இன்று பிறந்த நாள்
50 முடிந்தது பாதி கிணறு ??
யாருக்கு தெரியும்.
ஆனால் 50 வருடங்களை திரும்பி பார்த்தால், சரி…ஒரு 40 வருடங்களாவது நினைவிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள
நல்ல வாழ்க்கை தான்.
இந்த பதிவை 50வது பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனதை தொட்டால் தான் பதிப்பது என்று ஒரு பாலிசி! அதனால் பக்கத்தை ரொப்பி எழுதுவதில் உடன்பாடில்லை.
காலம் சுழன்று கொண்டிருக்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல்.
உப்பும் தண்ணீரும் ஊற ஊற எல்லாம் சரியாகும் என்று அம்மா சொல்லுவாள். துக்கமும் சுகமும் மாறி மாறி தான் வாழ்க்கை.
அது சரி… வேதாந்தம் பேசாமல், மொக்கை போடாமல், நீ என்ன கிழித்தாய் னு சொல்லு என்கிறீர்களா?
பெரிதாக ஒன்னும் இல்லை.
நல்ல மகள்… நீ ரொம்ப….நல்லவ 🤣🤣என்று பலர் கூறும் போது அம்மா அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஜீன்ஸ் இல்லையென்றால் ஏது நல்ல குணம். 2 வழி தாத்தா பாட்டிக்களையும் தான் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஆசீர்வாதம் உணர்கிறேன்.
************************************
நல்ல மனைவி….மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…
ஆமா…. ஆமா…. என் கணவருக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு…
என்ன செய்வது …அவர் பதிவதில்லை அதனால் நானே சொல்லிக்கொள்கிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் அவர் பேச , அவர் பேச நினைப்பது /நினைக்காதது எல்லாம் நான் பேச…கவியரசர் கண்ணதாசன் என் கணவரை சந்தித்ததில்லை…(நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு 🤣🤣😎) இல்லைனா பாட்டை மாற்றி எழுதிருப்பார். இப்பிடிஒரு கணவன் அமைய என்ன தவம் செய்தேனோ. பெரியவர்களின் ஆசி, பூர்வ ஜென்ம நல்ல கர்மா…சீனு என்கிற ஸ்ரீனிவசனை என்னோடு இணைத்தது னு தான் சொல்லணும்.
************************************
நல்ல மருமகள்…பெண் குழந்தை இல்லாத மாமியார் மாமனாருக்கு மகளானேன்.
இந்த ஒரே வாக்கியம் போதும்…
என் மாமனார் தாயுமானவன் !!!
ஒரு மருமகளுக்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்கிற தடையை உடைத்தவர். அறுவை சிகிச்சை முடிந்த 6 மாத காலத்தில் கண்ணை இமை காப்பது போல னு சொல்லுவார்களே அது போல என்னை காத்தவர். 4 மாதங்கள் வாரம் தோறும் எனக்கு மூத்திர பை மாற்றியவர். இன்றளவும் எங்கள் உள்ளாடைகள் மடிப்பவர். (வெக்கமாயில்லியா னு கேட்கிறீர்களா? )அப்பாவிடம் மகளுக்கு என்ன வெட்கம்.
இன்றளவும் மறக்க முடியாதது… ரயில் பயணத்தில் ஒருவர் என்னை பார்த்து கேட்டது…”மாமனாராயா இப்படி அப்பா அப்பா னு கூப்படறீங்க…உங்க அப்பா னு நெனச்சேன்”அது என் பாசத்திற்கான சான்றிதழ்.
மாமியார்….அடாடா… நாங்க சீரியல் மாமியார் மருமகள் இல்லியே. காலை ஐந்தரை மணிக்கு காபி பொழுதில் கூட ஸ்வெட்டர் போடுவது பற்றி ரொம்ப தீவிரமா டிஸ்கஸ் பண்ணுவோம்.
ஹாஹாஹா… அதுக்காக அப்பிடியே ஆதர்ஷ மாமியார் மருமகள் னு எல்லாம் சொல்ல முடியாது. எலியும் பூனையுமா கூட இருப்போம். 2 நாள் 3 நாள் அப்பறம் மருந்துட்டு பொழப்ப பாக்க வேண்டியதுதான். குடும்பத்தை தாண்டி வெளி ஓலகத்ல எத்தனையோ விதமான மனிதர்களை பொறுத்துக் கொள்கிறோம்…நம் கண்ணான கணவரின் அம்மா அப்பா வை கொஞ்சம் கூடுதல் பொறுமை காட்டி அரவணைக்கலாம்.பெரியவா எதானும் சொன்ன மூஞ்சியை தூக்கி வெச்சுக்காம, அதை எப்படி சரி ஆக்கறது னு பாரு…இங்க கேட்பது நாகலக்ஷ்மிங்கிற எங்க அம்மா ஓட அசரீரி😂************************************நல்ல அம்மா…இதுக்கு தனி பதிவே போடணும்!!!!ரெண்டும் ரெண்டு கண்ணு.சின்ன பொட்டலமாக வந்த கடவுளின் பரிசுப்பொருள்கள்.முதலில் என்னை தாயாக்கி இப்போது என்னை சேயாக்கியவர்கள்.கடவுள் அருளால், பெரியவர்கள் ஆசியால், அவர்கள் துணையுடன் நல்ல பிள்ளைகளாக வளர்த்த பெருமை உண்டு. ஒரு தாய்க்கு இது போதும்.************************************நல்ல நண்பி !!!!… நிறைய நண்பர்கள். வெகு காலமாக தெரிந்தவர்கள், சில காலமாக தெரிந்தவர்கள், நண்பர்களின் நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர், முகநூல் நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்கள், வாட்சப் நண்பர்கள், போதுமா…..எல்லோர்க்கும் தெரியும் சாய்வதற்கு என் தோள்கள் எப்பவும் தயார் நிலையில் இருக்கும் என்று.
இனும் ஒரு பெரிய பாத்திரம் பாக்கி . அதற்க்கான காத்திருப்பில் இருக்கிறேன்
50 வயதில் கசப்பான அனுபவங்களும் , மனிதர்களும், ரணங்களும், வலிகளும், காயங்களும், இல்லாமல் இல்லை. புரையோட விடாமல் பார்த்துக்கொண்டுவிட்டேன். கொஞ்சம் லேட்டாக தான் சிலரை புரிந்து கொண்டேன், ஆனால் இப்போதாவது புரிந்ததே என்று சந்தோஷம்.புரிந்து கொண்டு????என்னை விலக்கிக் கொண்டேன்.என் நிம்மதி முக்கியம் என்று உணர்ந்ததால்.