Tag Archives: அபார்ட்மென்ட்

காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

பச்சை மிளகாய் கற்றுத்தந்த பாடம்……

தோழி, அக்கா , மாமி, ஆண்ட்டி …எப்பிடி கூப்பிடுவது அவர்களை?

பெயர் கீதா
புதிதாக எங்கள் அபார்ட்மென்டில் குடித்தினம் வந்திருக்கிறார்கள்.
தமிழ் பேசுவதால், ஒரு அலாதி அன்யோன்யம் ஏற்ப்பட்டு, நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறோம்….
என்னை விட 13 வயது பெரியவர்கள்..பெரிய மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார்…
வெள்ளந்தியான மனசு, எல்லோரையும் வாய் நிறைய பாராட்டும் குணம், மற்றவர்களிடம் இருக்கும் திறமையை, வியந்து வியந்து பேசுகிறார்….
என்னையும் தான்…!!! [ அதானே பார்த்தேன், இல்லேனா நீ ஏன் அவரை பற்றி எழுத போகிறாய் என்று கேட்பவர்கள் கேட்கட்டும் ] ……
ஏதோ, சத் விஷயங்களும், சத்தான உணவையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம் இந்த இரு வாரங்களாக.
நான் போட்டுக் கொடுத்த டப்பாவில், தான் நேற்று தயிர் வடை செய்து எடுத்து வந்திருந்தார் அவர்.
அருமையாக இருந்தது, மிதமான காரம், புளிப்பில்லாத தயிர், நல்ல அலங்காரம்….எல்லாம்…..
ஒன்று தின்றுவிட்டு, அடுத்ததை குற்ற உணர்வுடன் தட்டில் வைத்து, பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு,
” போனால் போகட்டும் இதெல்லாம் என்ன தினமுமா தின்ன கிடைக்கிறது ” என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு [????] அடுத்ததையும் வெட்டினேன்…
நடுவிலேயே, வாயில் ஒரு அரைபடாத பச்சை மிளகாய் துண்டு….. சரி தயிர் வடை தான் சாதுவாக இருக்கிறதே என்று, பச்சை மிளகாய் கடித்தது கடித்ததாகவே இருக்கட்டும் என்று மேலும் கடித்தேன் [ திமிரு தான் வேற என்ன ]?
விக்கி திக்கி, தண்ணீர் குடித்து ஒரு வழி ஆனேன்….
ஆனால், யோசித்து பார்த்தல், பச்சை மிளகாய் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தது ……
சுவையான உணவின் நடுவில் நாவில் அகப்படும் பச்சை மிளகாய் போல தான் வாழ்க்கையில் சில சம்பவங்கள் இல்லையா…..?
எதிர்பாராத சமயத்தில், நம்மை கதி கலங்கக்செய்யும் நிகழ்வுகள்…..
அப்பிடி, கதி கலங்க செய்து, அதை எதிர்க்கொண்டு, மீண்டு எழுந்து, தன்னை சுதாரித்துக்கொண்டு, தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் எதார்த்தமாக வாழச் செய்து,
உள்ளே அழுது, வெளியே சிரித்து …..இந்த ஜென்மத்திலேயே, இரண்டாம் முறை பிறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வந்தார்கள்…..
தோழி ஒருத்தி, தன தகப்பனாரின் எண்பதாவது வயது [ சதாபிஷேக ] வைபவத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம்,
தன பிள்ளையின் பள்ளியில் மீட்டிங் என்பதால், தன் கணவர் போவதாக சொன்னதால், தான் வேலைக்கு சென்றாள் ….
வீட்டிலிருந்து கிளம்பின கணவன், பொட்டலமாக திரும்பி வந்தான்…..
விபத்தில் விழுந்து விட்டான் என்று தெரிந்த நேரத்திலிரிந்து, அவன் பெற்றோருடனும், அவளுடனும், இருந்து
‘ ஏன் ஏன் இப்பிடி ஆகா வேண்டும் ” என்று யோசித்து யோசித்து, பதில் புரியாமல் போக…. அவர்களுக்கு, பலமாக இருப்பது மட்டுமே இப்போது நான் செய்ய வேண்டியது என்று தோன்றிற்று ….செய்தேன்….
பிள்ளைகள் இருவரும் சின்னன் சிறியவர்கள்….. மூத்தவள் ஆறிலும், மகன் இரண்டிலும்…..
ஆனால் எதுவும் நிற்கவில்லை…..காலம் ஓடிக்கொண்டிருக்கிறது….பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்…
அவளை பார்க்கும் போதெல்லாம் எட்டிப்பார்க்கும் மேலே சொன்ன கேள்வி…..ஆனால் அவளுக்கு தேவை என் அனுதாபம் இல்லை….. என் சப்போர்ட் தான்…
ஏதோ இன்று வரை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதை……..
இன்னொரு தோழி, தனக்கு எது வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வாளோ அதால் பாதிக்க பட்டு…. அழுது, புலம்பி, பிரார்த்தனை செய்து, இப்போது, நல்ல படியாக இருக்கிறாள்….
புற்று நோய் இன்று எல்லோர்க்கும் வருகிறது. எவ்வளவோ, விழிப்புணர்வு இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு வந்தால், முகத்தில் அறைந்தார் போல் இருக்கிறது….
அப்படிதான் இருந்தது எனக்கும்….
என்ன சொல்லி தேற்றுவது அவளை???….புரியாமல் விழித்தேன்.
ஆனாலும், அவளை தேற்றுவதற்காக நான் தைரியமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவளை பார்த்து, கட்டிக்கொண்டு, [ கட்டி பிடி வைத்தியம் தான் வேறென்ன ???]
‘ஆச்சு முடிஞ்சு போச்சு, இனி புது பிறவி, நல்லதையே நினை…ஏதோ இப்போதே தெரிந்ததே, என்று சந்தோஷப்படு ” …. என்று கூறி தேற்றி …
நன்றாக உள்ளதாக, பழயபடி நீ வளைய வருவதாக நினதுக்கொள் ….விடாது, சிந்தனை செய் என்று கூறி….. கிரேயடிவ் விசுவலைசேஷன் பற்றி நிறைய பேசி, தைரியம் ஊட்டினேன் ….
கொஞ்சம் கொஞ்சமாக, தேறி, நடு நடுவே தளர்ந்து, பின் நிமிர்ந்து, திரும்பவம் சறுக்கி, திரும்ப எழுந்து….. இப்போது தன்னை தானே தூக்கி நிறுதிக்கொண்டிருக்கிறாள் …..
வைத்தியம் முடிந்து, பாப் தலையுடன் என்னை பார்க்க வந்த போது …மகிழ்ச்சியாக இருந்தது……..
அனால் இதில் வித்யாசப் பட்டவர்களும் உண்டு…..
காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழிக்காக மட்டுமோ என்ற தோன்றும் அவளை பார்க்கும் பொது…..
ஆட்டிசம் என்னும் குறை பாடுடன் பிறந்த தன மகனை வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தக் கூட வெட்க்கப்படுபவள் ….
எப்பிடி முடிகிறது…. நாமே நம் குழந்தையை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்….உலகம் எப்படி பார்க்கும்….ஏன் சிந்திக்கவில்லை அவள்…
தன்னை பற்றி அவனே சரியாக உணராததால், அவன் செய்கைகள் அசாதாரணமாக தான் இருக்கும்…. [தெரிந்திருந்தால் செய்வானா???]
அவனை உடலாலும் துன்புறுத்தி …தானும் தன்னை வேதனையில் ஆழ்திக்கொள்கிறாள் ………..
நாம் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் …அதனால் தான் என்னை இந்த குழந்தைகளுக்கு தாயாக நியமித்திருக்கிறான் என்று ஏன் தோன்றவில்லை…
அவன் மட்டும் ‘ஸ்பெஷல் குழந்தை ‘ இல்லை ..இவளும் தான் ‘ஸ்பெஷல் தாய் ‘
தன்னால் முடிந்ததை அவனுக்கு புகட்டி… நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும் என்று ஏன் தோன்றவில்லை…..
என் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது கடினம்…….அவளுக்குள் நெகடிவிடி ஊறிவிட்டது……மாற்றிக்கொள்ளவும் தயாரில்லை…..
யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை… சின்னதும் பெரிசுமாக எவ்வளோ இருக்கின்றன…
எதற்கும் வாடாமல், தைரியமாக வாழ்க்கையை எதிகொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்…
நான் எதையும் புதிதாக சொல்லவில்லை… சொன்னவர்களின் வார்த்தைகள் பசுமரத்து ஆணிபோல் பதிந்ததால், அதை நடை முறை படுத்துவதற்கு முற்படுகிறேன், வெற்றியும் அடைகிறேன் …..
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் ………………..
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்ல
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்…………

பச்சை மிளகாயை கடித்தால் என்ன, ஒரு குலாப் ஜாமூனோ, மைசூர் பாக்கோ கிடைக்கமலா போய்விடும் ?
இது தான் நான் வாழ்க்கையை பார்க்கும் விதம்……..