Tag Archives: ஆத்மார்த்தம்

குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

என் ஆயுதம்…

அடாடா…. பயப்படாதீங்கநண்பர்களே!!!

ஆயுதம் ஏந்திய அனு உங்கள் மனக் கண் முன்தோன்றி மறைந்திருப்பேன்.

என்னோட ஆயுதம்என்னோட க்ரோஷா/நிட்டிங் ஹூக்குங்க!!!!!👍

ஒருத்தருக்கு கரண்டி

ஒருத்தருக்கு பேனா

ஒருத்தருக்கு வர்ணம்தீட்ட பருஷ்

என இருப்பதுபோலஎனக்கு என் ஹூக்/நீடில் !!!!!

க்ரோஷா முதலில்அம்மாசொல்லிக்கொடுத்தாலும், ஸ்வெட்டர் பின்னசொல்லிக் கொடுத்ததுமாமியார். நிட்டிங்முதலில் இருந்தேசொல்லிக் கொடுத்ததுமாமியார். ஆனால்குருவுக்கு மிஞ்சியசிஷ்யை ஆகிவிட்டேன்இப்போது. எல்லாம்இன்டர்நெட்ன்கைங்கர்யம் தான்.

அம்மாவுக்கு (அதாவதுமாமியார்) இன்டர்நெட்தெரியாததால், நான்அவ்வப் போதுஅவர்களுக்கு பாடம்எடுக்கிறேன்.

க்ரோஷா / நிட்டிங்…..(இரண்டிற்கும் வித்யாசம்தெரியவில்லைஎன்றால் கூகுளைகேளுங்கள். !!!!)அதுஏதோ ஒன்று என்றுமட்டும் அசட்டையாக சொல்லாதீர்கள்.

இதில் எனக்கு அலாதி ஈடுபாடு. மனது சோர்வடையும் போது என் ஆயுதங்கள் தான் எனக்கு டானிக்.

மனது வலிக்கும் போது புதிதாக ஒன்றை தொடங்கினால், அதில் லயித்து மூழ்கி, முத்தெடுத்து, பார்க்கும் போது அழகாக இன்று உருவாகியிருக்கும்.

அதையும் மீறி சோர்வடையும் நாட்களும் உண்டு. ஏதோ ஒரு வலி தூண்டப்பட்டு, அதன் தொடர்பாக, எப்போதோ நடந்த சம்பவம் நினைவில் வந்து, மீண்டும் அந்த நாள் மனக்கண் முன்னே ஓடி, அப்பப்பா…. ஒரு வழி ஆகி விடுவேன்.

கண்கள் ஊசியை தேடும்…கை பர பர வென்றிருக்கும்…கையில் எடுக்க வேண்டியது தான் மனம் லேசாகும். சில நாட்கள், பொங்கி பொங்கி அழுகை வரும். அழ வேண்டியது தான். சிம்பிள்….

தும்மல் வந்தால் தும்முவது போல

இருமல் வந்தால் இருமுவது போல

அழுகை வந்தால் அழ வேண்டியது தான்.

சின்ன குழந்தைகளுக்கு, பின்னுவதில் தனி மகிழ்ச்சி. நான் பின்னுவதை எந்த குழந்தை அணியும் என தெரியாமல் பின்னுவது இன்னும் த்ரில்…சின்னதும், சுமார் பெரிசுமாக பல ஸ்வெட்டர் இன்று வரை பின்னி பின்னி கை விடப்பட்ட குழந்தைகள் காப்பாகத்திற்கும், வேத பாடசாலைக்கும் கொடுத்தயிற்று. ஒரு சமயம், முதியோர் இல்லத்திற்கு 50 தொப்பி, போட்டு கொடுத்தோம். அதீத மன நிறைவு.

பின்னும்போது, ஸ்லோகங்கள் சொல்லுவதும், பாட்டு பாடுவதும், ஒரு வழக்கம். அதற்காகவே இருவர் ஆர்டர் கொடுத்தார்கள்.

நம் கையால் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போது பெண் பிரம்மா போல ஒரு பெருமை.

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி