Tag Archives: வயது

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

கப்பலா, சிப்பலா?

இது மனதை சற்று கனமாக்க கூடிய பதிவு. அதே சமயம், மனதிற்கு தைரியமும், நம்பிக்கையும் தரும் என்று முயற்சிக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்கிற தத்துவத்தை முன் நிறுத்தியும் எழுதுகிறேன்.

கப்பல், எல்லோர்க்கும் தெரிந்தது. சிப்பல், இன்றைய தலைமுறை அறிவார்களா என்று தெரியவில்லை.

வீடுகளில், அந்த காலத்தில், வெண்கல பானையில் அரிசி வடிக்கும் போது, அதன் மேல் மூடவும், சிறிது சிறிதாக எடுத்து பரிமாறவும், இந்த சிப்பல் என்ற தட்டு உபயோகித்தார்கள். ஒரே தட்டில், ஒரு பக்கம் ஓட்டைகள் இருக்கும், ஒரு பக்கம் இருக்காது. பொங்கிய சாதத்தில் இருக்கும் அதிகப்படி கஞ்சியை இந்த ஓட்டைகள் வழியாக வடித்தார்கள். சரி இப்போது சிப்பல் என்றால் என்ன அதில் கொஞ்சம் தான் கொள்ளும் என்று தெரிந்தது.

சமீபத்தில், தோழி சாந்தி ராமச்சந்திரன் (சாந்த்ராம் என்று இன்ஸ்டா கிராம் குடும்பத்தில் பிரபலமானவர்) அவர்களின் தம்பி இறைவனடி சேர்ந்தார். புற்றுநோயுடன் போராடி, தன்னால் இயன்றவரை எதிர்த்து இறுதியில் தளர்ந்தார். அன்னாருக்கு எனது நமஸ்காரங்கள்.

Buddy , my brother lost his battle against cancer என்று சாந்தியிடமிருந்து ஒரு நாள் எனக்கு செய்தி. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று சொல்லிவிட்டு, அவரை இரண்டு வாரங்கள் கழித்து நேற்று தொலைபேசியில் அழைத்தேன். அரை மணி பேச்சு, இருவருக்குமே ஆசுவாசத்தை கொடுத்தது. ஒரு அக்காவாக, அவர் வருத்தம், அவரின் வேதனை என்னை உலுக்கியது. அவர் பெற்றோரை நினைத்து எனக்கு, மிக அதிக வேதனையாக இருந்தது. புத்ர சோகம் கொடுமையிலும் கொடுமை. தொண்ணூற்றி மூன்று வயது தந்தை பார்க்க வேண்டியது இல்லை தன் மகனின் மரணம். என் அம்மம்மா, இறந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நூற்றி மூன்று வயது வாழ்ந்தவர்.

தன் கணவரின் மரணம்,

தன் தலைச்சன் மகனின் மரணம்,

தன் இரு மாப்பிள்ளைகளின் மரணம்,

தன் தலைச்சன் மகளின் மரணம், இப்பிடி ஐந்து மரணங்கள் பார்த்தவர்.

ஆனால், நான் ஏன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டதே இல்லை. அது அவர்கள் கர்மா, அதை பார்க்க வேண்டியது என் கர்மா என்ற கண்ணோட்டம்.

நான் அம்மமாவிடம் கற்ற மிக முக்கியமான வாழக்கை பாடம்.

இது கலி காலம் மா, கனியிருக்க காய் உதிரும் என்பார் மாமனார். கனிந்த, முதிர்ந்த, பெரியோர்கள் இருக்கும் போது, பிஞ்சு காய்களான இளம் வயதினர் மரித்தல்.

சாந்திக்கு ஆறுதல் கூறும் போது, என் மாமனார் இச்சந்தர்பங்களில், கூறும் வார்த்தைகள், வழக்கு சொற்கள் கூறினேன்.

ஐயோ ஐயோ…இன்னார் இள வயதில் மரித்தார் என்று நான் அனத்தும் போது,

என்னம்மா பண்ணுவது, சிலர் கப்பலில் கட்டிக் கொண்டு வருவார்கள், சிலர் சிப்பலில் கட்டிக்கொண்டு வருவார்கள். யாருடையது எப்போது தீருகிறதோ அப்போது கிளம்ப வேண்டியது தான். கட்டிக்கொண்டு வருவது என்று குறிப்பிடுவது நம் கர்மா என்று கொள்ளலாம். கப்பல் அளவு தொலைக்க வேண்டிய கர்மாக்களை தொலைத்தால் தானே, அடுத்த கட்டம்.கொண்டு வந்தது தீரும் வரை, இருந்து/ வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒரு வேளை, கொஞ்சம் தான் கழிக்க வேண்டியதிருந்தால், வந்தான் வென்றான் சென்றான் என்று துரிதமாக கிளம்பி விடலாம். இல்லையென்றால் என் அம்மம்மா போல, கண்டு, முதிர்ந்து, அனுபவங்களை ஏற்று, அதை என் போன்ற பேத்திகளுக்கு, கற்பித்து, பின் விடைபெறலாம்.

எது எப்படியோ, புறப்பும் இறப்பும் இன்றும் ஒரு புதிர். அதற்கு விடை கிடைத்து விட்டால், நாம் கடவுள். காலம் நம் கையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

சாந்த்ராம் இப்போது இடும் பதிவுகளில், #thistooshallpass. அது தான் நிஜம். எவ்வளவு அழுது புரண்டாலும், அடுத்த வேளை பொழுது விடியும், நாக்கு காப்பியை தேடும், பசி எட்டிப் பார்க்கும், மௌனம் கலையும், சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை மறுபடியும் அமையும். எதுவும் எதற்காகவும் நிற்காது.

என் அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன், ஒரே மகளான நான், என் அம்மாவின் தோளோடு தோள் நின்று, சமாளித்தேன். ஆனால், இரவில் அழுது மறுகி, அப்பாவின் மூச்சு சீராக உள்ளதா என்று, அருகில் சென்று பார்ப்பேன். செல்ல அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை எப்பிடி கொண்டு செல்வது? சாத்தியமே இல்லையே என்று அன்று நினைத்தேன். ஆனால், அப்பா இறந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டன. அவர் இறந்த பதின்மூன்றாவது நாள் அம்மாவை சென்னையில் விட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். எது நின்றது?உப்பும் தண்ணியும் ஊற ஊற எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்ன அம்மாவை தனியாக விட்டுவிட்டு போகும் போது மனது கனத்தது.

வந்த ராஜுவும், ராமசாமியும் (சாந்தியின் தம்பியும், என் அப்பாவும்) தங்கிவிட்டுருந்தால், நமக்கு ஆனந்தமே. ஆனால் இல்லையே.. அது நம் முடிவு இல்லையே. இனி அவர்களின் நினைவும், வாழ்க்கையை எப்பிடி எதிர் கொண்டார்கள், இருவரும் புற்று நோயை எப்பிடி எதிர்த்து போராடினார்கள் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும்.

கவிஞர் சொன்னது போல

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் எது…

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்,

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்.

சின்ன தோல்விகளுக்கெல்லாம், துவண்டு போவது நம்மை எங்குமே இட்டு செல்லாது. தோல்வி என்ற வார்த்தையை அகற்றி விட்டு, அது ஒரு பாடம் என பார்க்க பழகுங்கள்.

தளராதீர்கள் நண்பர்களே, இதுவும் கடந்து போகும்.

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

டையின்  சிறப்பு …ஓஹோ…!!!
நம்மில் பலர் ” டை”  போடுவதால் தான் கூந்தலின் நிறத்தை அப்பிடியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
நரை முடி வயது முதிர்வதையும், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தையும் குறிக்கும் என்ற காலம் போய் , முதிர்வதை, விரும்பாதவர்கள்/ ரசிக்காதவர்கள் அதற்க்கு கலர் அடிக்க துவங்கினார்கள்.
இளநரை ஒரு பெரும் பிரெச்சனை. இன்றைய டென்ஷன் கலந்த வாழ்க்கையில்,
( வாழ்வின் பெரும் பகுதி டென்ஷனில் தான் செலவழிகிறது ..நர்செரி  படிக்கும் குழந்தைக்கு கூட டென்ஷன் தான்.)
இளநரையை  மறைக்க தேவைபடுகிறது ‘டை’.
எது எப்படியோ,
எனக்கு எதற்கு இதெல்லாம்? என்றோ ஒரு நாள் நான் இப்படித் தானே தோற்றமளிக்கப்  போகிறேன் என்று சில மாதங்கள் டை பக்கமே போகாமல் இருந்தேன்.
என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் !! என்று கணவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேசினேன் !
முதலில் என்னை நானே ஏற்றுக்கொண்டேனா என்றால் 80% ஒப்புக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
நீண்ட முடியும், இருபது நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டி இருப்பதும் அலுப்பை தந்தது…..
இடையிடையே, தலைமுடிக்கு டை போடாததால் இந்த உடை அணியமுடியவில்லையே ….இந்த நகை, ஜிமிக்கி இவையெல்லாம் அணிய முடியவில்லையே என்று சில பல தடைகள் வந்தது உண்மைதான்.
காதில் வைரத்தோடும் மூக்கில் வைர மூக்குத்தியும் நிரந்தரமாகிப் போயின …அழகாகத்தான் இருந்தது… அனால் ஜிமிக்கி அணிந்தால் பாந்தமாக இல்லாதது ஒரு குறை.. அவ்வளவு பிடிக்கும் ஜிமிக்கி…
” நீ உன் முடியை சர்ப் எக்ஸ்செலில்  தோய்த்தாயா ” என்ற ஒருவரது நாகரீகமில்லாத பேச்சு மனதை காயப்படுத்தியது.
இரண்டு நாட்கள் புலம்பிவிட்டு புறக்கணித்தேன் .
என்னைப்  பார்த்து பேசாமல், என் மண்டையையே பார்த்து பேசும் என்னவர் மேல் கோபம் கோபமாக வந்தது .
பார்த்தவுடன், ‘அய்யய்யோ , என்னாச்சு, டை போட நேரமில்லையா ‘ என்று கேட்பவர்களுக்கு, மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தேன்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விமர்சனம் தோழி ஒருத்தியிடமிருந்து,…
‘ வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா ‘ என்றாள்
‘ ஏன் ஒன்றும்  இல்லையே   நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்றேன்…’
‘இல்லை …..டை போடுவதை கூட விட்டுவிட்டாயே என்று கேட்டேன் ‘ என்றாளே  பார்க்கலாம்…..!!!!!!
தூக்கி வாரி போட்டது எனக்கு… எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள் இந்த மனிதர்கள்….
சிலருக்கு விரிவாகவும்
சிலருக்கு சுருக்கமாகவும் ,
சிலருக்கு புன்னகைத்தும்
சமாளிதுக்கொண்டிருந்தேன்,
முதலிலிருந்தே என் குழந்தைகளின், ஏக போக, ஆதரவு….
‘ நீ இப்பிடித்தான் மா நன்னா இருக்கே ‘ என்று…
அனால் ஒவ்வொரு முறை, யாரேனும் விமர்சிக்கும் போது  வந்து அவர்களிடம் கூறக் கூற அவர்களுக்கு ஒரு சமயத்தில், சலிப்பாக இருந்தது….
‘ உனக்கு வேனும்னா  கலர் பண்ணிக்கோ மா ‘ என்று கூறத் தொடங்கினார்கள்….
மூன்று மாதங்கள் தாக்கு பிடித்தேன் …..அதற்க்கு மேல் முடியவில்லை…
சரி திரும்பவும் போட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்து, மறுபடியும் துடங்கினேன் ..
ஆஹா….. என்ன ஒரு மாற்றம்…
எனக்கே நான் ப்ரெஷ்ஷாக  இருப்பது தெரிந்தது….( மறுபடியும் ஜிமிக்கி ) !!!!!
என்னவர் ஒரு பெரிய பெருமூச்சு விட்டார் …… ஒரு ஐம்பது வயசு வரைக்கும் போட்டுக்கோ ….அப்பறம் பாக்கலாம்…..!!!! ( இதெப்படி இருக்கு ….)
வெளியே இறங்கினால், நண்பர்களின் கண்களில் நிம்மதி….
பக்குவம் என்பது அவரவர் மனது சம்பந்தப்பட்ட விஷயம்
சரி, நாப்பத்தி மூணு வயசில், தொண்ணூறு வயது தோற்றமளிக்காமல் இருக்கலாமே என்று, தொடர்ந்து கலர் செய்ய தொடங்கிவிட்டேன்…..
மனப்பக்குவம் தொண்னூறு போல் உள்ளது என்ற நிம்மதியில் !!!!!!