மயிலேயே கயிலை
கயிலையே மயிலை..
ஐம்பது வருட உறவை நினைவு கூர்ந்தேன்..
தோழி ஒருத்தி கூறினாள்.. கண்ணீர் முட்டுகிறதென்று…
மண்ணாசை வேண்டாம் என்றேன்
மண்ணாசை அல்ல…விலக்க முடியாத நினைவுகளின் வியாதி என்றாள்.
நினைவுகளையும் தேர்ந்தெடுங்கள் என்றேன்.
என்னிடம் இருப்பவையெல்லாம் நல்ல நினைவுகள் மட்டுமே ……
மார்கழி மாதத்து அதிகாலை இருளில் போட்ட கோலம்.
இரவு உணவிற்கு பின் நாயர் கடையில் தம் அடித்துவிட்டு, அப்பா வாங்கி வரும் வாழைப்பழம்
இன்று வரை யாருக்கு யார் என்ன வேண்டும் என்று புரியாத கோடி வீட்டு குருக்கள் குடும்பம்…
காலியாக இருந்த தெருவில் ஞாயிறு களில் வாடகை சைக்கள் பழகியது
இதயம் பேசுகிறது வார இதழ்க்காக காத்திருந்தது
பாலங்கள் படித்தது…சிவசங்கரியின் வாக்கு வேதமாக இருந்தது
பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றது
பத்தில் கோட்டை விட்டது
பன்னண்டில் பாரிஸில் படித்தது
கல்லூரிக்கு தோழியுடன் சென்றது
ரவி புக் ஹௌஸ் இல் தினம் ஏதாவது ஒன்று வாங்கியது
கண்ணாடி வளையலை புடவை மெல் வைத்து பார்த்து வாங்கியது
கொலுசு போட்டுக் கொண்டு வீட்டின் முற்றத்தில் மேலும் கீழும் நடந்தது
மருதாணி வைத்துக் கொண்டு ரசித்தது
அப்பாவுக்கு புற்று நோய் என தெரிந்ததும் அம்மாவிடம் ..நான் இருக்கிறேன் என தோள் கொடுத்தது
என்னவர் என்னைப் பல வருடங்கள் கழித்து பார்த்தது, அவருக்காக பாடியது
வாழை மரம் நட்டு , மணப் பெண் கோலம் பூண்டது
22 வருடங்கள் பூரணமாக இருந்தது
28 வருடங்கள் வந்து வந்து போனது
மொத்தம் 50!!!!