Tag Archives: மோர்காவ்

அஷ்டவிநாயக் ….பாகம் ஒன்று

மும்பையில் வசிக்க தொடங்கி, இருவது வருடங்கள் ஆகிவிட்டாலும், ‘ அஷ்ட விநாயக் ” யாத்திரை சமீபத்தில் தான் கைகூடியது…..

அஷ்ட விநாயக் என்பது எட்டு விநாயகர் கோயில்களின் தரிசனம். எட்டு கோயில்களில் உள்ள மூர்த்திகளும் சுயம்பு மூர்த்திகள். இவற்றில் ஆறு கோயில்கள் புனேயிலும், இரண்டு ‘ராய்கட் ‘ வட்டாரத்திலும் உள்ளன….
மும்பையிலிரிந்து நிறைய டூர் நிறுவனங்கள் இந்த அஷ்ட விநாயக் யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
என்னவருக்கு, கார் ஓட்டுவது ‘passion’ என்பதால், நாங்கள் எங்கள் வண்டியிலேயே புறப்பட்டோம்.

அட, ஆமாங்க கண்டிப்பா உண்டு……மிளகாய் போடி தோய்த்த இட்லி இல்லாமல் ஒரு வெளியூர் பிரயாணமா ?
நானும் செட் செட்டாக, தோய்த்து அடுக்கி எடுத்துக்கொண்டு, என் நாத்தனார், அவர் கணவன், என் பெண், கணவருடன் கிளம்பினேன்…..
உங்களையெல்லாம் மனதில் சுமந்துக்கொண்டு…..
நல்லபடியாக, யாத்திரையை முடித்து, உடனே அதை பற்றி எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நினைவு தொடக்கத்திலிருந்தே மனதில் இருந்தது….

சாஸ்திரப் பிரகாரம் அஷ்ட விநாயக் தரிசனத்திற்கு புறப்படுபவர்கள், முதலில் தரிசிக்க வேண்டியது ” மோர்காவ் ”

சாஸ்திர படி, அஷ்ட வினாயகர்களையும், இந்த வரிசையில் தான் தரிசிக்க வேண்டுமாம்.
முதலில், மோர்காவில் உள்ள மோரேஷ்வர்
அடுத்து, சித்தடேக்கில் உள்ள சித்திவிநாயக்
பாலியில் உள்ள பல்லாலேஷ்வர்,
மஹடில் உள்ள வராத விநாயக்
தேஊர்ல் உள்ள சிந்தாமணி,
லேன்யாத்ரி மலை மேல் உள்ள கிரிஜாத்மஜ்
ஒசர் எனும் இதத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஷ்வர்
ராஞ்சன்காவில் உள்ள மகாகணபதி

இவற்றை முடித்துக்கொண்டு மீண்டும் மொறேஷ்வரை தரிசனம் செய்ய வேண்டுமாம். அப்போது தான் யாத்திரை பூர்த்தியானதாக கூறுகின்றனர்.

மும்பையிலிரிந்து, புறப்பட்டு நேராக ‘ மோர்காவ் ‘ என்ற இடத்தை அடைந்தோம் …மோர் என்றால், மயில்…. அங்கிருக்கும் கணபதியின் திருநாமம் ‘மோரேஷ்வர் ‘ அல்லது ‘மயூரேஷ்வர் ‘
மயில் மீது அமர்ந்து சிந்து என்கிற அரக்கனை வீழ்த்தியதால் இவருக்கு மயூரேஷ்வர் என்று பெயர். இந்த ஊரின் வடிவம், ஒரு காலத்தில் மயில் போன்று இருந்ததாலும், இங்கு மயில்களின் கூடம் அதிகம் இருந்ததாலும் இந்த ஊருக்கு மோர்காவ் என்று பெயர் ஏற்பட்டது . மோர் என்றால் மயில், gaon என்றால் கிராமம் …
அருமையான தரிசனம் கிடைத்தது, அந்த கோயிலில் ஒரு பலகையில், ‘இங்கு VIP தரிசனம் கிடையாது ‘ என்று எழுதி வைத்திருந்தார்கள்…..
எங்களுக்கு ஒரே ஆச்சர்யம், மகிழ்ச்சி….மராட்டியர்களை நான் புரிந்துகொண்ட வரையில், ரொம்பவும் எளிமையானவர்கள்.
அனாவச்யமாக, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, இடித்துக்கொண்டு போகவில்லை. வரிசையில், அமைதியாக தங்கள் முறைக்காக காத்திருந்தனர்.
சிலர் ‘கண்பதி பப்பா மோரியா ‘ என்று அழைத்துக்கொண்டிருந்தனர் ….. எளிமையான பக்தி….

அடுத்து, புனெயிலிரிந்து, கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனே – சோலாபூர் மார்கத்தில், உள்ள ‘சித்தடேக் ‘இங்குள்ள மூர்த்தி ‘சித்தி விநாயக் ‘
மது கைடபர்களை வெல்லுவதர்க்காக மஹா விஷ்ணு, சித்தடேக் மலை மேல் இருக்கும் விநாயகரை துதித்தாக சரித்திரம்
இங்கு தான் ப்ருஷந்தி என்ற முனிவரும், வியாச முனிவரும் தவம் புரிந்து, சித்தி அடைந்தார்களாம் .
இந்த கோயில் வடக்கு முகமாக அமைந்திருக்கிறது. பேஷ்வா மன்னர்களால் கட்டப்பட்டது. அஹமத்நகர் district இல் உள்ள கர்ஜத் தாலுக்காவில் ‘பீமா’ ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த கோயில். இதன் சுற்றுப்புற சூழல் மிக அருமையாக உள்ளது…..எங்கும் பசுமை ..
போகும் வழியில், ஓரிடத்தில் நிறுத்தி, அதாங்க….இட்லி மிளகாய் பொடியை ஒரு கட்டு கட்டினோம் … என் நாத்தனார், வெந்தய கீரை சப்பாத்தியும் தக்காளி தொக்கும் கொண்டு வந்திருந்தார்….
பெட் சீட் ஒன்றை விரித்துக்கொண்டு, கடையை விரித்தோம்……
சாப்பிட்டு முடித்து, சற்று கை கால்களை நெட்டி முறித்து, (என்னமோ நாங்கள் தான் ஒட்டினாற்போல )!!!! ரிலாக்ஸ் செய்துக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்து ‘ராஞ்சன் காவ் ‘…இது தான் கடைசியாக பார்க்கவேண்டிய கோயில் என்றாலும் நேரத்தை மிச்சப் படுத்துவதற்காகவும், அலுவலகத்தில் லீவ் இல்லாத காரணத்தினாலும் நாங்கள் ஷார்ட் கட் செய்தோம்….
இங்குள்ள கணபதியின் பெயர் ‘ஸ்ரீ மகாகனபதி ‘
.இந்த இடத்தில் தான் சிவபெருமான் கணபதியை துதித்து த்ரிபுராசுரன் என்ற அரக்கனை கொன்றாராம்.
கிழக்கு முகமாக அமைந்திருக்கும் இந்த கோயிலின் நுழைவாயில் மிக விஸ்தாரமாக உள்ளது. சந்நிதியின் வாசலில், ஜெய விஜயர்களின் மூர்த்திகளும் உள்ளன…
சூரியனின் கிரணங்கள் நேராக விக்ரஹத்தின் மேல் விழுவது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த கோயில்.

இங்கிருந்து புறப்பட்டு, தேஊர் என்ற இடத்திற்கு பயணமானோம்.
இங்குள்ள மூர்த்தியின் பெயர், ‘சிந்தாமணி ‘
இங்கு வரும் பக்தர்களின் கவலைகளை தீர்த்து, மன சாந்தியை அளிப்பவர் இவர்.
புராணத்தின் கூற்றில், கபில மகாரிஷியிடமிருந்து, குணா என்கிற இளவரசன் ஒரு சிந்தாமணி ஆபரணத்தை களவாடினானாம். அதை இங்குள்ள கணபதி கபிலருக்கு மீட்டுத் தந்தாராம்.ஆனால் அதை திரும்ப வாங்க மறுத்து விட்டாராம் கபில மகரிஷி. ஆனால் விநாயகரை சிந்தாமணி என்று அழைத்தாராம். இவையாவும், ஒரு கதம்ப மரத்தடியில் நிகழ்ந்ததால், இந்த இடத்திற்கு ‘கதம்ப நகர் ‘ என்று ஒரு பெயரும் உண்டு.
இன்னொரு புராண கூற்றின் படி, ஒரு முறை ப்ரம்ஹ தேவன் மன உளைச்சலுக்கு ஆளான பொது, கணபதியை வேண்டினாராம், அவரும், அவரின் சிந்தைகளை தெளிவுபடுத்தியதால், சிந்தாமணி ஆனார்.

நாங்கள் இன்று தரிசித்த கோயில்கள் எல்லாமே, நாள் முழுவதும் திறந்திருந்தன.
பிரசாதம், சந்நிதியில் கிடைக்கும், தேங்காய் துண்டங்களும், சக்கரை கட்டிகளும் தான். அனால் வெளி ப்ரஹாரத்தில், கொழக்கட்டை போன்ற பிரசாதங்கள் சில கோயில்களில் கிடைத்தன.
ஓரிடத்தில், டீ , காபி கூட கிடைத்தது.
தாங்கும் வசதிகள் என்று பார்த்தல், எல்லா கோயில்களுக்கு வெளியேயும் லாட்ஜ்கள் இருக்கின்றன.. நாங்கள் அங்கு தங்காததால், எவ்வளவு ஆகும் என்று கூற முடியவில்லை.
சாப்பிடுவதற்கு, நல்ல ஹோடேல்களும் ஆங்காங்கு உள்ளன.

இந்த நான்கு கோயில்களை முடித்துக்கொண்டோம் முதல் நாள். நிறைவாக இருந்தது…அன்று ஒரு செவ்வாய் கிழமை ஆதலால், எல்லா கணபதி கோயில்களிலும், ஓரளவு கூட்டம். செவ்வாய் கிழமை கணபதிக்கு விசேஷமான நாளாக பின்பற்றப் படுகிறது . நான்கு கோயில்கள் முடித்துவிட்ட திருப்தியில், ஹோட்டல் ரூமில் வந்து, நல்ல நினைவுகளுடனேயே, நித்திரையில் ஆழ்ந்தோம்.

நீங்களும் இளைபாருங்கள்……
நான் மீண்டும் மற்ற நான்கு கோயில்களின் தொகுப்பினை தயார் செய்துக்கொண்டு உங்களை சந்திக்கிறேன்.

யாத்திரை தொடரும் …………….(ஒரு சீரியல் எபக்ட் கொடுக்க தான் )