Tag Archives: சிரிப்பு

குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

அவள் மெல்லச் சிரித்தாள் ……

அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை

. ஜீன்ஸ் பாண்ட், மேலே சிவப்பு கலரில் பூப்போட்ட சட்டை அணிந்து ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் அவள் நிற்க, அடித்த இளவெய்யில் காற்றில் அவள் கூந்தல் பறக்க, இரண்டு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி அவள் மெலிதாக சிரிக்க, அவள் கிளிக் செய்யப்பட்டாள். தனக்கே தன் கோலம்   பிடித்துப்போக, அவருக்கு அனுப்பினால் நன்றாக இருக்குமே என்று எண்ணி உடனடியாக வாட்ஸ் ஆப் செய்தாள் . ஏதோ நேற்று தான் அவரை முதன்முதலில் பார்த்தது போலும் அவருடன் முதல் முறையாக தொடர்பு கொள்வது போலவும் ஒரு பரபரப்பு. இரண்டு டிக் வந்தும், அது நீல நிறத்திற்கு மாறாதது சலிப்பை தந்தது…

என்னமா ….போன் பாத்துண்டே இருக்க என்ற பெண்ணை… ஒன்னும் மில்லடா சும்மாத்தான் என்று சொல்லி சமாளித்தாள்.

சிறிது இடைவெளிக்கு பின், smile often என்று கணவனிடமிருந்து பதில் வந்தது. த்ச் ….. அவ்வளவு தானா என்று ஒரு ஏமாற்றம். நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே.. இந்த உடை உனக்கு பொருந்துகிறது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதையும் சொல்லாமல், அடிக்கடி இப்படி சிரி என்று மட்டுமா சொல்வார்கள்? இந்த ஆண்களே அப்பிடித்தானா?

ஒரு இளம் பெண்ணாகஅவருக்கு அறிமுகமாகி, மேலே சொன்ன பாட்டில் வருவது போல வெட்கம் பெறுக பெறுக சிரித்தவள் அதே சிரிப்பை  திருமணமாகி முப்பதும் நாற்பதும், ஐம்பதும் வருடங்கள் ஆனா பிறகும் சிரிக்க முடியுமா? சிரிக்க கூடாது என்று அவளுக்கு ஒன்றும் வேண்டுதலும் இல்லை. ஆனால் சிரிப்பதில்லை. இயல்பாக இருப்பதாக அவள் நினைத்திருந்தாள் , அனால் அவள் சிரிப்பு தொலைந்ததை அவள் அறியவில்லை. எங்கே தொலைத்தாள், தேடினால் கிடைக்குமா?

இளம் மனைவியாக, புது சூழலில் மிரண்ட  விழிகளுடன் இருக்கும் பொது முதலில் தொலைத்திருக்க வேண்டும்

பின் தாய்மையின் பொறுப்புகளில், எதிர்பார்ப்புகளில், இன்னும் கொஞ்சம் தொலைந்திருக்கும்.

அலுவலகத்தில் , அந்த கதாபாத்திரத்தின், எதிர்பார்ப்புகளில் இன்னும் கொஞ்சம்,

வாலிப வயது பெண் பிள்ளைகளை புரிந்து கொள்வதில் கொஞ்சம்

வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், தான் பெற்ற  பிள்ளைகளையும் தலைமுறை மாற்று கருத்துக்களில் நாட்டாமை செய்தும் கொஞ்சம்

திருமண வயது பெண்ணோ பிள்ளையோ இருந்து, வரன் தேடும், அந்த நீண்ட பயணத்தில் கொஞ்சம்

தான்  அதுவரை நடு வயது எட்டியிருந்தால், தன் உடல் உபாதைகளில் கொஞ்சம்

எது எப்படி இருந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போக கூடாது என்று ஒரு கழக் கூத்தாடி போல, அந்த சம்சாரம் என்ற கயிற்றில் இந்த பக்கமும் விழாமல் அந்த பக்கமும் விழாமல், நடக்கும் போது கொஞ்சம்

இப்படி சிறிது சிறிதாக தொலைந்தது, அவளையும் அறியாமல் விட்டு போனதோ? ஆனால் இன்று அடிக்கடி சிரி  என்று கணவர் சொன்னபோது உணர்ந்தாள், அது கடினம் என்று.

பெண் மட்டுமே சம்சார சுழர்ச்சியில் சிரிப்பை தொலைப்பதில்லை,

பல ஆண்களும் தொலைக்கிறார்கள்.

இன்று ஒரு மைல் கல் ……….

இன்று ஒரு மைல் கல்…
பல காலங்கள் கழித்து திரும்பிப்பார்க்கும்போது, உன்னை நினைத்து நீயே பெருமை படும் நாளாக இன்றைய நாள் அமையும்.
நான் எப்பொழுதும் கூறும் வார்த்தையை/தைரியம் ஊட்டும் வாக்கியத்தை கூறினேன், ஏனோ உன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
அனால் அது நான் எதிர்ப்பார்த்ததுதான்…..அதனால், என்னை திடமாக வைத்துக்கொண்டு, உன்னை தேற்றினேன் …..(மற்றும் ஒரு முறை ).
உன் மன உளைச்சல் எனக்கு புரிகிறது உணர முடிகிறது…..
உன் பெயருக்கு பின்னால் நீ சேர்த்துக்கொள்ள போகும் பட்டங்கள் நாளை உன்னை பிரதிபலிக்கும், உன் நிறமோ, உன் கூந்தலோ, உன் பல் வரிசையோ, உன் உடல் பருமனோ, உன் உயரமோ அல்ல……..
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது …….
உன் அன்பு ததும்பும் முகமும், சிரிப்பும், அடுத்தவர் வலி உணரும் குணமும் நீ எடுத்துக்கொண்டுள்ள துறைக்கு மிக முக்கியம்.
தைரியமாக எதிர்கொள் வாழ்க்கையை…….
நான் எப்பொழுதும் கூறுவது போல், யார் எவ்வளவு, தைரியம் கூறினாலும், அதை செயல்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது….
பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்….. எப்பிடி இருந்தாலும் பேசும் இந்த உலகம்….
உன்னை மட்டும் தான் விமர்சிக்கிறார்கள் என்று நினைக்காதே…..
மற்றவர்களின் குறு குறு பார்வை நமக்கு பழகிவிட்டது இப்போது…. (நமக்கு என்று தான் சொல்வேன் ……..அந்த வலியை நானும் ஒவ்வொரு முறையும் அனுபவித்ததனால்)
என் ஜாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பார்கள்…
அவரவரின் நலன் விரும்பியாக நீ பரிந்துரைக்கப்போகும் சத்தான உணவு, அவர்களை மிக விரைவில், நோய்லிரிந்து, நலம் பெறச் செய்து உன்னை வாழ்த்தச் செய்யும் ……..
உன் குடும்பம், உன் நலன் விரும்பிகள்,உன் தோழிகள், அவர்கள் உனக்கு உன் கை தொலை பேசியில் அனுப்பிய வாழ்த்துக்கள், உனக்காக செய்யும் பிரார்த்தனைகள், இவையெல்லாம் வீண் போகாது…..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் இருக்கிறான்,
நம்மை காப்பதை அவனிடம் விட்டபிறகு நமக்கு என்ன வீண் கவலை?