Tag Archives: தனியாகபயணம்

காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

அன்றொரு நாள் அதே நிலவில் …..

அன்றொரு நாள் இதே நிலவில்

24 நாலு மணி நேர பயணம் …
அதென்ன பெரிய விஷயமா?
இதெல்லாம் ஒரு விஷயம் னு எழுதறியே அனு என்கிறீர்களா ?
அட ஆமாங்க ………….
ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு இன்னொரு இடத்துக்கு போறதுக்கு 24 மணி நேரம் நா கொஞ்சம் மொக்கையா தானே இருக்கும்…
ஏதோ நடுவுல ஒரு ஜங்ஷன் ல இறங்கி ஒரு மசால் வடை வாங்கினோம், காலாற கொஞ்சம் நடந்தோம், ஹிக்கின்போதம் கடைய ஒரு நோட்டம் விட்டோம் என்று ரயில் பயணமாக இல்லாமல்,
ஆகாச மார்கமாக ….அசௌகரியமாக தான் இருக்கிறது. 8 மணி நேர பயணம், நடுவுல கொஞ்சம் பிரேக் மீண்டும் 8 அல்லது 9 மணி நேர பயணம்

பிடிச்சு வெச்ச பிள்ளையாராட்டம் ஒரே இடத்தில் உக்காரணும் , இந்த கொடி இடையை சுத்தி ஒட்டியாணம் வேற….. அப்பறம் சிரித்துக் கொண்டே உப்பு சப்பு இல்லாத ஒரு சாப்பாட்டை ரொம்ப பிடிச்ச மாதிரி நடித்துக் கொண்டே சாப்பிடனும், …. கொஞ்சம் சிரமம் தான்

ஆனால் என் போன்ற அம்மாக்களுக்கும், மாமியார்களுக்கும், பொதுவாகவே நடு வயது காரர்களுக்கு, கொஞ்சம் அதிகம் தான் .

குஞ்சும் குளுவானுமாக மகள்களை அழைத்துக் கொண்டு இதே 24 மணி நேரம் ரயிலில் பயணித்த காலங்களும் உண்டு.
பிறகு கடைசியாக எப்போது ரயிலில் போனோம் என்று யோசிக்கும் அளவு, விமான பயணங்கள்.
முதல் வெளிநாட்டு பயணமும் பெண்களுடன் தனிப் பயணம் தான். அது முடிந்து10 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணம். ஆனால் முந்தையதை விட நீ ண்ண்ட பயணம்.
இந்த பயணத்திற்குள், வயதும் நாலு முறை, ஆஸ்பத்திரி போய் வந்து, உடம்பில் அங்கங்கு வலி வேதனை ….
கழுத்து வலி வந்துவிடுமோ….(என் பெரிய கவலை)
மூட்டு வலித்தால் என்ன செய்வது இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள்
எப்படியோ, கணவருடனும் பெண்ணுடனும் ஒரு பயணம், மீண்டும் பெண்களுடன் ஒரு பயணம் என்று 2 ,3 முறை பொய் வந்த பிறகு, கணவர் அமெரிக்கா வர வேலை இருந்ததால், அப்பாவுடன் போம்மா கம்பெனி இருக்கும் என்றார்கள் குழந்தைகள்.
நானும் சரி என்று புக் செய்து, மனதளவில் ரிலாக்ஸ் செய்து கொண்டுவிட்டேன். அவரை பார்த்து விட்டால், அவர் உடன் இருந்தால் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நாடி நரம்பு சதை எல்லாம் தளர்ந்தது.
இன்றைய தலை முறைக்கு இது புரியுமா என்று தெரியவில்லை. என்னால் முடியாதது இல்லை. அவர் உடன் இருக்கும் போது அது கொடுக்கும் சவுகரியம்.

எதிர்பார்த்தது போல் நடந்து விட்டால் என்ன ருசி இருக்கிறது.

அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிந்த உடன், ஒரு பதட்டம், ஒரு ஏமாற்றம்.

தெரியாத , பரிச்சயமில்லாத வழியில்

போக வேண்டுமே.

நம்மால் முடியுமா?
வழிகாட்டல்களை சரியாக பார்த்துக் கொண்டு போய் விடுவோமா?…..
ஒரு டெர்மினல் விட்டு மற்றொரு டெர்மினல்க்கு போக ரயில் இருக்குமா பஸ் இருக்குமா?……
பசித்தால் வாங்கி திங்க, கையில் இருக்கும் டாலர் உபயோகப் படுத்த முடியுமா??………
ஒரு வேளை கையில் இருக்கும் காசை விட அதிகமாக தேவை பட்டால்?…..
கையில் இருக்கும் கிரெடிட் கார்டு வேலை செய்யுமா?…..
சார்ஜ்ரை நினைவாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்… எப்போதும் சார்ஜ் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் …..முடிந்தபோதெல்லாம் குடும்பத்திற்கு அறிவிக்க வேண்டும்…
இட்லியும், வெந்தயக்கீரை சப்பாத்தியும் கையில் எடுத்துக்க்கொள்வோமா?…..
ஒரு பாக்கெட் மொனாகோ பிஸ்கட் கூட வைத்துக்கொள்ளலாம். உப்பு போட்டு சாப்பிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

இப்படி மண்டைக்குள் ஒரு ட்ராபிக் ஜாம்.

அது விலக 4 நாட்கள்.

பிறகு என்ன, வழக்கம் போல மனதை தைரிய படுத்திக்கொண்டு, ஆக வேண்டிய வேலையை பார்க்க வேண்டியதுதான்.

இந்த காலத்து பிள்ளைகள் போல ஒரு backpack எடுத்துக் கொண்டேன்.

உங்களுக்கு எந்த உடை சௌகரியமாக இருக்குமோ அதில் பயணம் செய்யுங்கள். வெளிநாடு என்பதற்காக பாண்ட் ஷட் என்று பொருந்தாத உடை அணிந்து, ஒரு மாதிரி நடந்து, உட்கார்ந்து உங்களை நீங்களே தண்டித்து கொள்ளாதீர்கள்.

ஒரு தெளிவாக தெரிய கூடிய ஜிப் லாக் பையில் உங்கள் சோப்பு சீப்பு கண்ணாடி ,பொட்டு பாக்கெட், லிப்ஸ்டிக், கண் மை, குட்டி லோஷன், குட்டி பேஸ்ட், அம்ருதாஞ்சன, என எது அத்யாவஸ்யமாக தேவையோ அதையெல்லாம் எல்லாம் வைத்துக் கொண்டேன்.

ஏன் தெளிவாக தெரியும் ஜிப் லாக்? ஏனென்றால், வெளி நாட்டு பாதுகாப்பு பரிசோதனையில், அவர்கள் அது போல் ஒரு பையில் இதையெல்லாம் வைக்க சொல்கிறார்கள். சில இடங்களில் அவர்களே பையும் தருகிறார்கள். அப்படி தரவில்லை என்றால், பாதுகாப்பு பரிசோதனையின் போது, அரக்க பறக்க எல்லாவற்றையும் தோண்டி எடுத்து, கீழே கொட்டி, பொறுக்கி, தட்டு தடுமாறி, இது தேவையா.?

சில பா.சோ. இடத்தில், போட்டுக்கொண்டு இருக்கும் ஷூ வை கூட அவிழ்த்து ட்ரேயில் வைக்கவேண்டும். அதை கூட நான் எளிதாக்கி கொண்டு விட்டேன். வெல் க்ரோ ஓட்டும் ஷூ என்னுடையது. லேஸ் கட்டும் ஷூ அப்போது தான் மணி முடிச்சு போட்டுக் கொண்டு நம் பிராணனை எடுத்து, நாம் காலை தூக்கி நின்றாடும் தெய்வமே என்று அபிநயம் பிடித்து…. வேண்டாமே

அபிநயம் என்றதும் நினைவிற்கு வருகிறது, கொலுசு அல்லது நான் அணிவது போன்று காப்பு.

ஆர் யூ அ டான்செர்? என்று கேட்டார் பரிசோதகர், அந்த மெஷின் பீ பீ ப்பீ என்று அலரியவுடன். ஏன்டாப்பா… கொலுசு போட்டவ எல்லாரும் டான்செரா? ஒரு ஜதி வேண்டுமானால் போட்டு காட்டவா? என்று கேட்க தோன்றியது…

இது முடிந்தவுடன், பரிசோதனைக்கு வைத்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டீர்களா என்று ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பாஸ்போர்ட் வெள்ளியில் வைத்திருந்தால்.

அடுத்து விமானத்திற்குள் பிரவேசம் முடிந்த மட்டும் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு போக பழகுங்கள். பிரயாணம் சுகம். என்னோட ஒண்ணு விட்ட மாமா பேத்தி கல்யாணத்துல வெச்சுக் கொடுத்த அந்த பை, எவ்ளோ வருஷமா என் கிட்ட இந்த புடவை இருக்கு தெரியுமா, என்றெல்லாம் சென்டிமென்ட் பேசாமல், அதி அவசியம் என்பதை மட்டும் சுமந்து கொண்டு போங்கள்.

விமானத்திற்குள், 1 மணிக்கொரு தரம் எழுந்து பாத்ரூம் வரை நடந்து போங்கள். அங்கு நின்று கையை காலை அசையுங்கள், தோள் பட்டையை அசையுங்கள். சுற்றும் முற்றும் பராக்கு பாருங்கள்(யாரையும் குருகுருவென்று பார்த்து தொலைத்து திட்டு வாங்கிக் கொண்டு என்னிடம் வராதீர்கள்)

சரி அப்படியே பாத்ரூம் போய்விட்டு போய் உட்காரலாம்.

பாத்ரூம் கதவுகள் சில நேரங்களில் நம் வீட்டில் இருக்கும் பாத்ரூம் போல திறக்கும். சில வற்றில், மடிந்து கொள்கிறது. உள்ளே போய் தாழ் போட்டால் தான் விளக்கு ஏரியும். திறக்க வரவில்லை என்றால் உதவி கேளுங்கள். உள்ளே போய் திறக்க வரவில்லை என்றால் பதட்ட படாதீர்கள். மூச்சை இழுத்து விட்டு, நிதானமாக செயல் படுங்கள். தண்ணீர் சிந்தாமல் உபயோகியுங்கள். மற்றவர்களும் உபயோகிக்க வேண்டும். சுத்தமாக வையுங்கள். Flush செய்தால், புஷ் என்று ஒரு பயங்கர சத்தம்.வரும். தானே அடங்கும்.

விமான பணி பெண்களும், ஆண்களும் ஒரு ஸ்லேடையாக ஆங்கிலம் பேசினால், ஒரு முறைக்கு இரு முறை, கேளுங்கள். அவர்கள் சிலேடை நமக்கு புரியாது… நம் சிலேடை அவர்களுக்கு புரியாது. கையோ கால வலித்தால், அவர்களிடம் கேளுங்கள். Pain killer வைத்திருக்கிறார்கள். ஒரு பேப்பர் இல் கை எழுத்து வாங்கிக் கொண்டு தருகிறார்கள்.

சாப்பிட கொடுப்பதை பிடித்ததோ பிடிக்கலையோ, வயிற்றை ரொப்பி கொள்ளுங்கள். படிப்பதற்கு புத்தகம், பாட்டு கேட்பதற்கு ஹெட் போன் எல்லாம் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏர்போர்ட்டில் free வைஃபை கனெக்ட் செய்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் முன் கூட்டியே திட்டமிட்டால் எல்லாம் எளிதாக இருக்கும். நானும் அதை தான் செய்துள்ளேன்.

எனக்கு தெரிந்தவரை பகிர்ந்துள்ளேன். முதல் முறை மகளின் \ மருமகளின் பிரசவத்திற்க்கோ, எதர்க்கோ போகும் பெண்மணிகளில், ஒருவருக்கு கூட இந்த பதிவு நம்பிக்கையூட்டினால் எனக்கு சந்தோஷம்.