Monthly Archives: ஜூலை 2018

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி