Category Archives: கண்ணோட்டம்

குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

அவள் மெல்லச் சிரித்தாள் ……

அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை

. ஜீன்ஸ் பாண்ட், மேலே சிவப்பு கலரில் பூப்போட்ட சட்டை அணிந்து ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் அவள் நிற்க, அடித்த இளவெய்யில் காற்றில் அவள் கூந்தல் பறக்க, இரண்டு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி அவள் மெலிதாக சிரிக்க, அவள் கிளிக் செய்யப்பட்டாள். தனக்கே தன் கோலம்   பிடித்துப்போக, அவருக்கு அனுப்பினால் நன்றாக இருக்குமே என்று எண்ணி உடனடியாக வாட்ஸ் ஆப் செய்தாள் . ஏதோ நேற்று தான் அவரை முதன்முதலில் பார்த்தது போலும் அவருடன் முதல் முறையாக தொடர்பு கொள்வது போலவும் ஒரு பரபரப்பு. இரண்டு டிக் வந்தும், அது நீல நிறத்திற்கு மாறாதது சலிப்பை தந்தது…

என்னமா ….போன் பாத்துண்டே இருக்க என்ற பெண்ணை… ஒன்னும் மில்லடா சும்மாத்தான் என்று சொல்லி சமாளித்தாள்.

சிறிது இடைவெளிக்கு பின், smile often என்று கணவனிடமிருந்து பதில் வந்தது. த்ச் ….. அவ்வளவு தானா என்று ஒரு ஏமாற்றம். நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே.. இந்த உடை உனக்கு பொருந்துகிறது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதையும் சொல்லாமல், அடிக்கடி இப்படி சிரி என்று மட்டுமா சொல்வார்கள்? இந்த ஆண்களே அப்பிடித்தானா?

ஒரு இளம் பெண்ணாகஅவருக்கு அறிமுகமாகி, மேலே சொன்ன பாட்டில் வருவது போல வெட்கம் பெறுக பெறுக சிரித்தவள் அதே சிரிப்பை  திருமணமாகி முப்பதும் நாற்பதும், ஐம்பதும் வருடங்கள் ஆனா பிறகும் சிரிக்க முடியுமா? சிரிக்க கூடாது என்று அவளுக்கு ஒன்றும் வேண்டுதலும் இல்லை. ஆனால் சிரிப்பதில்லை. இயல்பாக இருப்பதாக அவள் நினைத்திருந்தாள் , அனால் அவள் சிரிப்பு தொலைந்ததை அவள் அறியவில்லை. எங்கே தொலைத்தாள், தேடினால் கிடைக்குமா?

இளம் மனைவியாக, புது சூழலில் மிரண்ட  விழிகளுடன் இருக்கும் பொது முதலில் தொலைத்திருக்க வேண்டும்

பின் தாய்மையின் பொறுப்புகளில், எதிர்பார்ப்புகளில், இன்னும் கொஞ்சம் தொலைந்திருக்கும்.

அலுவலகத்தில் , அந்த கதாபாத்திரத்தின், எதிர்பார்ப்புகளில் இன்னும் கொஞ்சம்,

வாலிப வயது பெண் பிள்ளைகளை புரிந்து கொள்வதில் கொஞ்சம்

வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், தான் பெற்ற  பிள்ளைகளையும் தலைமுறை மாற்று கருத்துக்களில் நாட்டாமை செய்தும் கொஞ்சம்

திருமண வயது பெண்ணோ பிள்ளையோ இருந்து, வரன் தேடும், அந்த நீண்ட பயணத்தில் கொஞ்சம்

தான்  அதுவரை நடு வயது எட்டியிருந்தால், தன் உடல் உபாதைகளில் கொஞ்சம்

எது எப்படி இருந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போக கூடாது என்று ஒரு கழக் கூத்தாடி போல, அந்த சம்சாரம் என்ற கயிற்றில் இந்த பக்கமும் விழாமல் அந்த பக்கமும் விழாமல், நடக்கும் போது கொஞ்சம்

இப்படி சிறிது சிறிதாக தொலைந்தது, அவளையும் அறியாமல் விட்டு போனதோ? ஆனால் இன்று அடிக்கடி சிரி  என்று கணவர் சொன்னபோது உணர்ந்தாள், அது கடினம் என்று.

பெண் மட்டுமே சம்சார சுழர்ச்சியில் சிரிப்பை தொலைப்பதில்லை,

பல ஆண்களும் தொலைக்கிறார்கள்.

பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..

IMG_1963.jpgஅடடா என்ன காம்பினேஷன் மா ….

இத இத…இத தான் நான் எதிர்பாத்தேன்…

காப்பிக்கு மட்டுமில்லாமல்,

பொங்கல் வடை சாம்பார், அடை அவியல், ஆப்பம் குருமா, சப்பாத்தி குருமா, அதோட ஒரு நல்ல சூடான பில்டர் காபி…(கொஞ்சம் இடைவெளி விட்டு)…ஸ்ட்ராங்கா…

சாம்பார் பொரியல், ரசம் வதக்கல்,கூட்டு கறி, தொகையல் சுட்ட அப்பளம், வெத்த கொழம்பு-சுட்ட அப்பளம் உருளைக்கிழங்கு ரோஸ்ட், மோர் கொழம்பு பருப்பு உசிலி என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.

சாப்பாட்டில் மட்டுமா அனு…

இந்த ms ப்ளூ ல ரெட் பார்டர் இருக்கே…எவேர் கிரீன் காம்பினேஷன் !

மாம்பழத்துல பச்சை …சான்சே இல்லை

மயில் கழுத்துல அரக்கு

நல்ல கருத்த பச்சைல மஸ்டர்டு பார்டர் இருக்கும் பாரு….

இப்படி முடியவே முடியாத கலர் காம்பினேஷன்கள்….

(இதனால் தான் ஆண்களுக்கு துணி எடுக்க போகும் போது நமக்கு கழுத்து வரை துக்கமோ)ஆனாலும் அவர்கள் ரொம்ப பாவம் தான்.

சரி காம்பினேஷன் இங்கே நின்று விடுகிறதா என்றால் இல்லை…

இந்த மாங்கா மாலை ல இப்பிடீ…ஒரு ரோ முத்து இருந்தா அழகா இருந்திருக்கும்.

இந்த சேப்பு கல்லுக்கு பதில் பச்சை கல் அமக்களமாக இருக்கும்.

சில …சில சமயத்தில் பெண்கள் பெருந்தன்மையுடன் உள்ளதை உள்ள படி ரசிக்கவும் செய்வார்கள்.

இந்த அன்கட் டைமண்ட் தான்ங்க என் பிரென்ட் கீதா வாங்கினா…

இந்த குட்டி ஜிமிக்கி…..

(ஆபரணங்கள் பற்றி பேசும்போது ஜிமிக்கி பற்றி பேசவில்லை என்றால் என் ஜாதகப்படி கால ஜிமிக்கி தோஷம் வருமாம்)!!!!

காதோட ஒட்டினாபோல எவ்ளோ க்யூட்டா இருக்கு பாருங்களேன்…வைர தோடுக்கு போட்டுக்க பெரிய ஜிமிக்கி இருக்கு …இது தினப்படி போட்டுக்க நல்லாருக்குமா னு பாக்றேன்…

ஆனால் இப்போதெல்லாம் தங்கத்தில் பணம் செலவு செய்வது வேண்டவே வேண்டாம்

சில மாதங்கள் முன் நகை கடையில் நுழைந்தால் ஏதோ இன்ஸ்டாகிறாமில் பக்கங்கள் புரட்டுவது போல் ஒரு அனுபவம். எல்லாமே தங்கம் அல்லாத உலகத்தில் கிடைப்பதால் மலைப்பாக இல்லை. டெம்பிள் ஜுவெல்லரி என்று நிஜ கெம்ப் தோற்கும் அளவுக்கு டிசைன் களும், கற்களும் வந்து விட்டன .

அதையும் தாண்டி ஒரு கல்யாண விழாவிற்கு சென்றால், பக்கத்தில் உள்ளவர், அங்கே ஒரு perfect காம்பினேஷன் பற்றி அங்கலாய்ப்பார். பிள்ளை… கொஞ்சம் நிறம் கம்மி தான் பொண்ண பாகர்ச்ச…என்றும்… பொண்ணு கொஞ்சம் குண்டு ..பிள்ளை சின்னவனா தெரியறான் இல்ல… என்று ஒரே பேத்தலாக பேத்துபவர்கள்…

(பிள்ளை வீட்டார் / பெண் வீட்டார் காதில் விழுந்தால் அந்த நபர் அம்பேல்)

காலை டிபன், சாப்பாடு, புடவை, வேட்டி சட்டை, நகை, பாத்திரம் எதில் வேண்டுமானாலும் காம்பினேஷன் தேடுங்கள் ஆனால் உங்கள் மனைவியோ கணவனோ ஏற்கனவே உங்களுக்கு நிச்சயிக்க பட்டவர்கள். இடையில் புகுந்து பெரிய்ய்ய்ய் பருப்பாட்டம் எதுவும் செய்யாதீர்கள்.

அதற்காக உங்கள் இஷ்டமில்லாமல் தலையில் திணிக்க பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏற்படுகிற காம்பினேஷனை முடிந்த மட்டும் நன்றாக கொண்டு போக முற்படலாமே.

If you get married , you stay married

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. முணுக் முணுக்கென்று எதற்கு எடுத்தாலும் பேச்சுக்கு பேச்சுக்கு வாதிடுவது, சண்டை போடுவது, மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வது(ஆண் பெண் இருவருக்கும் தான் ) இதெல்லாம் தவிர்த்து, வாழ ஆசை படலாம்.

கிடைத்த காம்பினேஷனை நல்ல காம்பினேஷனாக மாற்றலாம்.

பை தி வே… தலைப்பில் உள்ள காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.

அமெரிக்க இந்திய ஜுகல்பந்தி இன்று வ்ந்த வீட்டு சமயலறையில்!!!!!

காது கொடுத்து கேட்டேன் …

காது கொடுத்து கேட்டேன் … என்றவுடன் 

ஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா?

அதுதான் இல்லை. … 

நான் சொல்வது 

Listening !…கேட்பது… 

பிறர் சொல்ல வருவதை கேட்படது.

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே.. 

முக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே !!

அது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது!

பேசாமல் கேட்பது …

அவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது… 

ஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…

உங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும். 

சொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் புராணம் பாடினால் போதும். 

சொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள். 

கரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் மனது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள். 

Happy listening !!

கொடுப்பதில் சுகம் …………….

download

அனைவருக்கும் தீபாவளி நல்  வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒரு இடைவெளிக்கு பின்  எழுத வேண்டும் என்று தோன்றிய அளவுக்கு இன்றைய நிகழ்வுகள் இருந்ததால். எழுதுகிறேன
தீபாவளி ஷாப்பிங் எல்லாம் முடிந்து விட்டது… கடைசி நிமிஷ ஷோப்பிங்க்க்கு தனி சுகம் என்பதால்  மதிய உணவிற்கு பின் போய்விட்டு வரலாம் என்று மகள் கூறவும், உணவை முடித்துக்கொண்டு  போனோம்,
அதற்க்கு முன், சாப்பிட  உட்கார்ந்த உடன் வெளியே தண்ணீர் ஊற்றி பெருக்கும்  சத்தம் கேட்டு எழுந்து பொய் பார்த்தேன்.
 எப்போதும் எங்கள் flat  மாடிப்படிஎல்லாம் சுத்தம் செய்யும் பெண்மணி வேலையை செய்து கொண்டிருந்தார். வாய் பேச முடியாதவர். ஆனால் நல்ல சிரித்த முகம். சில மாதங்கள் முன்பு எனக்கு கழுத்து வலி வந்து கீழே குனிய முடியாமல் இருந்தபோது, புதன் தோரும்  அவர் வந்து மாடி படி கழுவியதும் என் வீட்டில் கோலம் போட்டு கொடுத்து விட்டு போவார்.
ஒரு சின்ன செயல்…என் முகத்தில் ஒரு புன்னகை…
இன்று என்னிடம் இருந்த இரண்டு புடவைகள்… ஒரு வருடம் முன் வாங்கியவை… அதிகம் உடுத்தவில்லை …புது மெருகு போகாமல் இருந்தது…அதை எடுத்து அவருக்கு கொடுத்தேன். அவரை உள்ளே அழைத்து நாலு பழங்களுடன் கையில் கொடுத்தவுடன், காலை தொட்டு கும்பிட  குனிந்தவரை தூக்கி நிறுத்தி அனுப்பிவைத்தேன்.
எனக்கு ஒரு வருட பழைய புடவை… அவருக்கு அது புது துணி…
எனக்கு திருப்தி ……..
சாப்பிட்ட கையேடு கிளம்பி கடைக்கு போய்  சுற்றிவிட்டு, மகளுக்கு ஒரு புடவை வாங்கி விட்டு, காப்பி  குடித்துவிட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். எண்பது ருபாய் கேட்டார் ….இறங்கும் போது  நூறு ருபாய் கொடுத்து
வெச்சுகோங்க ஹாப்பி தீபாவளி என்று சொன்ன போது
அவருக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்
எனக்கு திருப்தி …….
பக்கத்தில் இருக்கும் கடையிலிரிந்து  ஒரு இரண்டடு வயது குழந்தைக்கு, என் வீடு எதிரே துணிகளுக்கு இஸ்திரி போடுபவரின் குழந்தை  ஒரு ஜோடி துணி வாங்கி கொடுத்த போது  அந்த குழந்தையின் தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி…
எனக்கு திருப்தி ……
பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மாமி என்னை அழைத்து பேசவும் தெரிய வந்தது அவர்களும் காலையில் அந்த குழந்தைக்கு  புது துணி  வாங்கி கொடுத்தார்கள் என்று….
அதோடு இல்லாமல் தங்கள் பேர  குழந்தைகள் அமெரிக்காவில் வசிப்பதால், இந்த குழந்தை தங்களை தாத்தா  பாட்டி என்று அழைப்பது ஆதூரமாக இருக்கிறது என்றார்  மாமி.
வயதான காலத்தில் தன ஒரே மகனும் அவரது குடும்பமும் தன்னுடன் இல்லையே என்று புலம்பாமல் வாழ்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்பது மனதுக்கு இதமாகவும், வயதானால் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்தியது…..
இது இல்லை, அது இல்லை, அப்பிடி இல்லை, இப்பிடி இல்லை வேறு மாதிரி இருந்திருக்கலாம் …இப்பிடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் புலம்பாமல்….
எனக்கு என்ன குறைச்சல்….நன்றாகத்தானே இருக்கிறேன் என்று திருப்தியோடு கடவுளுக்கு நன்றி சொல்லி பாருங்கள்… அந்த சுகமே தனி…..
அது படித்து அறிந்து கொள்வதல்ல கேட்டு தெரிந்து கொள்வதல்ல…..உணர வேண்டிய விஷயம்……..

காரடையான் நோன்பு

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒரு காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் …. என ஒவ்வொரு பெண்ணும் நோன்பு நூற்று கொண்டிருப்பாள்..

நல்ல கணவன் வாய்க வேண்டும் என்று கன்னி பெண்களும்,
கிடைத்த கணவன் நன்றாகவும், இந்த அன்பான உறவு, எல்லா ஜென்மத்திலும் வாய்க்க வேண்டும் என்று மணமான பெண்களும் வேண்டியிருபார்கள்.

சில எடக்கு ஜென்மங்கள்,
” ஐயோ இதே மனுஷனா வேண்டாம்ன்டா சாமி ” என்று சொல்பர்வர்களும் உண்டு.

ஏதோ ஒன்று, கிடைக்கப் போகும் உறவை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும்.

கிடைத்த உறவை, உயிரினும் மேலாக போற்ற வேண்டும்.

அது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்கும் தெரியும்.

இருந்தாலும் முயன்று பார்க்கலாமே

எந்த உறவு தான் சுலபமானது?

எல்லா உறவுகளிலும் உரசல்கள் இருக்கும்… அந்த உரசல்களை ரணமாக்கி புரயோடிபோகும் வரை கொண்டு செல்வதா

அல்லது

மெலிதாக மயிலிறகால் வருடிக்கொடுத்து ஆற்றுவதா என்பது நம் கையில் உள்ளது.

இதே கணவன் வேண்டும் என பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

எப்பிடி இருக்கிறீர்கள் என்று கேட்டால் சிலர் சொல்வார்கள்….

“ஏதோ பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் போய்க் கொண்டிருகிறது “என்று…

அது போல, பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத வரை, சரிதான்.

அதற்காக, உடலாலும், மனதாலும் துன்புறுத்தும் கணவனை கட்டிக் கொண்டு அழச் சொல்லவில்லை.

கல் ஆனாலும் கணவன்….. இதெல்லாம் வேறு கதை.

முயன்று பார்த்து முடியவில்லை என்றால், அந்த உறவை எட்டி உதைத்துவிட்டு வரவும் நாம் தயாராக இருக்க வேண்டும்

அதற்க்கு முதலில், நல்ல கல்வி வேண்டும்,

மனதில் உறுதியும் தைரியமும் வேண்டும்….

தன்னம்பிக்கை வேண்டும்

கதை கேளு கதை கேளு…..

?Image ஊரில் ஒரு அரசன். அவனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும் குறைபாடுடன் இருந்ததாம். 

அந்த ஊரில் இருந்த கலைஞர்களை கூப்பிட்டு தன்னை ஒரு அழகான சித்திரத்தில் வடிக்க சொன்னானாம் அரசன். 
ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை எப்படி அழகாக காட்ட முடியும் என்று தயங்கினார்கள். 
ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன் வந்து தான் வரைவதாக கூறி, ஒப்புக்கொண்டதோடு இல்லாமல், அதி அற்புதமாக வரைந்தும் காட்டினானாம் . எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.
 
அவன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக்கொண்டும் இருப்பது போல் வரைந்திருந்தானாம். 
 
சின்ன கதை தான் என்றாலும் நம் கண்களை திறக்கிறது அல்லவா ?
நாமும் ஏன், இந்த கண்ணோட்டத்தோடு மற்றவரை பார்க்கக் கூடாது.ஒருவரின் குறைகளை தவிர்த்து, நிறைகளை சீர்தூக்கி, ஏன் பார்க்க மறுக்கிறோம் ?
நாம் எல்லா விதத்திலும், நிறைவானவர்கள் என்று ஒரு மிதப்பு !!!!!
அதனாலேயே, மற்றவர்களை குறைத்து இடை போடுகிறோம். இது நம் முகத்தை கழுவுவதை விடுத்து கண்ணாடியை துடைப்பது போல. 
 
பார்வையற்றவர்களை, ‘குருடு ‘
காது கேட்காதவர்களை, ‘செவிடு ‘
நடக்க முடியாதவர்களை ‘நொண்டி ‘
பேச முடியாதவர்களை ‘ஊமை ‘ 
ச்சீ ………எவ்வளவு கொடூரமாக இருக்கிறது எழுதுவதற்கு கூட…….
என் தாயார், சொல்லிக்கொடுத்த பாடங்களில் முதன்மையானது, இந்த வார்த்தைகளை உபயோகிக்க கூடாது என்பது தான். பொங்கி எழுந்து விடுவார், உபயோகித்தால். அதையே தான் நானும் என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன் 
 
குறை இல்லாதவர்கள் யார். ?
அங்கஹீனங்கள் மட்டும் தான் குறையா ?
என் மகளின் கல்லூரியில் ஒரு ஆசிரியர் சொன்னார், குறை என்று பார்த்தால், ஒருவர் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்வது கூட குறை தான். 
சரிதானே…..
இருவது, முப்பது ஆயிரங்களுக்கு ஃபரேம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம் …ஆனால் பார்வையில் குறை இருப்பதால் தானே கண்ணாடி. ?
 
நான் என் செல்வங்களுக்கு அடிக்கடி வலியுறுத்துவது, அதுதான் ஒருவரது, கையில் உள்ள ஐந்து விரல்களே, ஒரே மாதிரி இல்லாத போது, ஒருவர் போல் மற்றொருவர் எப்படி இருக்க முடியும்? 
கடவுள், ஒவ்வொருவரையும், தனித் தன்மையுடன் படைத்திருக்கிறான். அவரது படைப்பை குறை கூறும் அளவிற்கு நாம் என்ன அவ்ளோ பெரிய மனிதர்களா ?
 
இனியாவது, மற்றவரை பற்றி பேசும்போது, விவரிக்கும் போது , ஒரு நொடி யோசித்துவிட்டு நம் திருவாய் மலர்வோமா ?????

புத்தாண்டு வாக்குறுதிகள்

images-1புத்தாண்டு வாக்குறுதிகள்…..நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒன்று தான்…

ஆனால் கடைபிடிக்கிறோமா, இன்னும் சொன்னால் தாக்குப்பிடிக்கிரோமா என்றால்…..
ம்ம்ம்ம் …… என்று இழுப்போம் ….
ஆனால் அந்த டிசம்பர் கடைசி இரு தினங்களில், கண்டிப்பாக நினைவிற்கும் வந்தும் லிஸ்ட்டும்  போடுவோம்…… கடைபிடிக்காவிட்டால் என்ன, எண்ணமாவது  வந்ததே….
இன்று காலை செய்தித் தாளிலும் இந்த  விஷயம் வந்ததால்…. சிந்தித்துப்பார்க்க தோன்றியது…
நமது, பர்சனல் வாக்குறுதிகளை தாண்டி, யோசித்துப் பார்த்தல், நிறைய இருக்கிறது….
1.  நான் தினமும், தொலைக் காட்சி பெட்டியை சுவற்றில் இருக்கும் சுவிட்சில் அணைப்பேன் 
ரிமொடினால் அணைப்பதால், மின்சாரக் கசிவு இருந்துக்கொண்டே தான் இருக்குமாம்….
அதனால் இரவு படுக்க போகும் முன்பாவது, அணைத்துவிட்டு படுக்கலாமே…நமது கரண்ட் பில்லில் கணிசமான தொகையை குறைக்க உதவும்.
2. 100% சார்ஜ் ஆகா தேவையான அளவு மட்டுமே, எனது கைதொலைபேசியை சார்ஜ் செய்வேன் ….
சார்ஜில் போட்டு விட்டு தூங்கிவிடுகிறோம்….இதுவும், கரண்ட் கசிவு போலத் தான். வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை விட, நமது கை தொலைபேசி அதிகமாக கரண்ட் சாப்பிடுமாம்.
3. கெய்செர் …வெந்நீர் தரும் சாதனம்…....
பத்து நிமிடங்கள் மட்டுமே, போட்டுவிட்டு, அணைக்க முயலாமே……..வாளியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு குளிப்பதும் உதவும்….
இல்லையென்றால், சோப்பு போடும் போது, ஷவரை மூடி வைக்கலாம்.
( இதனால் தண்ணீர் சுட்டு, உங்கள் உடம்பை பதம் பார்த்தல் அதற்க்கு நான் பொறுப்பல்ல )
4. லிப்ட் ….(இதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா ?)
எனது குடியிருப்புக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது, படியில் ஏறிச் செல்வேன், இதனால், மின்சாரமும் மிச்சமாகும், உடம்பும் சிக்காகும்……( என்ன ஒரு ரைமிங் )!!!
நான்காவது மாடிக்கு கீழ் குடியிருப்பவரானால், ஒரு போதும் லிப்ட் உபயோகிக்காதீர்கள் !!!
உங்களை நீங்களே நேசிக்க தொடங்குவீர்கள்….. அவ்வளவு, அழகாக இருப்பீர்கள் உடம்பு தெம்பாக இருக்கும் போது .!!!!
5. தண்ணீர், தண்ணீர்,……..
பல் தேய்க்கும் போதும், சவரம் செய்யும்போதும், குழாயை மூடிவிடுங்களேன்…..
துணி கையால் துவைப்பதானால்…. சிக்கனமாக தண்ணீர் உபயோகிக்கவும்….
துணி துவைத்த நீரை, பாத்ரூம் தரையை கழுவுவதற்கும், flush  செய்வதற்கும் கூட பயன்படுத்தலாம்…..
6. SMS …..குறுஞ்செய்தி ……….
ஒருவரை தொலை பேசியில் அழைப்பதற்கு முன்பு, அந்த விஷயத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தால் போதுமா / பதில் பெற்றால் போதுமா என்று எண்ணி விட்டு, செயல்படுங்கள்.
உங்கள் கைத்தொலை பேசியின் பில் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இவை தவிர,
எண்ணை  பதார்த்தங்கள் சாப்பிடுவதை, கணிசமாக குறைதுக்கொள்வேன்,
வெளிச் சாப்பாட்டை குறைத்துக்கொள்வேன்,
இனிப்பு குறைப்பேன்,
தினமும், நடை பயிற்சி மேற்கொள்வேன்,
வெயிட் குறைய பாடு படுவேன்…….( நாம் படுவதை படுவோம், ஒரு வேளை, வெயிட்டும், உறுதி எடுத்துக்கொள்கிறதோ என்னவோ …..” குறையமாட்டேன் ” என்று )!!!!
எல்லோரிடமும் அன்பாக பேசுவேன், நடப்பேன்……
தினமும், அரை மணி நேரமாவது, நல்ல புத்தகங்களை படிப்பேன்…..
நேரத்திற்கு, மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்வேன், அலட்சியப்படுத்த மாட்டேன்…….
எனக்கு  தோன்றியவற்றை பட்டியலிட்டுள்ளேன்……
உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்களேன்…..
எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 

கணக்கும், கடுக்காயும்…….

கணித மேதை ராமானுஜமும் நானும் என்ற தலைப்பில் எழுதவேண்டும்a என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதி விட்டார்கள்……

www.ranjaninarayanan.wordpress.com

அவர்களின் ஒவ்வொரு வரியும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நான் பேசிக்கொண்டிருந்ததாகவும் இருந்தது !!!!

என்ன ஆச்சர்யம் இப்பிடிக் கூட ஒருவருடன் ஒருவர் எண்ணங்களில் ஒற்றுப் போக முடியுமா என்ன…

இருந்தாலும், என் கண்ணோட்டத்தில் அதே தலைப்பில் எனது எண்ணங்களை வெளியிட நினைத்தேன்.

ஆக பின் வரும் வரிகளில், எனது எண்ணங்கள் ….

ராமானுஜமும் நானும்……

எனக்கும் அவருக்கும் எட்டாத தூரம்……

அவர் மேதை…………. நான் பேதை…..

இருந்தாலும் அவரை பார்த்தும் அவரை பற்றி படித்தும் வியந்து போயிருக்கிறேன்.

கணக்கு ஏனோ என்னோடு நட்பு பாராட்ட மறுத்தது. ( மத்த பாடங்கள் என்ன வாழ்ந்தது என்று கேட்காதீர்கள் ) !!!!

ஆங்கிலம் மட்டும் பாசம் மேலிட ஈஷிக்கொண்டது……!!!

நான் தமிழை காதலித்தேன்…. !!!

எஞ்சியது, அறிவியல், பூகோளம், சரித்ரம்……அவை தூரத்து பங்காளிகள் போல் பட்டும் படாமலும் உறவு கொண்டன என்னிடம்…!!!!

கையே ஆயுதம் என் அம்மாவுக்கு … டீச்சர் வேறு…வலது கை பழக்கமுள்ளவர் தான் என்றாலும், நான் இடது கை பக்கம் உட்கார்ந்திருந்தாலும், செம்மையாக அடி வாங்குவேன்…அவ்வளவு சமத்து பாடம் படிப்பதில்…..

பாவம் எவ்வளவு பாடு பட்டார்கள் என்னோடு என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.

ரொம்ப எதிர்ப்பார்ப்பு… ஈடு கொடுக்க என்னால் முடிய வில்லை.

நானும் எவ்வளவோ போரடிப் பார்த்தேன்.

statement sumsல் கணக்கு புரியும், போடத் தான் வராது…..

குட்டும், அடியும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் பழகி / மரத்து போனது….

அப்பா மட்டும், என்னையும் அம்மாவையும் ஒரு சேர சமாளிக்கப் பார்ப்பார்….

கொஞ்சம் கவனிச்சு படி என்று என்னையும்,

போனா போட்டம், அதுக்கு புரியராப்ல கொஞ்சம் மெதுவா சொல்லிக்கொடு என்று அம்மாவையும் சமாதானப் படுத்துவார்….

திக்கித் தடுமாறி, பத்தாவது …………………….fail ஆனேன்… ஆனால் கணக்கில் இல்லை.. அறிவியலில்….. ( கூத்து தானே….)!!!

சீ…. வெக்கமாயில்லை ? என்று கேட்கிறீர்களா …?

“இல்லை ” என்று பளிச்சென்று சொல்வேன்….

என் வெட்கப்பட வேண்டும்….

வாழ்க்கை ஒன்றும் அன்று முடிந்து விட வில்லையே….

அது ஒரு சின்ன சறுக்கல் …. அவ்வளவு தான்…

சறுக்கினால் என்ன உயிரா போய் விடும் ?

திரும்ப எழுந்தால் போச்சு….

சிம்பிள் ……

அப்படித்தான் நானும் எழுந்தேன் …வெறியுடன் படித்தேன்… ஒரு வருஷம் போனது போனது தான் ….ஆனால் முழு மூச்சுடன் படித்து 70% வாங்கினேன் அறிவியலில்…..

11வதில் அறிவியல் பாடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என் பள்ளியில்…..

‘அடக் கடவுளே, ஏதோ மார்க் வாங்கி விட்டேன் என்பதற்காக அறிவியலை தொடரச் சொல்கிறார்களே ” என்ற கவலை…

வேண்டவே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு commerce பக்கம் வந்தேன்…

அங்கேயும் கணக்கு…..

சரி காசிக்கு போனாலும் , பாவம் விடாதா…. என்னவோ சொல்வார்களே… அதை போல், என்னை கணக்கு அனகோண்டா பாம்பு போல் சுற்றி அழுத்தியது……

12இல் பொது பரிட்சையின் போது கண்ணீர் மல்க எழுதிக்கொண்டிருந்தேன்…….

கணக்குக்கு பிரியா விடை கொடுக்கும் தருணம் அல்ல….

ஒரு மண்ணும் தெரியவில்லை …அதனால்…..

எனக்கு அன்று வந்த மேற்பார்வையாளர் கண்களில் பரிதாபம் ….

ஏதோ என் அப்பா அம்மா செய்த புண்யம், மூதாதையர்கள் ஆசீர்வாதம், 72 மார்க் வாங்கி தப்பித்தேன்……70 பாஸ் மார்க்…..

அன்று போட்டேன் ஒரு முழுக்கு…….

பின் ஆங்கில இலக்கியம்…..முடித்து, கழுத்தை என்னவருக்கு நீட்டினால்….தெரிந்த, கணக்கு புலிக்கு நீட்டியிருக்கிறேன் கழுத்தை என்று…..

வேண்டாத தெய்வமில்லை….XX XY க்ரோமொசோன்கள் நல்ல படியாக வந்து, என் சந்ததிகள் கணக்கில் புலியாகவும், சிறுத்தயாகவும், இருக்க வேண்டுமே என்று….

என்னவரோ வாயாலேயே பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய கணக்கெல்லாம் நொடியில் போடுவார்… வாய் பொளந்து கொண்டு பார்ப்பேன்.

ரசிப்பது தப்பில்லையே….எனக்கு நல்ல ரசனையுண்டு….!!!!!

இன்று வரை…எந்த சின்ன கணக்கு போட வேண்டும் என்றாலும், போட்டு விட்டு….’ சரிதானே ‘ என்று என்னவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கி கொள்கிறேன்…

மளிகை சாமான் வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும், கரெக்டாக சில்லறை வாங்கி வந்துவிடுவேன்…..

அப்பா என்ன ஒரு மேதை என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது….கணக்கு இல்லேனா வாழ்க்கை இல்லை என்று சொல்வது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது….

என் செல்வங்களில் ஒன்று கணக்கில் என்னை கொண்ட போது , உணர்ந்து, அவளுக்கு உற்சாகம் அளித்து, கணக்கு இல்லாத க்ரூப் எடுத்து படிக்க வைத்து,

சில பல ஏசல்களுக்கு பாத்திரமாகி …..உன்னைபோலவே அவளையும் ஆக்காதே…. என்று கூரினவர்களுக்கு மத்தியில்,

அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தோன்ற…அவளுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்துவிட்டேன்….

ஒரு கஷ்டமும் இல்லாமல் படிக்கிறாள் ….

என்னமோ …. யோசித்துப்பார்த்தால், கணக்கோ ஆங்கிலமோ அறிவியலோ….. எதில் புலியோ, பூனையோ… நல்ல மனிதனாக இருக்க வேண்டும் முதலில்….

தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )

எத்தனை முறை விழுகிறோம் என்பது பெரிதல்ல, விழுந்த பின் எழுந்திருக்கிரோமா என்பது தான் கேள்வி…

இவை எல்லாவற்றையும் தாண்டி நமக்கென்று ஒரு வாழ்க்கை கடவுள் வடிவமைத்துள்ளான் என்ற நம்பிக்கை வேண்டும்…..

நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….

ராமானுஜருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்……..