Tag Archives: தென்னிந்தியசமையல்

கூவி அழைக்க கூ(ட்)டாதா

கூவி அழைத்தால் குருபரன் வருவான். கூவிக் கூவி அழைத்தாலும் கூட்டு சாப்பிட வரமாட்டார்கள்.

என்ன தான் அந்த கூட்டிற்கு சாபமோ. நல்ல மிளகு ஜீரகம் தூக்கலாக பொரிச்ச கூட்டு, புளி விட்ட கூட்டு, மோர் கூட்டு, வறுத்து அரைச்சு கூட்டு, என எவ்வளவு விதம்.

இன்று ஒரு இடைவெளிக்கு பிறகு சுரைக்காய் கூட்டு. கீன்வா அரிசி சாதத்திற்கு பதிலாக. ஒரு பிடி பிடித்தேன். நல்ல வக்கணயாக, தேங்காய் மிளகு ஜீரகம் மிளகாய் வத்தல், எல்லாம் வைத்து அரைத்து, கலந்து, ஒரு கொதி வந்ததும், அப்பிடியே தேங்காய் எண்ணையை ஒரு சுழட்டு சுழட்டி விட்டு, பின் இன்னும் கொஞ்சம் எண்ணையில், கடுகும் உளுந்தும்(பொன் நிறமாக) வறுத்து, ஒரு கொத்து, கறிவேப்பிலையும் கிள்ளி போட்டு, பெருங்காயம் தூக்கலா, செய்து, எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டு ஒரு பிடி பிடித்தேன். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து இதை எழுதி கொண்டிருக்கும் போது, சின்னதாக ஒரு ஏப்பம். என்ன ஒரு ஆத்ம திருப்தி. பருப்பு, காய், கொஞ்சம் தேங்காய், ரொம்பவே கொஞ்சம் எண்ணெய், இதை விட ஆரோக்கியமான ஒரு ஐட்டம் உண்டோ? எங்கள் வீட்டில் அத்துடன் ஒரு சுட்ட அப்பளம் கூட போதும். சில சமயம் வடாம் பொறிப்பது உண்டு. எனக்கு, எல்லா கூட்டமே பிடிக்கும் என்றாலும், இந்த முட்டை கோஸ் கூட்டும், உருளை கிழங்கு கார கரமேதும், தேவாம்ருதம். நல்ல ஆவக்காய் விழுதும், நல்ல ஜோடி. அதோடு, அந்த சாதத்தின் மேலே அப்பிடியே கூட்டு விட்டு கொள்ள கூடாது. பக்கத்தில் விட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சாப்பிடுவது ஒரு தனி ருஜி.

சமையல் ஒரு கலை என்றால், ருசித்து உண்பது ஒரு கலை.

பெங்களூர் கத்தரிக்காய் பொரிச்ச கூட்டு,

வாழைத்தண்டு மோர் கூட்டு

பூஷணிக்காய் / கொத்தவரங்காய் புளி கூட்டு தொட்டுக்கொள்ள டாங்கர் பச்சடி ( பதமாக வறுத்த உளுத்தம் பருப்பில் பொடித்து தாளித்து கொட்டியது ). என் அம்மா அத்துடன் ஊற வாய்த்த கொண்டக்கடலை போட்டு செய்வார்கள் …என்ன ருசி என்ன ருசி !! ஹூம் வருமா அந்த நாட்கள் இனி !

கூட்டை இனி வெறுக்காமல் உண்ணுங்கள் !

அம்மா மார்களே / மனைவி மார்களே அதற்காக தினமும் ஒரு கூட்டு செய்து துன்புறுத்தாதீர்கள்

அடுத்த முறை கூட்டு சாப்பிடும் பொது என்னை நினைத்து கொள்ளுங்கள்… எனக்கும் சேர்த்து ஒரு வாய் சாப்பிடுங்கள்..