Tag Archives: மூட்

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

மூட் நம்மை முடக்கக்கூடாது ..

sorrow faceஎவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு  நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,

படித்ததும், கேட்டதும், உணர்ந்ததும், கடை பிடிக்க முயன்றதும் நம் கைவிட்டு போகிறது…
நமக்கு வேண்டப்பட்ட ஒருவர், நாம் நன்றாக அறிந்தவர், ஒரு வார்த்தை சொல்லி விட்டால், நாம் ஏன் இவ்வளவு பரிதவித்து போகிறோம்?
உடனே கோபமும், அழுகையும் பொத்துக்கொண்டு வருகிறதே ?
பழசையெல்லாம் கிண்டி கிளறி எடுக்கிறது மனசு
அந்த குப்பயோடேயே வருகிறது, சுய பச்சாதாபம் ….
‘நானாக்கம் இதெல்லாம் தாங்கின்டேன் ” என்று புலம்புகிறது மனசு….
“அதனாலென்ன, இன்று எல்லாம் நன்றாகத்  தானே இருக்கு”  என்று புத்தி ஒரு பக்கம் சமாதானம் கூறினாலும்,
” அதெப்படி, அப்பிடி ஒரு வார்த்தை என்னை பார்த்து சொல்லி விட்டார்கள் ” என்று திரும்ப திரும்ப வேதனையை பறைசாற்றுவதற்கு அங்கீகாரம் தேடுகிறது மனசு….
ஒரு நாள் முழுவதும் மூஞ்சி பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
எதிலும் ஈடுபட மறுக்கிறது
வருத்தப்படுவதையும், மூஞ்சி அறுந்து தொங்குவதையும் நியாயப்படுத்த தேடுகிறது மனசு….( அதில் ஒரு தனீ  சுகம் அந்த வேளையில் )
உண்டா இல்லையா ? மறைக்காமல் சொல்லுங்கள் !!!!!
வாய் விட்டு அழுதாலும், நண்பர்களை அழைத்து தொலை பேசியில் புலம்பித்  தீர்த்தாலும் அடங்குவதில்லை…
இப்போதெல்லாம் முகநூலில் ( facebook ) ஸ்டேடஸ் அப்டேட் (status update ) செய்தால் கூட தணிவதில்லை !!!!!
அதற்க்கான நேரம் குறைந்தது ( நம் பிடியில் விஷயம் இருந்தால் ) 24 மணி நேரம்…..
புயல் சின்ன அறிகுறி போல் …………..
சூறாவளியாக வீசிவிட்டு மெது மெதுவே சகஜ நிலைக்கு திரும்புகிறது.
நாம் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் கூட நம்முடன் தங்கிவிட்டு போக தயார்தான்…..
ஆனால் அடித்து விரட்டவிட்டால், ஈஷிக்கொண்டு இருந்துவிடும்
அப்பறம் நாம் முன்னேறுவது எங்கிருந்து ???

நான் பெறாத தலைச்சன் பிள்ளை ………….

நான் பெறாத தலைச்சன் பிள்ளை நீ…..

உனக்கு பின்னல் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து விட்டாலும், உனக்கு பிடித்த சவலை இன்று வரை போகவில்லை…..
செல்லமாக கடிந்து சொன்னாலும், ஒரு சில சந்தர்பங்களில் மிரட்டி சொன்னாலும் ஏற்க மறுக்கும் பிடிவாதக்காரன் நீ…..
சுயபச்சாதாபத்தில் பல நேரங்களில் மூழ்கிவிடுகிறாய்……….
உன் சண்டித் தனம் உன்னை விட்டு போகவில்லை………
நினைத்துக்கு கொண்டு விட்டால் பிடிவாதம் பிடிக்கிறாய்………
மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு என் கவனத்தை ஈர்ப்பது  உன்னால்  மட்டும் தான் முடியும்…….( நானும் ஈர்க்கப்பட்டு பழகி விட்டேன்)
யார் மீதோ உனக்கு இருக்கும் கடுப்பை என் மேல் திணிப்பதில் நீ மிகவும் தேர்ச்சி பெற்றவன்…….
திடீரென்று ‘மூட்’ போய்விடுகிறது…. ( காரணம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ள இசையமாட்டேன் என்கிறாய் )
தொப்புள் கோடி சம்பந்தத்தில் உண்டான பிள்ளைகள் கூட உன்னை கையாள கற்றுகொண்டுவிட்டார்கள் ……………
உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி, நீ உதிர்க்க போகும் அடுத்த வார்த்தையை  கூட என்னால் யூகிக்க முடியும்….
இது பல வருட பரிச்சயத்தால் வந்த தெளிவல்ல, உன்னை ஆழ் மனதிலிரிந்து நேசிப்பதால் வந்த தேர்ச்சி ……..
எந்த ஒரு மனிதனும் முற்றிலும் சரியானவன் அல்ல….
மேல் சொன்ன புகார்கள் வெறும் புகார்கள் மட்டுமே…… பழிப்புகள் அல்ல……..
இவை எல்லாவற்றையும் தாண்டி/தவிர்த்து நீ என் மனதில் பெரிய  பீடம் அமைத்து அமர்ந்திருக்கிறாய்…….
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாய் ………….