Monthly Archives: நவம்பர் 2012

பச்சை மிளகாய் கற்றுத்தந்த பாடம்……

தோழி, அக்கா , மாமி, ஆண்ட்டி …எப்பிடி கூப்பிடுவது அவர்களை?

பெயர் கீதா
புதிதாக எங்கள் அபார்ட்மென்டில் குடித்தினம் வந்திருக்கிறார்கள்.
தமிழ் பேசுவதால், ஒரு அலாதி அன்யோன்யம் ஏற்ப்பட்டு, நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறோம்….
என்னை விட 13 வயது பெரியவர்கள்..பெரிய மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார்…
வெள்ளந்தியான மனசு, எல்லோரையும் வாய் நிறைய பாராட்டும் குணம், மற்றவர்களிடம் இருக்கும் திறமையை, வியந்து வியந்து பேசுகிறார்….
என்னையும் தான்…!!! [ அதானே பார்த்தேன், இல்லேனா நீ ஏன் அவரை பற்றி எழுத போகிறாய் என்று கேட்பவர்கள் கேட்கட்டும் ] ……
ஏதோ, சத் விஷயங்களும், சத்தான உணவையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம் இந்த இரு வாரங்களாக.
நான் போட்டுக் கொடுத்த டப்பாவில், தான் நேற்று தயிர் வடை செய்து எடுத்து வந்திருந்தார் அவர்.
அருமையாக இருந்தது, மிதமான காரம், புளிப்பில்லாத தயிர், நல்ல அலங்காரம்….எல்லாம்…..
ஒன்று தின்றுவிட்டு, அடுத்ததை குற்ற உணர்வுடன் தட்டில் வைத்து, பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு,
” போனால் போகட்டும் இதெல்லாம் என்ன தினமுமா தின்ன கிடைக்கிறது ” என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு [????] அடுத்ததையும் வெட்டினேன்…
நடுவிலேயே, வாயில் ஒரு அரைபடாத பச்சை மிளகாய் துண்டு….. சரி தயிர் வடை தான் சாதுவாக இருக்கிறதே என்று, பச்சை மிளகாய் கடித்தது கடித்ததாகவே இருக்கட்டும் என்று மேலும் கடித்தேன் [ திமிரு தான் வேற என்ன ]?
விக்கி திக்கி, தண்ணீர் குடித்து ஒரு வழி ஆனேன்….
ஆனால், யோசித்து பார்த்தல், பச்சை மிளகாய் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தது ……
சுவையான உணவின் நடுவில் நாவில் அகப்படும் பச்சை மிளகாய் போல தான் வாழ்க்கையில் சில சம்பவங்கள் இல்லையா…..?
எதிர்பாராத சமயத்தில், நம்மை கதி கலங்கக்செய்யும் நிகழ்வுகள்…..
அப்பிடி, கதி கலங்க செய்து, அதை எதிர்க்கொண்டு, மீண்டு எழுந்து, தன்னை சுதாரித்துக்கொண்டு, தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் எதார்த்தமாக வாழச் செய்து,
உள்ளே அழுது, வெளியே சிரித்து …..இந்த ஜென்மத்திலேயே, இரண்டாம் முறை பிறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வந்தார்கள்…..
தோழி ஒருத்தி, தன தகப்பனாரின் எண்பதாவது வயது [ சதாபிஷேக ] வைபவத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம்,
தன பிள்ளையின் பள்ளியில் மீட்டிங் என்பதால், தன் கணவர் போவதாக சொன்னதால், தான் வேலைக்கு சென்றாள் ….
வீட்டிலிருந்து கிளம்பின கணவன், பொட்டலமாக திரும்பி வந்தான்…..
விபத்தில் விழுந்து விட்டான் என்று தெரிந்த நேரத்திலிரிந்து, அவன் பெற்றோருடனும், அவளுடனும், இருந்து
‘ ஏன் ஏன் இப்பிடி ஆகா வேண்டும் ” என்று யோசித்து யோசித்து, பதில் புரியாமல் போக…. அவர்களுக்கு, பலமாக இருப்பது மட்டுமே இப்போது நான் செய்ய வேண்டியது என்று தோன்றிற்று ….செய்தேன்….
பிள்ளைகள் இருவரும் சின்னன் சிறியவர்கள்….. மூத்தவள் ஆறிலும், மகன் இரண்டிலும்…..
ஆனால் எதுவும் நிற்கவில்லை…..காலம் ஓடிக்கொண்டிருக்கிறது….பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்…
அவளை பார்க்கும் போதெல்லாம் எட்டிப்பார்க்கும் மேலே சொன்ன கேள்வி…..ஆனால் அவளுக்கு தேவை என் அனுதாபம் இல்லை….. என் சப்போர்ட் தான்…
ஏதோ இன்று வரை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதை……..
இன்னொரு தோழி, தனக்கு எது வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வாளோ அதால் பாதிக்க பட்டு…. அழுது, புலம்பி, பிரார்த்தனை செய்து, இப்போது, நல்ல படியாக இருக்கிறாள்….
புற்று நோய் இன்று எல்லோர்க்கும் வருகிறது. எவ்வளவோ, விழிப்புணர்வு இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு வந்தால், முகத்தில் அறைந்தார் போல் இருக்கிறது….
அப்படிதான் இருந்தது எனக்கும்….
என்ன சொல்லி தேற்றுவது அவளை???….புரியாமல் விழித்தேன்.
ஆனாலும், அவளை தேற்றுவதற்காக நான் தைரியமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவளை பார்த்து, கட்டிக்கொண்டு, [ கட்டி பிடி வைத்தியம் தான் வேறென்ன ???]
‘ஆச்சு முடிஞ்சு போச்சு, இனி புது பிறவி, நல்லதையே நினை…ஏதோ இப்போதே தெரிந்ததே, என்று சந்தோஷப்படு ” …. என்று கூறி தேற்றி …
நன்றாக உள்ளதாக, பழயபடி நீ வளைய வருவதாக நினதுக்கொள் ….விடாது, சிந்தனை செய் என்று கூறி….. கிரேயடிவ் விசுவலைசேஷன் பற்றி நிறைய பேசி, தைரியம் ஊட்டினேன் ….
கொஞ்சம் கொஞ்சமாக, தேறி, நடு நடுவே தளர்ந்து, பின் நிமிர்ந்து, திரும்பவம் சறுக்கி, திரும்ப எழுந்து….. இப்போது தன்னை தானே தூக்கி நிறுதிக்கொண்டிருக்கிறாள் …..
வைத்தியம் முடிந்து, பாப் தலையுடன் என்னை பார்க்க வந்த போது …மகிழ்ச்சியாக இருந்தது……..
அனால் இதில் வித்யாசப் பட்டவர்களும் உண்டு…..
காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழிக்காக மட்டுமோ என்ற தோன்றும் அவளை பார்க்கும் பொது…..
ஆட்டிசம் என்னும் குறை பாடுடன் பிறந்த தன மகனை வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தக் கூட வெட்க்கப்படுபவள் ….
எப்பிடி முடிகிறது…. நாமே நம் குழந்தையை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்….உலகம் எப்படி பார்க்கும்….ஏன் சிந்திக்கவில்லை அவள்…
தன்னை பற்றி அவனே சரியாக உணராததால், அவன் செய்கைகள் அசாதாரணமாக தான் இருக்கும்…. [தெரிந்திருந்தால் செய்வானா???]
அவனை உடலாலும் துன்புறுத்தி …தானும் தன்னை வேதனையில் ஆழ்திக்கொள்கிறாள் ………..
நாம் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் …அதனால் தான் என்னை இந்த குழந்தைகளுக்கு தாயாக நியமித்திருக்கிறான் என்று ஏன் தோன்றவில்லை…
அவன் மட்டும் ‘ஸ்பெஷல் குழந்தை ‘ இல்லை ..இவளும் தான் ‘ஸ்பெஷல் தாய் ‘
தன்னால் முடிந்ததை அவனுக்கு புகட்டி… நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும் என்று ஏன் தோன்றவில்லை…..
என் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது கடினம்…….அவளுக்குள் நெகடிவிடி ஊறிவிட்டது……மாற்றிக்கொள்ளவும் தயாரில்லை…..
யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை… சின்னதும் பெரிசுமாக எவ்வளோ இருக்கின்றன…
எதற்கும் வாடாமல், தைரியமாக வாழ்க்கையை எதிகொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்…
நான் எதையும் புதிதாக சொல்லவில்லை… சொன்னவர்களின் வார்த்தைகள் பசுமரத்து ஆணிபோல் பதிந்ததால், அதை நடை முறை படுத்துவதற்கு முற்படுகிறேன், வெற்றியும் அடைகிறேன் …..
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் ………………..
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்ல
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்…………

பச்சை மிளகாயை கடித்தால் என்ன, ஒரு குலாப் ஜாமூனோ, மைசூர் பாக்கோ கிடைக்கமலா போய்விடும் ?
இது தான் நான் வாழ்க்கையை பார்க்கும் விதம்……..

அப்பம் வடை பொறிஉருண்டை …………

 

அட இது போரும்…முதல்ல களருங்கோ ….பொறி எல்லாம் ஒண்ணு சேர்ந்துதுனா சரியாய் இருக்கும்….

சரியாய் வராது பார்…..

முதல் வாக்கியம் என் மாமியார் …இரண்டாமாவது என் மாமனார்….

கொஞ்ச நெஞ்சம் சமையல் அறிவு இருக்கிற ஆண்பிள்ளைகள் இருக்கிற வீட்டில் எல்லாம் நடக்கற காட்சி தான்….

ரிடைர் ஆகிற வரை தலையிடாதவர்கள்., பின் நிறைய நேரம் இருப்பதாலோ என்னவோ, அவர்கள் பங்களிப்பை அதிகப்படுதுகிறார்கள் !!

வயது, வேறு ஆகிவிடுகிறது ( இருவருக்குமே தான் ) ….அப்பா சொல்வதை அம்மா மறுப்பதும், அம்மா சொல்வதை அப்பா ஏளநிப்பதும் சகஜம் ..

பொறி உருண்டையை பிடித்துவிட்டு, உள்ளங்கையை கொண்டு வந்து காட்டி, “சூட்டோட பிடிச்சாதான் உண்டு ” என்று சொல்லும் போது, ஒரு நாளாவாது அம்மா இப்படி கையை காட்டியதில்லையே என்று எண்ணத் தோன்றும்….!!!

வடைக்கு அரைக்கும் பொது, கொஞ்சம் பருப்பை அரைக்காம, அப்பிடியே போட்டுக்கோ….நல்ல மொரு மொறுன்னு வரும் என்று என்னிடம் வருவார் ..

அப்பத்துக்கு வெல்லம் பாது போடு, இளகிபோச்சுன அலண்டு போகும்….

முந்திரி பருப்பு ஒடச்சு தரவா ………..பாயசத்துக்கு ?

எல்லாத்தையும் சீக்கரமா பண்ணுங்கோ நான் வெளில போய்ட்டு வந்து பெருமாளுக்கு அம்சி பண்ணுகிறேன்……

இந்த வெளக்கெலாம் நகத்தினாதானே நான் ஒக்கார முடியும் ….

வெளக்குல எண்ணெய் ஒழுகர்து பாரு….திரியை நிமிண்டி விடு….

அம்மா விடமிறிந்து ஒரு சத்தமும் வராது…பொறுமை போய்க்கொண்டிருக்கிறதோ என்னமோ….தெரியாது….!!!!!!!!!!!!!!!!!

எல்லாம் முடிந்தபின் எல்லாத்தையும் கொழந்தேளுக்கு கொடேன் ….என்று ஒரு சத்தம் போட்டு விட்டு தான் கிளம்பி விடுவார்.

அவர் வயித்துக்கு ஒன்னும் ஒத்துக்காது எதையும் வளைத்து கட்டி சாப்பிடுவதில்லை….

ஒரு சின்ன தட்டில், ரெண்டு வடை, ஒரு அப்பம் வைத்து எடுத்து வந்து கொடுத்துவிட்டு தான் எடுத்துக்கொண்டார் அம்மா….

ஒருவரை ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாலும், அதில் ஒரு அன்யோன்யம் தெரியும்…..

சும்மாவா 50 வருட தாம்பத்யம் முடித்திருக்கிறார்கள்?????

தொட்டதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்க்கும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு புரியுமா இந்த ஊடல் கலந்த உறவும் அதன் சுகமும்…………….

 

நான் ரசித்த ‘கீதை !!

நொந்து உடலாம் கிழமாகி தளர்ந்தபின்…..

என்று தொடங்கி மிக அற்புதமாக நம் கடைசி காலத்தை  படம் படிக்கும் ஒரு blogpost  என்னுடைய வலை தலத்தில் உள்ளது .

எனது வெளிநாட்டு வாசத்தில் கிடைத்த ஒரு தோழியின் அண்ணன் அகாலமாக மறைந்து விட்ட போது, அவர்கள் வீட்டில் இதை அச்சடித்து ஈமக்க்ரியைகள் நடந்த கடைசி நாளில் எல்லோருக்கும் கொடுத்தார்களாம். அவளை பார்க்க சென்ற பொது, இதை படித்து விட்டு வேறு பேப்பர் இல்லாததால், pizza  விளம்பரம் வந்த பேப்பர் ஒன்றில் அதை அப்படியே எழுதிக்கொண்டு வந்து, ஓரிடத்தில் பதிவு செய்து வைத்தேன். blogger  ஆனா பிறகு, எல்லோரும் படித்து ரசித்து, உணரட்டுமே என்று, இங்கு பதிவு செய்துள்ளேன்.

அப்பிடி உடல் தளர்ந்த பின் செய்ய முடியாததை, உடல் வலுவுள்ள பொது செய்து விடுவது மிக சிறந்தது.

நன்றே செய் அதை இன்றே செய் என்பது போல, செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை ஒத்திப்போடாமல் முடித்து விட வேண்டும்.

பிற்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், மறுபடியும் செய்துக்கொள்வது……

அப்பிடி நான் செய்ய முற்பட்டது தான் உதித் சைதன்யா  அவர்களின் கீதை உபன்யாசம் கேட்க முற்பட்டது.

asianet  tv யில் பல சந்தர்பங்களில் அவர் உபன்யாசம் கேட்டதுண்டு. நான் வசிக்கும் முலுன்டில்  உபன்யாசம் என்றதும் கிளம்ப தயாரானேன்.

”உனக்கு என்ன புரியும், அவர் மலையாளத்தில் பேசுவார்”என்று சொன்னவர்களை மறுத்து,

“எனக்கு புரியும் “என்று கூறிவிட்டு, ( நிஜமாகவே எனக்கு புரியும் ) !!!! புறப்பட்டேன் .

சரியாக 7.30 மணிக்கு தொடங்கிவிட்டார்.

நல்ல நகைச்சுவை கலந்த பேச்சு.

ஆங்கில வார்த்தைகளின் ப்ரயோகம் …..(

நாமெல்லாமும்………….

அப்பிடியே பேசுவதால். உடனே ஒரு நெருக்கம் உண்டாகிறது )

சிறு குழந்தைகளுக்கு கர்ப்பிப்பது போல் உவமானங்கள் ……

வாக்கியத்தின் முற்பகுதியை தான் கூறிவிட்டு பிற்பகுதியை நம்மை நிரப்ப சொல்வது, ( ஒரு நல்ல ஆசிரியர் பள்ளியிலும், அம்மா வீட்டிலும் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை. )

நல்ல தைரியம் …. மற்ற மதங்களை விமர்சித்து நம் ஹிந்து மதத்தின் பெருமையை விளக்குகிறார்

புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இல்லாமல்

” இது தான் கீதை ” என்று நமக்கு நம் level ல் புரிய வைக்கிறார்.

Body , intellect  அண்ட் mind  இந்த மூன்றும் மூன்று தூண்கள், இதில் தான் நம் இயக்கம் இருக்கிறது என்கிறார்.

கடவுளை வெளியே தேடாதீர்கள் என்கிறார்.

நாம் மற்ற மதத்தினரிடமிரிந்து கற்ற சொற்றொடர்கள் தான்….

” நான் கடவுளை நம்புகிறேன்”

“நான் பிரார்த்திக்கிறேன் ”

என்பதெல்லாம்…..நம்மில் கடவுள் இருப்பதால், அவனை வெளியே தேடுவது தவறு என்கிறார்.

(கமல்ஹாசனின் ‘அன்பே சிவம் ” படம் ஞாபகத்திற்கு வந்தது….தவறொன்றுமில்லை…..)

மேலும்

மற்ற மதத்தினர் நம்மை விமர்சிப்பதற்கு  காரணம், அவர்கள் கொண்டாடுவது ஒரு கடவுளை , நமக்கோ பல கடவுள்கள்.

அதற்கு அற்புதமான கதை ஒன்று….

அக்பர் இந்த கேள்வியை பிர்பலிடம் கேட்டாராம்….

அதற்க்கு பீர்பல், தலையில் முண்டாசு கட்டிய ஒருவனை கொண்டு வந்து நிறுத்தினாராம்.

இது என்ன துணியை நீ தலையில் கட்டியிருக்கிறாய் என்று கேட்ட அக்பரிடம் அந்த ஆள் ‘முண்டாசு ‘என்றானாம்.

அதே துணியை உருவி, மடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு, இப்போது இதன் பெயர், ‘உத்திரீயம் ‘என்றும்

அதையே, அவிழ்த்து போர்த்திக்கொண்டால் shawl  என்றும்

இடுப்பில் உடுத்திக்கொண்டால் ‘துன்டு ‘ என்றும் கூறினானாம்.

ஆகா எப்பிடி ஒரே துணி, முன்டாசாகவும், உத்திரீயமாகவும், shawl ஆகவும், துண்டாகவும் இருக்குமோ,

ஒரே கடவுள், பல ரூபங்களில் கட்சி தருகிறார் என்பதை விளக்கினாராம் பீர்பல் .இன்னும் பல பல மேற்கோள்கள் , உதாரணங்கள்…..

இரண்டு மணி நேரம் [போனதே தெரியாமல், நல்ல விஷயத்தில், புத்தியை செலுத்திய திருப்தியோடு வீடு திரும்பினேன்

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும்  தெய்வமும் குணத்தால் ஒன்று என்று கூறுவார்கள்…

ஏன், குழந்தையும் பெரியவர்களும் கூட குணத்தால் ஒன்று தான்…..

உங்கள் வீட்டில் பெரியவர்கள்,…………………………..

உங்களுக்கு teenage  பையனோ பெண்ணோ இருந்தால் ‘பெரிசு’என்று செல்லமாக) !!!!!! அழைக்கப்படும் பெரியவர்கள் இருந்தால் ……………..,

உங்களுக்கு அவர்களை அனுசரித்துப்போகும் குணம் இருந்தால்,…………

உங்கள் பொறுமையை அவர்கள் சோதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்காமல் இருந்தால……………..,

உங்களுக்கும் ஒரு நாள் வயசாகும், நீங்களும் முதியவர்கள் கணக்கில் வருவீர்கள், என்கிற உணர்வு இருந்தால்……………..

உங்களை விட வாழ்கையை அதிகம் வாழ்ந்தவர்கள் என்கிற கண்ணோட்டத்தோடு அவர்களை பார்த்தீர்களானால்……………..

தங்களின் தேவைகளை குறைத்துக்கொண்டு, உங்கள் மனதை நிறைத்தவர்கள் என்கிற உண்மையை உணர்தவரனால் …………….

இன்று நீங்கள் வாழும் வாழ்க்கை, அவர்கள் இட்ட வித்திலிறிந்து வளர்ந்த மரம் என்று நம்பிநீர்க்ளனால் ……………………….

In  1940 ….என்று அவர்கள் அந்த காலத்து கதைகள் பேசும்போது, ‘போ பா …ஒனக்கு வேற வேலை இல்லை” என்று சொல்லாமல் …..”கரெக்ட்…அந்த காலமெல்லாம் இனிமே வராதுப்பா …” என்று கூறி அவர்கள் சொல்ல வந்ததை கேட்டு விட்ட திருப்தியை அவர்களுக்கு கொடுபீர்களேயானால் …..

தன்னை பெற்றவர்கள் மற்றும் தன்  இறந்து போன உடன் பிறப்புகள் பற்றி எண்ணி அவர்கள் சிந்தும் கண்ணீரை, தேற்றும் விதத்தில், அவர்கள் தோள்  தொட்டு அழுத்துபவரானால் …….

உங்களையும், உங்கள்  நடவடிக்கைகளையும் குறு குறு என்று நோட்டம் விட்டாலும், உங்கள் bank  passbook  சரி பார்ப்பது, உங்கள் டெபொசிட் mature  ஆகும் தேதியை உங்களுக்கு நினைவூட்டுவது, நீங்கள்  income tax  file  பண்ண வேண்டியதை நினைவுபடுத்துவது, இவை எல்லாம் செய்துவிட்டு,

‘”நான் ஞாபக படுத்லேன்னா …..நீ எங்கே பண்ண போறே ?”……என்று சொல்லும்போது

அமாம் கண்டிப்பா…மறந்தே போயிருப்பேன்,” என்று சொல்லி ஒரு சின்ன சந்தோஷத்தை அவர்களுக்கு அளிப்பவரானால் ………

உங்களைப் பராமரித்ததை விட உங்கள் பிள்ளைகளை, கண்ணின் கருமணி போல் பாதுகாப்பவர்கள் என்று நீங்கள் அறிந்திருந்தால்,

ஒரு விஷயத்தில் / நிமிஷத்தில் , குழந்தையாகவும். மறு நிமிஷத்தில், பெரியோர்களாகவும் நடப்பதை, நீங்கள் ஒத்துக்கொள்பவரானால் …………………..

சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய விஷயமாக பேசுபவர்கள்  என்று நீங்கள் அறிந்திருந்தால் …….

வேலை பளுவால் நீங்கள் சோர்ந்திருப்பது தெரியாமல், அன்று வந்த தபாலை பற்றியும், அன்று அவருக்கு வங்கியில் நடந்த கொடுமையை !!!!!

[ இவர்கள் சொல்லவதை கேட்க பொறுமையில்லாத இளவட்டம் ஒன்று கவுன்டரில் இருந்திருக்கும்……………..அதனால், அவருக்கு இழைக்கப்பட்டது “கொடுமை’!!!!!! ]

பற்றி பேசுபவரிடம் ……கனிவாக சற்று பொறுக்கும் படி சொல்பவரானால் ………………………….

நீங்கள் வெளியிலிருந்து தாமதமாக வந்தால், கவலை படுபவரும் , உங்கள் குழந்தைகள் வர தாமதமானால் பதரிபோவரும் …..தன்னிடமும், தன்   பிள்ளைகளிடமும், வேறு யாருமே இந்த உலகத்தில், இந்த பாசத்தை காட்ட முடியாது என்று உணர்ந்தவரானால் ……………………..

உங்கள் குழந்தைகளோடு, குழந்தைகளாக அவர்களையும் பராமரிப்பீர்கள் …….

முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும்.…….

உங்கள் சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள்.…..( எனது அனுபவித்தில் சொலிகிறேன் )

உங்களது இன்றைய இளமை நாளைய முதுமை.……

அவர்களுக்கு நீங்கள் செய்யும் பணிவிடை வீண் போகாது..

க்ஷண நேரம் எரிச்சல் வந்தாலும் …….முயன்று அந்த எரிச்சலை தகர்த்தி, கனிவான வார்த்தைகளை பேசுங்கள்…..

(இதில் வேடிக்கை பாருங்கள், நான் இதை எழுதிக்கொண்டிருக்க, என் மாமனார் வந்து,

அடுத்தது எழுதுகிறாயா , என்ன topic ? …..என்று கேட்க..

முழுவதும் எழுதிவிட்டு காண்பிக்கிறேன் என்று சொன்னதை காதில் வாங்காமல்,

“காட்டாமல் போனால் போயேன் ” என்றவுடன்,

“இல்லைப்பா …….முழுசா எழுதிட்டு காட்றேன் ”   என்றபோது

நான் எழுதிக்கொண்டிருக்கும் விஷயம் கதையல்ல நிஜம் என்று உணர்ந்தேன்….

ஆமாம் அனு  …….குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் என்று என்னோடு நீங்கள் ஒத்துக்கொள்வது என் காதுகளில் விழுகிறது…..

நன்றி

….

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்…ஆராயக்கூடாது !!!!

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தஞ்சாவூர் என்பதால் காவிரி தண்ணீர் என் நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருப்பது உண்மை !!!

என் அம்மாவும் பேச்சுக்கு பேச்சு பழமொழி சொல்வாள்…. (சிலர் இவற்றை … ஏதோ ஒரு வசனம் சொல்லுவாளே …….. என்று சொல்லி ஆரம்பிப்பதும் உண்டு….)

என் மாமனாரோ கேட்கவே வேண்டாம்…. சில நேரங்களில் பழமொழி தான் பேச்சே……

அப்பறம் எனக்கேன் தொற்றிக்கொள்ளாது ?

நாளடைவில்,

‘அது என்னது, நீங்க என்னவோ ஒரு பழமொழி சொல்லுவேளே “….. என்று என் தோழிகள் கூட என்னிடம் குறிப்பிடும் நிலை வந்து விட்டது ….பரவாயில்லை அதனாலென்ன ……

என்னை யார் பாராட்டினாலும் நான் தப்பாகவே நினைப்பதில்லை…..என் தோழிகள், உறவுக்காரர்கள், சொந்த பந்தங்கள் ….யாரோ வாசானுக்கு போச்சான் மதனிக்கு உடபொரந்தான் நெல்லுகுத்துகாரிக்கு நேர் உடபொரந்தான் உட்பட ……………

காலையில் எழுந்து குளித்து வாசலில் கோலம் இட்டு, பால் காய்ச்சி, டிகாஷன் போட்டு இறக்கி, இதற்கிடையில் பெருமாள் சந்நிதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி பூக்கள் சார்த்திவிட்டு, வாய் சுலோகம் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு பக்கம் பாஜி ( சப்ஜி) செய்து, சப்பாத்திகள் போட்டு சுட்டு எடுத்து, டப்பா கட்டி விட்டு திரும்பிப்பார்க்கும் பொது,

எருமைமாடு கன்னுபோட்ட இடமாட்டம் இல்லாமல் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல வந்தேன்…… !!!!!!!!!!!!!!!!!!!!!

என் காரியத்தில் அப்பிடி ஒரு நேர்த்தி…..!!!

பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு கிளம்பி போன பிறகு, அவர்கள் ரூமில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற மாமனார் ……

சரச்ச எடத்துல கத்தியும்  அறுத்தஎடத்துல அருவாளுமாகெடக்கு என்று சொல்லியபடி குளிக்க போனார்.

கேட்டுக்கொண்டு வந்த நான்

திருப்பதிஅம்பட்டன்போல, கை காரியத்தை அப்பிடியே அம்போ என்று போட்டுவிட்டு ரூமை சரி செய்ய தொடங்கினேன் ….

வேலைக்காரி வரும்முன் மேலே எடுத்து வைக்க வேண்டும்….இல்லையென்றால் அவள் வேலையில் டிமிக்கி கொடுப்பாள்…..

மரமேர்றவன்  குண்டியை  எவ்வளவு  தூரம்தான்  தாங்கமுடியும் (sorry for using unparliamentary words!!! ) என்று சின்னதாய் ஒரு சலிப்புடன், எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் தங்கள் சாமான்களை ஏன் சரியாக வைக்க மறுக்கிறார்கள் …………………….

என்ன செய்வது வீட்டில் பொருட்கள் இறைந்து கிடப்பதற்கு பிள்ளளைகள் மட்டு காரணம் என்று சொல்ல முடியாது . பார்பதெல்லாம் வாங்கி விடுகிறோம். இதில் சாமான்கள் சேர்பதில் பெண்களின் பங்கு சற்று அதிகம் தான்

என் வீட்டில் 2 பெண் பிள்ளைகள், நான் என் மாமியார்…..( மாமியாரின் சாமான்கள் எங்கும் இறைந்து கிடைக்காது என்பது வேறு விஷயம்.) இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அறுக்கமாட்டாத  அம்பட்டனுக்கு  அறுவத்தெட்டு  அருவாளும்  கத்தியுமாம் என்பது போல, வீட்டில் பரவலாக, லிப்ஸ்டிக், நைல் பாலிஷ் கிளிப், ரப்பர் பேண்ட், காது தோடுகள், கண் மை, என்று பெண்மையான (!!!!) வீடாக தோற்றமளிக்கும். இது உங்கள் வீட்டு கதையும் தானே……

என்னமோ ……

பொறந்தாது  பெருமையை  ஒடபொராந்தான்கிட்ட  பீத்திண்டாப்ல ….

உங்களிடம் கூறுகிறேன்……

எல்லாவற்றையும் எடுத்து நேராக்கி விட்டு திரும்பினால், ரூம் படு சுத்தமாக இருந்தது……

ஆம்படையான்  அடிச்சாலும்  அடிச்சான்  கண்ணுல  புளிச்சபோச்சுன மாதிரி…….ரூம் சுத்தமானதை எண்ணி திருப்தி அடைந்தேன் …..

சாயந்திரம் பெண்களிடம் கூறினால்,

அம்மா நீ ஒன்னு பண்ணு….

ஒரு டைம் டேபிள் போட்டுக்கோ ,

உனக்கு சமைக்கணும் வெளி வேலையும் பாக்கணும்

க்ரோஷா போடணும்…..

Facebook பாக்கணும் ……

Blog எழுதணும் ….

….ஹ்ம்ம் …….பத்துபுள்ள  பெத்தவள பார்த்து தலைச்சன்பிள்ளைக்காரி சொன்னாளாம் ,

“முக்கிபெருடின்னு “……………..

என்பது போல் இருந்தது என் கதை ……!!!!!!!!!!!!!!!!

இதனிடையில் என்னவர் ஆபீசிலிரிந்து வந்தவர்,

கெடக்குறதெல்லாம்  கெடக்கறது, கெழவியை தூக்கி  மணைலவைங்க்ராப்ல ……

என்னை துரித படுத்தி, ஒரு கல்யாண வரவேற்ப்புக்கு போக தயராகச்சொன்னார் .

மடமடவென்று தயாரானேன் …..ஏற்க்கனவே, மணி 7.45….இன்னும் 45 நிமிடங்களாவது ஆகும் போய் சேர …நேரத்துக்கு போகவில்லை என்றால்

ஆடிகழிஞ்ச  அன்ஜான்னாள்   கோழி  அடிச்சு  கும்பிட்டானாம் என்று ஆகிவிடும் …..

அனு ……………..ரெடியா ……………..என்று என்னவர் குரலும்,

______________சிங்காரிசிக்கர்துக்குள்ளே  பட்டணம்  கொள்ளைபோய்டும் என்று என் (வேற யாரு ???) என் மாமனார் குரலும் கேட்டுக்கொண்டிருந்தது !!!!!!!!!!!!!!!!!

இங்கிலீஷ் விங்க்லிஷ் !!!!!!!

சிறுமியாக இருக்கும் காலத்திலிருந்தே, இந்த இங்கிலீஷ் மொழி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு…என் தாயரோடு வெளியே செல்லும் போது  அவர்கள் தமிழில் பேசினால்,

“டாக் டு மீ இன் இங்கிலீஷ்,   பீபுள் வில் திங் ஐ டோன்ட் நோ இங்கிலீஷ் ”

என்று சொல்வேனாம்….. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டுமே என்று தோன்ற வில்லை… சிறுமி தானே …..

ஆனால் அந்த ஈர்ப்பு, வளர்ந்து, வளர்ந்து, கொழுந்து விட்டு எரிந்து எனக்குள் ஒரு பெரும் தாகத்தை உண்டு செய்து, என்னை ஆங்கில இலக்கியம் படிக்கச்  செய்தது ……

என்று சொல்ல மாட்டேன் ….காமர்சில் கணக்கு பாடம் இருந்ததாலும், அறிவியலுக்கும் எனக்கு, ஆகவே ஆகாது என்பதாலும் ஆநா ங்கில இலக்கியம் எடுத்து படித்து தேறினேன். !!!!!!!!

ஆனால், நான் உணர்ந்தது என்னவென்றால், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால் எனக்கு பிடித்தது …..அது தான் நிஜம்.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தால், கணவரும் மாமனாரும் மட்டும் ஆங்கிலத்தில் சம்பாஷிக்க தெரிந்தவர்கள்…..[தமிழ் குடும்பத்தில் வாக்கப்பட்டவளுக்கு இது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது…..]!!!!!!

இல்லை தான் அனால் ஏனோ கொஞ்சம் மாதங்களுக்கு இங்கிலீஷ் பேசுகிறவர்கள் யாரும் தென்படாதது ஒரு குறையாகவே இருந்தது ……

பிறகு ஒரு தோழி கிடைத்தாள் ….. போகும் போதும் வரும் போதும், ‘ஹாய் ‘சொல்லி நல்ல நண்பிகள் ஆகிவிட்டோம் …..

இன்று வரை அவளை நான் விடவில்லை !!!!!!

ஒரு நான்கு வருடங்களில், பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில், டீச்சர் வேலையில் சேர்ந்தேன், ….

அதுவும் எல்.கே.ஜி ….டீச்சர். … 52 குழந்தைகள் எடுத்த எடுப்பில்…ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் வெளியே கொட்டும் மழை….[உள்ளேயும் தான்.]

ச்சே ச்சே ……ஏதோ திறந்த வெளி திண்ணை பள்ளிக்கூடம் என்று எண்ணி விடாதீர்கள்……குழந்தைகள்  கண்ணீரை சொன்னேன்….!!!!!!

அழுகை ஓய்ந்து ஒருவழியாக அவர்கள் செட்டில் ஆனதும் A,B,C,Dசொல்லிக்கொடுக்க முற்பட்டேன்…

டேக் அவுட் யுவர் நோடேபூக் ……என்றேன்

எந்த ஒரு reactionம்  இல்லாமல் என்னை பார்த்தார்கள்…..

ச்சே ….சின்ன குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே என் பெருமையை காட்டவேண்டாம் என்று எண்ணி …..

“notebook  நிகாலோ” என்றேன் [இது ஹிந்தியாமா !!!!]

…அப்பவும் அப்படியே பார்த்தார்கள்…..

நான் குழம்பினேன்…..ஐயையோ இப்போது எந்த பாஷையில் பேசுவது??????

ஆபத் பாந்தவனாக ஒரு குழந்தை notebook ????? என்று திரும்ப கூறிற்று …..

அப்பா, ராசா, படையப்பா, அதே தாண்டா  …. என்று எண்ணிய நிமிஷத்தில், கையில் நோட்டை பிடித்துக்கொண்டு,

“வை”என்றது….”. ஆஹா இது வையா “என்று எண்ணி…..

“”வை நிகாலோ “” என்றவுடன் சமர்த்தாக நோட் புக்கை  எடுத்தார்கள்….

அட ராமா  இன்னும் எதனை வார்த்தைகளை வைத்துக்கொண்டு நான் முழிக்க போகிறேனோ என்று எண்ணினேன்…….

சின்ன சின்ன வார்த்தைகளுக்கு கூட ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்க மறுக்கும் அவர்களின் பெற்றோர்களின் தாய் மொழிப்பற்றை என்னவென்று கூறுவது…..!!!!!!!!!!!!!!!!!

நல்ல விழயம் தான் ….தாய் மொழியில் பேசுவதும், தெரிந்திருப்பதும், கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்,….

ஆனால், ஆங்கிலம் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து ……

முட்டி மோதி அவர்கள் என்னிடமிருந்தும் நான் அவர்களிடமிரிந்தும் நிறைய கற்றுக்கொண்டோம்….!!!!!!!!!!!!!!!!!!

இன்று, அந்த குழந்தைகள், படித்து முடித்து, வேலைக்கும் சென்று விட்டார்கள், சிலர் அமெரிக்காவில்……75 சதவிகிதம் பேர் என்னுடன் facebook  தொடர்பில் உள்ளனர்…!!!!!!!!!!!!!!!!!

வேலையே விட்ட பின்பு, வீட்டில் tution  சொல்லிக்கொடுக்கும் பொது வேறு சில அனுபவங்கள் …..

gender  change  சொல்லிக்கொடுக்கும் பொது,

king ————-queen

father ———mother

boy ————–girl

monk —————–?????monkey  என்றான் ஒரு குழந்தை……

மற்றொருவன், wizard  க்கு lizard  பெண் பால் என்றான்…..

awe  எனும் வார்த்தையை ஆவி என்றது இன்னொரு குழந்தை….

இப்படி பல சுவையான அனுபவங்கள்……

தனது தாய் மொழி மீது பற்றும் விசுவாசமும் இருப்பதில் தவறில்லை…..

ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலமும் அதே அளவு தேவை படுகிறது ….

எனது தமிழ் இடுகைகளை [posts ] ஆங்கிலத்தில் எழுதுமாறு சில நண்பர்கள் கேட்டார்கள்….அது என் எழுத்தின் ஆழத்தை குறைத்து விடும் எனக்  கூறினேன்……

தமிழுக்கும் அமுதென்று பேர்….. தொலைகாட்சி பெட்டியில் பாட்டு போய்க்கொண்டிருக்கிறது ………

இன்று ஒரு மைல் கல் ……….

இன்று ஒரு மைல் கல்…
பல காலங்கள் கழித்து திரும்பிப்பார்க்கும்போது, உன்னை நினைத்து நீயே பெருமை படும் நாளாக இன்றைய நாள் அமையும்.
நான் எப்பொழுதும் கூறும் வார்த்தையை/தைரியம் ஊட்டும் வாக்கியத்தை கூறினேன், ஏனோ உன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
அனால் அது நான் எதிர்ப்பார்த்ததுதான்…..அதனால், என்னை திடமாக வைத்துக்கொண்டு, உன்னை தேற்றினேன் …..(மற்றும் ஒரு முறை ).
உன் மன உளைச்சல் எனக்கு புரிகிறது உணர முடிகிறது…..
உன் பெயருக்கு பின்னால் நீ சேர்த்துக்கொள்ள போகும் பட்டங்கள் நாளை உன்னை பிரதிபலிக்கும், உன் நிறமோ, உன் கூந்தலோ, உன் பல் வரிசையோ, உன் உடல் பருமனோ, உன் உயரமோ அல்ல……..
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது …….
உன் அன்பு ததும்பும் முகமும், சிரிப்பும், அடுத்தவர் வலி உணரும் குணமும் நீ எடுத்துக்கொண்டுள்ள துறைக்கு மிக முக்கியம்.
தைரியமாக எதிர்கொள் வாழ்க்கையை…….
நான் எப்பொழுதும் கூறுவது போல், யார் எவ்வளவு, தைரியம் கூறினாலும், அதை செயல்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது….
பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்….. எப்பிடி இருந்தாலும் பேசும் இந்த உலகம்….
உன்னை மட்டும் தான் விமர்சிக்கிறார்கள் என்று நினைக்காதே…..
மற்றவர்களின் குறு குறு பார்வை நமக்கு பழகிவிட்டது இப்போது…. (நமக்கு என்று தான் சொல்வேன் ……..அந்த வலியை நானும் ஒவ்வொரு முறையும் அனுபவித்ததனால்)
என் ஜாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பார்கள்…
அவரவரின் நலன் விரும்பியாக நீ பரிந்துரைக்கப்போகும் சத்தான உணவு, அவர்களை மிக விரைவில், நோய்லிரிந்து, நலம் பெறச் செய்து உன்னை வாழ்த்தச் செய்யும் ……..
உன் குடும்பம், உன் நலன் விரும்பிகள்,உன் தோழிகள், அவர்கள் உனக்கு உன் கை தொலை பேசியில் அனுப்பிய வாழ்த்துக்கள், உனக்காக செய்யும் பிரார்த்தனைகள், இவையெல்லாம் வீண் போகாது…..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் இருக்கிறான்,
நம்மை காப்பதை அவனிடம் விட்டபிறகு நமக்கு என்ன வீண் கவலை?