Monthly Archives: மே 2018

கருமையே அழகு காந்தாலே ருசி …..

கண்னா கருமை நிற கண்ணா…என்று விஜயகுமாரி 50 களிலோ 60 களிலோ ஒரு படத்தில் பாடுவார். தான் கருப்பாக பிறந்துவிட்டதற்காக தன்னை எல்லோரும் வெறுப்பதாக.

அழகாக பிறந்த வாழைக்காய் அன்று என் கையில் அகப்பட்டு இந்த பாடலை பாடியது.

எல்லா நாட்களும் ஒரு போல இருந்து விடுவதில்லை. ஆனால் எனக்கு பிடிவாதம் அதிகம்… எவ்வளவு கஷ்டமான நாளாக இருந்தாலும், மண்டையை தலையணையில் சாய்க்கும் போது எனக்கு நானே சொல்லிக் கொள்வது…

நாளைய பொழுது நன்றாக விடியும் !!!!

சரி…வாழக்காய்க்கு வருவோம்….

முதல் நாள் முழுவதும் ஏன் ஏன்… என்று அவ்வப்பொழுது விடை தெரியாது நடக்கும் சம்பவங்களில் ஒன்று நடந்து, மனம் முழுவதும் துக்கம் பரவி , கண்களை மூடினால் மனம் பதறி, புரண்டு புரண்டு, கனத்த மனதுடன் எழுந்து, சமைக்க முற்ப்படும்போது தாளித்து கொட்டிய உளுத்தம்பருப்பு ஒரு நொடியில் கருத்து, உள்ளே போக வேண்டிய வாழைக்காய், உள்ளே பாதி வெளியே பாதி என்று விழுந்து, என்னவோ போங்களேன்…. கறுத்து .. நன்றாக வேகாமல், என்னவெல்லாம் ஆக முடியுமோ அவ்வளவு ஆயிற்று…. அதையும் விடாமல் தின்றுவிட்டோம் என்பது வேறு கதை.

ஆனால், அது தானே யதார்த்தம் ?

சில நாட்கள் இப்படியும் இருக்கும். இன்று நான் என்ன சமைத்தேன் பாருங்கள் என்று எப்போதும் ஒரு போல அழகாக அமைத்த தட்டில் எல்லாம் அழகாகவே காட்ட முடியுமா?

ஒரு நாள் தீயிந்து விட்ட வாழைக்காயையும் காட்டுவோம் என்று தோன்றியது.

பக்குவம் இல்லாதவர்களுக்கு, சோஷியல் மீடியா தான் நிஜம் என்று நம்பத் தோன்றும் . எல்லாமே அழகாக, அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஆனால் இப்போது சிலர் அவ்வப்போது தெரிவிக்கிறார்கள், இந்த சோஷியல் மீடியாவை தாண்டி நானும் சராசரி மனித இனம் தான், என் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளன, கண்ணீரும் கவலையும் உள்ளது, நாங்களும் கணவன் மனைவி சண்டைகள் போடுவோம், எங்கள் குழந்தைகளுக்கும் உடல் நலம் கெடும்,எங்களுக்கும் அடி சருக்கும், எங்களுக்கும் மூட் அவுட் ஆகும்,எங்கள் வாழ்விலும் ரோஜாக்கள் முட்களுடன் தான் உள்ளன.

தீயிந்து போவதோ, துக்கம் வருவதோ, உடைந்து போவதோ, எல்லோர் வாழ்விலும் நடக்கும்.

ஆனால் 2 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, எழுந்து வேலையை பார்க்க வேண்டியதுதான். உனக்கென்ன, சொல்லி விட்டாய்…என்கிறீர்கள்… கேட்கிறது.ஆனால் உண்மையை சொல்லுங்கள். நீங்களும் அதை தானே செய்தீர்கள்/ செய்கிறீர்கள்.

அதான் அதே தான்……என் பாட்டி, எங்கள் காலனி நாகராஜன் மாமா, போன வாரம் மகனையும் மருமகளையும் பரி கொடுத்த பெற்றோர், (கல்யாணம் ஆகி இரண்டே மாதம் ஆன ஜோடி, ஒன்றாக உயிரை விட்டன)கணவனை பறி கொடுத்த என் தோழி,எல்லோரும் தங்களை ஆசுவாச படுத்திக்கொண்டு எழுந்து நடக்கிறார்கள்.நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவ்வப்போது ஒரு ரிமைண்டர் தேவை படுகிறது. மகான்கள் , வாழ்வியல் நிபுணர்கள் சொல்லாததை ஒன்றும் நான் சொல்லி விடவில்லை. ஆனால் என் எழுத்து உங்களில் ஒருவருக்காவது ஆறுதல் அளித்தால் அது என் பாக்கியம்.

ஈன்ற பொழுதினும்….

ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன் மகன்/மகள் சான்றோன் எனக் கேட்டத் தாய்.

வேறென்ன வேண்டும் ஒரு தாய்க்கு?

தன் உதிரத்தை உணவாக்கி கொடுத்து வளர்த்து தன் பிள்ளை நல்லவனாக அல்லது நல்லவளாக வாழ்வில் திகழ வேண்டும் என்பதை தவிர வேற ஒரு எண்ணம் எந்த தாய்க்கும் இருக்காது.

என் இரண்டாவது கண் இன்று தன் மனதில் உள்ளதை, தன் முதல் வகுப்பு ஆசிரியையை நினைவு கூர்ந்து பெற்ற தாய் அல்லாத தாய் போன்றவள் என்கிற தலைப்பில் ஏழுதியிருப்பது மிக பெருமையாக இருக்கிறது.இங்கே படியுங்கள் அவள் எழுதியதை

https://www.timesofamma.com/

கண்ணீர் மல்க மல்க படித்தேன்.

அந்த ஆசிரியைக்கு நானும் என்றும் கடமை பட்டிருக்கிறேன்.

பிள்ளைகளை பொறுமையுடன் வளர்க்க வேண்டுகிறேன்.

நீங்கள் பெரியவர்கள், உலகம் கண்டவர்கள். அவர்கள் இப்போது தான் பூத்திருக்கிறார்கள்

உங்கள் கண்ணோட்டத்தில் அவர்களையும் பார்க்க சொல்லி வற்புறுத்தாதீர்கள். உங்கள் வயது வரும் போது பார்ப்பார்கள். நம்புங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரின் கண்ணோட்டத்தில் பார்த்தீர்களா …?

இல்லியே …அப்பறம் இப்போது ஏன் ஏதிர்பார்க்கிறீர்கள்?

பொறுமை..தலையாய குணம்.

சும்மா வருவது இல்லை இந்த பதவி

இன்று நீங்கள் காட்டும்.பொறுமையும் அன்பும் நாளை நல்ல மரமாக வளர்ந்து, பின்னாளில் வ்ருக்ஷமாக விரிந்து பரந்து இருக்கும் போது உலகம் ஹா ஹா ஹா என்று அதன் பெருமை பேசும்.

சமீபத்தில், என் நண்பர்கள் மீனாவும் ரங்காவும் தன் மகளை எப்பிடி வளர்த்துள்ளார்கள் என்பதை முகநூலில் படித்தபோது மெய் சிலிர்த்தது. சின்ன வயதில் தானே செய்த ஆபரணங்களை விற்று வந்த காசில் தன் தெருவில் உள்ள தள்ளு வண்டி இஸ்திரி காரரின் மகளுக்கு படிப்பிற்கு அளித்துள்ளாள் அந்த குழந்தை.

எங்கிருந்து வரும் இந்த குணம் 10 -12 வயதில். ?

அதற்கான மார்க்கம் காண்பிக்கும் போது மட்டுமே.

மார்க்கம் யார் காண்பிப்பார்கள்?

பெற்றவர்கள் மட்டுமே!

வாழ்ந்து காட்ட வேண்டும் பிள்ளைகளுக்கு. ஓதினால் மட்டும் போதாது.

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே

என்று என் தோழி மீனாவுக்கு எழுதினேன். மெய்சிலிர்த்து கண்ணீர் வந்தது என்றாள். ஆனந்த கண்ணீர்.

அந்தப் பொழுதிர்க்காக தவம் கிடக்கிறோம்.அன்று மனதளவில் தளர்ந்த என் குழந்தை இன்று எனக்கு தாய். காலம் மாறும் என்று நான் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை.வாழ்ந்து காட்டி வெற்றி பெறுங்கள்.யார் சொன்னார்கள் படிக்கும் காலத்தில் மட்டும் தான் தேர்வுகள். நீங்கள் பெற்றோர் என்றால் தினம் தினம் தேர்வு தான். எல்லாமே அவுட் ஆப் சிலபஸ் தான் ,😎இது எனக்கு தெரியாதே என்று கையெல்லாம் விரிக்க முடியாது. கூகுளை கேட்காதீர்கள. உங்களை பெற்றவர்கள், அவர்களை பெற்றவர்களை கேளுங்கள். அத்துடன் கொஞ்சம் இந்த கால கணக்கு படி இதமாக பதமாக பொறுக்கும் சூட்டில் குழந்தையை குளிப்பாட்டுங்கள் !!!!வங்கியில் நாம் வைத்திருக்கும் சேவிங்ஸ் அகௌண்ட் போல தான். சிறுக சிறுக சேமிப்பை சேருங்கள் நாளை ஒரு பெரிய பொருள் ஈட்டுவீர்கள்…. வட்டியும் முதலுமாக….என் அனுபவத்தை இங்கே பதித்துள்ளேன். என்னை விட வயதில் மூத்தோர் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். என்னிலும் இளயவர்களுக்கு என் ஆசிகள். நீங்கள் தளரும் போது என்னை தொடர்பு கொள்ளுங்கள். உதவ காத்திருக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.