தது.

வந்த ராஜுவும், ராமசாமியும் (சாந்தியின் தம்பியும், என் அப்பாவும்) தங்கிவிட்டுருந்தால், நமக்கு ஆனந்தமே. ஆனால் இல்லையே.. அது நம் முடிவு இல்லையே. இனி அவர்களின் நினைவும், வாழ்க்கையை எப்பிடி எதிர் கொண்டார்கள், இருவரும் புற்று நோயை எப்பிடி எதிர்த்து போராடினார்கள் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும்.

கவிஞர் சொன்னது போல

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் எது…

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்,

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்.

சின்ன தோல்விகளுக்கெல்லாம், துவண்டு போவது நம்மை எங்குமே இட்டு செல்லாது. தோல்வி என்ற வார்த்தையை அகற்றி விட்டு, அது ஒரு பாடம் என பார்க்க பழகுங்கள்.

தளராதீர்கள் நண்பர்களே, இதுவும் கடந்து போகும்.

இந்த தெரபி தேவைதானா ?????

இன்று காலை செய்தித்  தாளில் படித்த ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.

யுக்ரேன் நாட்டில் ஒருவர், ‘ சவப் பெட்டி தெரபி ‘ தருகிறாராம்…
உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது.!!!!
உயிருடன் இருக்கும் போதே சவப் பெட்டியில் படுக்க வேண்டும் என்றால் எப்பிடி இருக்கும் ?நினைத்து பாருங்கள். !!
அச்சமாகவும், அச்சான்யமாகவும்  இருக்கும் !!!!
ஆனால் யோசித்து பார்த்ததில், அட இது நம்மளை எவ்வளவு மேம்படுத்தும் என்று தோன்றியது.
நம் மதத்தில், நாம் நெற்றிக்க்கிட்டுக்கொள்ளும் பழக்கம் அதற்க்கு தான்…சாம்பலாகிய  விபூதியை பூசும் போது, உன் உடம்பும் ஒரு நாள் சம்பலாகப்போகிறது பார்த்து நடந்துகொள் என்று நினைவூற்றிக்கொள்வதர்க்கு …..
திருமான் காப்பும் அதே தத்துவத்தை தான்  கூறுகிறது…நீ மண்ணிலிரிந்து வந்தாய் மீண்டும் மண்ணிற்கு போவாய்…. என்று…
ஆனால் இன்று நெற்றிக்கு இட்டுக்கொள்வதும் குறைந்து விட்டது, அது கற்று கொடுக்கும் பாடமும் மறந்து விட்டது…
மண்ணின் மீது மனிதனுக்காசை 
மனிதன் மீது மண்ணுக்காசை 
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது 
இதை மனம்தான் உணர மறுக்கிறது …..
 
என்ன ஆழ்ந்த அர்த்தபூர்வமான வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்களது…!!!!!!
நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததை விட்டுவிட்டால் இந்த மாதிரி தெரபியை தேடி ஓடலாம்…
நினைத்து பாருங்களேன்….
ஒரு பதினைந்து நிமிடம் படுக்க வேண்டுமாம் அந்த பெட்டியில்….
மூடியை திறந்து வைத்துக்கொள்வதும், மூடி வைத்துக்கொள்வதும் நமக்கு ‘சாய்ஸ் ‘ !!!!
அடா அடா என்ன ஒரு சாய்ஸ் !!!!
அந்த பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கைக்கு தயாராகி போகிறார்களாம் மனிதர்கள்….
அந்த நேரம் பெட்டியில் இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் தோன்றும்….
வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம் …..
எவ்வளவு செய்ய வேண்டி உள்ளது …நாம் காலத்தை எப்படி விரயம்  செய்கிறோம்
ஏன் பந்துக்களுடம் சண்டை போடுகிறோம்….
ஏன் மற்றவர் மனது புண் படும்படி நடக்கிறோம் ……….
ஏன் உதவி செய்ய யோசிக்கிறோம் ………
ஏன் சின்ன விஷயங்களை ஊதி ஊதி (பலூன் வியாபாரி போல் ) பெரிதாக்கிக் கொள்கிறோம்…..
ஏன் நமக்கு கிடைத்த /நடந்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு நடக்காததையும் கிடைக்கததையும் நினைத்து புலம்பி, அங்கலாய்த்து போகிறோம் ……….
எல்லாம் எல்லாம் தோன்றும்
சுய பரிசோதனை நடதிக்கொள்வோம்….
ஒரு தடவை பெட்டியிலிருந்து வெளியே வந்தோமானால், மனது இதெல்லாவற்றையும் மறந்து விடுகிறததா ? ……நினைக்க மறுக்கிறதா?
ஒருவரது, இறப்பிலும்,  சவ ஊர்வலத்திலும், ஈமக்க்ரியைகள் நடக்கும் போதும் இதெல்லாம் நமக்கு தோன்றும் …பிறகு..எதையும் நாம் நினைக்க விரும்புவதில்லை….
அது தான் ஸ்மசான வைராக்யமா ?