மாமியார் மெச்சிய மருமகள்

மருமகளை மகளாக பார்ப்பவர்கள் எத்தனை பேர் ?

முழுக்க முழுக்க மகளாகவே எண்ண முடியாது… வாஸ்தவம் தான்… மருமகள்களாகிய நாம் மட்டும் என்ன மாமியார் மாமனாரை சொந்த அம்மா அப்பாவாகவே வா நினைக்கிறோம்….
அது போல தான். 
என்ன இருந்தாலும் எங்க அம்மா மாதிரி … எங்க அப்பா மாதிரி…
இது போல பேச்சுக்கள் வர தான் செய்யும் 

ஆனால் மாமியார் மெச்சிய மருமகள் வானத்தில் நானும் மிதந்தேன்.

நாத்தனார் பிள்ளையின் திருமணத்தில்
, ஓடி ஆடி வேலை செய்து, பாட்டு பாடி, எல்லா பொறுப்புகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்து, மனதில் சில கசப்புகள்  இருந்தாலும் சபையில் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிற ரீதியில் என் கடமைகளை செய்து கொண்டிருந்த போது  கல்யாண மண்டபத்திலேயே, என் மாமியார் கண்ணில் ஜலம்.  
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அனு ….எனக்கு இப்பிடி ஒரு மாட்டுப்பொண்ணு அமைஞ்சதுல பெருமை…. “கூறியபோது  சுகமாக இருந்தது.
உறவுகளில் மன கசப்பு என்பது சக்கரையில் இனிப்பு …போன்றது. பிரிக்க முடியாது . ஆனால், கசப்புகளை மட்டுமே நினைத்து கொண்டிருந்தால் , வாழ்க்கையில் அது தான் மிஞ்சும். இனிமை கண்ணுக்கு  தெரியாது.
தோழி ஒருத்தியின் மாமியாரும் சமீபத்தில் ,
“எங்க மீனா இல்லேன்னா என் பிள்ளைக்கு ஒண்ணும்  ஓடாது ….. 
சமையல் வேலையும் பாத்துண்டு, அவனுக்கு  வேணும்கறதையும் எடுத்து ..குடுத்து….வியாபாரம்  சம்பந்தமான அதனை  பேப்பரும்  அவளுக்கு தான் தெரியும் ” 
என்று சொன்ன போது  மகிழ்ச்சியாக இருந்தது.
சாதாரணமாக சுடிதார் போடும்  

மருமகள் ஊருக்கு போனபோது புடவை உடுத்தி தன்னுடன் கோவில்களுக்கு வந்தது பிடித்தது என்று சொன்ன மாமியார் 

எனக்கு என் பெண் வீட்டில் இருப்பதை விட இங்க தான் பிடிச்சிருக்கு என்று சொன்ன மாமியார்….
இவர்கள் எல்லோருமே, மருமகள் மேல் பாசம்  உள்ளவர்கள்.

பாசத்தை வெளிப்படுத்த   தெரிந்தவர்கள் ….

மனதுக்கு இதம் அளிக்க  கூடியவர்கள்.
மருமகள்களாகிய  எங்களுக்கும்  வேறு என்ன வேண்டும். 

நான் கற்ற பாடம்….. சொல்ல வருவதை அந்த நேரத்தில் சொல்ல வேண்டும். பிடித்ததை பிடித்தது என்று சொல்வதில் கால தாமதம் வேண்டாமே……  

2017… அமைதியாக, ஆனந்தமாக அமையட்டும் !!!!

புதிய வருடம் 

புதிய செயல்கள்

புதிய சிந்தனைகள்

புதிய முயற்சிகள்

இன்னும் எவ்வளவோ புதிய ஆரம்பங்கள்…

எல்லாம் , நல்லபடி நடக்க எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்கள்!!💐

போன வருடம் நடத்தாது எல்லாம் இந்த வருடம் நடத்துவோம்

விட்டுப்போன செயல்களை முடிப்போம்

விட்ட சொந்தங்களை புதுப்பிப்போம்

முடிக்காத அந்த புத்தகத்தை படித்து முடிப்போம்

கணனியை எப்போதும் கட்டிக்கொண்டிருக்காமல் , காலாற நடக்கலாமே

கை தொலைபேசியின் அசுர பிடியிலிருந்து விடுபட்டு நமக்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நம் அம்மா அப்பா குழந்தைகள் இவர்களோடும் பேசலாம்!

சிறிது தொலை காட்சி, 

அம்மாவுக்கோ மனைவிக்கோ சிறிது சமயலறையில் துணையாக,

பிள்ளைகளிடம் விளையாட்டாக…(வாழ்கை பற்றி சீரியசாக இல்லாமல், நீங்கள் செய்த குறும்புகள், சேட்டைகள் )பேசலாம்…

எண்ணி பாருங்களேன்….

எவ்வளவு உள்ளது செய்வதற்கு….

வாழ்த்துக்கள்!!!!

காது கொடுத்து கேட்டேன் …

காது கொடுத்து கேட்டேன் … என்றவுடன் 

ஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா?

அதுதான் இல்லை. … 

நான் சொல்வது 

Listening !…கேட்பது… 

பிறர் சொல்ல வருவதை கேட்படது.

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே.. 

முக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே !!

அது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது!

பேசாமல் கேட்பது …

அவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது… 

ஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…

உங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும். 

சொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் புராணம் பாடினால் போதும். 

சொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள். 

கரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் மனது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள். 

Happy listening !!

பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..

அவள் ஒரு இல்லத்தரசி. மாலை வேளையில் முகம் கழுவி, தலை சீவி, பொட்டு வைத்து, கடவுள் முன் விளக்கேற்றி வழிபட்டு தன்னை நேர்த்தியாக பராமரித்துக் கொன்டு கணவனுக்காக காத்திருப்பவள்.

மணம் முடித்து வருடங்கள் பல ஆகியும், அவள் இதை பின்பற்றிக்கொன்டிருந்தாள்.

இரவு
கணவன் கைதொலைப்பேசியில் பேசிக்கொன்டே அழைப்பு மணியை அழுத்திய போது, துள்ளி எழுந்து வாயிற் கதவை திறந்தவளை பார்த்து கண் சமிட்டியபடியே உள்ளே நுழைந்தான். அவளுக்கு உள்ளமெல்லாம் பூரிப்பு.

படபடவென்று சாப்பாட்டு தட்டை வைத்து பரிமாறினாள். அவன் சம்பாஷனை முடியாததால் பேசிக்கொன்டே சாப்பிட்டு எழுந்தான்
அவள் மற்ற வேலைகளை முடித்துக் கொன்டு படுக்கை அறைக்கு வந்தாள்.
(தலைப்பில் இருப்பது போல் பாலும் பழமும் கைகளில் ஏந்தாமல்)
குளிர்சாதன பெட்டி இதமாக மெட்டு கட்டிக் கென்டிருந்தது. ஒரு பக்கம் தொலைக்காட்சி பெட்டியில் ஒருவர் அனல் பரக்க விவாதித்துக் கொன்டிருந்தார்.

கணவன் அருகில் வந்து படுத்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்தான் கணவன்.

தன் விரல்களால் விளையாடினான்.
இடையிடையே பேசினான்.
சிரித்தான்
நடுவில் முகத்தை துடைத்தான்.
ஒரு மணி நேரத்திற்கு பின்பு ……………….

தன் விரல்களால் விளையாடி,
இடையிடையே பேசிக்கொன்டிருந்த,
சிரித்துக் கொன்டிருந்த,
ஸ்க்ரீனை துடைத்த

“கை தொலைபேசியை”

வைத்துவிட்டு திரும்பிய போது அவள் ஒரு மணி நேரம் முன்பே ஆழ்ந்து உறங்கியிருந்தாள்…..

மனைவிகளுக்கு இக்காலத்தில் கணவன்களின்
கைதொலைபேசிகள் தான் சக்களத்திகள் !!!!!

என் பாட்டி

image

காலையில் எழுந்தது முதல் கை தொலை பேசியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.

விதியாசமாக வந்த செய்தி… என் பாட்டியை பற்றி தெலுங்கு செய்தித்தாளில் வந்த செய்தி மற்றும் புகைப்படம்.
image

102 வயது இந்த வருடம்  பூர்த்தியாக போகும் குமரி !

image

கடமை, காருண்யம், கனிவு இது மட்டுமே அவளுக்கு தெரியும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் காப்பியை குடுத்துவிட்டு தான் மறு வேலை.

தொலைநோக்கு பார்வை….
நாகரீகம் என்பது உடையில் இல்லை , உள்ளத்திலும் சிந்தனையிலும் உள்ளது என்பதற்கு அவள் ஒரு நல்ல உதாரணம்.

ஐந்து பிள்ளைகளை பெற்று அதில் இரண்டை பலி கொடுத்து,
இதுவும் கடந்து போகும் …..
என்று வாழ்கையை நடத்திக்கொண்டிருப்பவள்.

கொள்ளு பேத்திகளாகிய என் மகள்களுக்கு அவ்வபோது டிப்ஸ் தருபவள். !!!!

image

image

படிக்கவா கல்யாணம் பண்ணிக்கவா என்றும் கேட்க்கும் என் மூத்த மகளிடம் ……முகத்தை சுளித்து கல்யாணம் அப்பறம் ஆகட்டும்… மேல படி ….. நன்னா படி என்று சொல்லும்போது, என்ன ஒரு தெளிவான சிந்தனை என்று நான் வியக்காத நிமிடம் இல்லை.

அனாவச்ய மன உளைச்சல்கள் இல்லை.
இப்போது நினைவு அதிகம் இருப்பதில்லை….( பார்க்க பொறாமையாக இருக்கிறது…)
வருவோரை பொக்கை  பல்லை கட்டி சிரித்து வரவேற்க வேண்டும்…
காபி குடிக்க சொல்ல வேண்டும்
அவர்கள் விடை பெரும் பொது காலில் விழுவார்கள் , நன்றாக வாய் நிறைய வாழ்த்த வேண்டும்
மீண்டும்பொக்கை  வாய் சிரிப்பு…
டாட்டா  காண்பிக்க வேண்டும்…..

அடேயப்பா என்ன ஒரு வாழ்க்கை.

image

புகைப்படம் எடுத்த கையோடு அதை வாங்கி பார்ப்பது !!

அவள் கடந்து வந்த பாதை கரடு முரடானது என்றாலும்….
நாம் கற்றுக்கொள நிறைய பாடம்….

எதையும் அமைதியாக அணுக வேண்டும்
இது(சுகமோ துக்கமோ ) நிரந்தரம் இல்லை எதுவும் நிரந்தரம் இல்லை
அடுத்த தலைமுறையை / அடுத்தவர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க விடுவது
விருந்தோம்பல்
மனமார வாழ்த்துவது
தன்னை எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்வது
( கழுத்தில் இரண்டு சங்கலிகள் கைகளில் வளையல்கள், மோதிரங்கள் )…
மனமும் அமைதியாக இருந்து சிறிது ஒப்பனையும் செய்து கொண்டால் நமக்கே நம்மை பிடிக்கும்

அவள் வாழும் ஒவ்வொரு தினமும் எங்கள் குடும்பத்தார்க்கு ஒரு போனஸ் ……
வாழ்த்த வயதில்லை எனக்கு ஆனால் என் பாட்டி  என்று மார் தட்டிக்கொள்ள  தவறுவதில்லை….

அவளை போலவே வாழ பழக்க படித்திக்கொண்டு விட்டேன்….
அவளை போலவே நெடுநாள் வாழ்வேனா என்பது தெரியாது… வாழ்ந்தாலும் அதுவும் அவளை போல தான் இருக்கும் என்பது மட்டும் தெரியும்…..

image

பாட்டியின் கால்களை பின் தொடர ஆசை….

image

நான் குழந்தையாக இருந்த போது…..அவள் கைகளில்…

மாலை சூடும் மண நாள்

image

மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள் ….
இன்று  அன்னாளை 25வது முறையாக கொண்டாடுகிறோம்.
பிறந்த வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்ததை விட 4 வருடங்கள் கூடுதலாக உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்

என்ன தவம் செய்தேனோ….
உன்   ஒரு பாதியாய் வாழ்வதற்கு

பெற்றவனையும், சிற்றையனையும் காப்பேன்
என்னுடன் இருப்பாயா என்றாய்…

என்னை பெற்றவர்களுக்கும் ஆண் பிள்ளை இல்லை
அவர்களை பேண நீ என்னுடன் இரு,
நானும் இருக்கிறேன் என்றேன்

image

உன் வாக்கை நீ நிறைவேற்றிவிட்டாய் …
என்ன புண்யம் செய்தார்களோ உன்னை மருமகனாய்  அடைய

நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் (உன் துணையுடன்)….

image

என் ஆசிகளை மட்டுமே எண்ணிப்  பார்கிறவள் நான்
என் வாழ்வின் ஐந்து ஆசிகள் ….நீயும், என் மகள்களும், அம்மாவும் அப்பாவும்….
ஒரு பதிவில் கூறி விட முடியாது நம் உறவை.
என் மரியதைக்குரியவனே பல தருணங்களில் நீ என் முன் விஸ்வரூபமாய் உயர்ந்திருக்கிறாய்
பல சமயங்களில் உன்  மனதை நானும்
என மனதை நீயும் வேதனை அடைய செய்திருக்கலாம்
ஆனால் அது நல்ல தாம்பத்யத்தின் ஒரு பங்கு

image

சோதனை

என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. தொண்டை குழியில் ஒரு அடைப்பு…

இயலாமை, கோபம், வருத்தம், நம்பிக்கை, பரிதவிப்பு, ஏமாற்றம், கருணை, எல்லாம் ஒரு சேர ஒரே சமயத்தில் என் மனதை ஆட்க்கொண்டு உலுக்கி எடுக்கிறது.

ஆனால் என் வயதின் காரணமோ, அல்லது நம்பிக்கையின் காரணமோ, அல்லது பக்குவத்தின் காரணமோ …. என்னை ஒரு புறம் சமாதான படுத்தவும் செய்கிறது.

சின்ன துன்பம் வந்தாலே துவண்டு விடுபவர்களின் மத்தியில் என் தோழி ஒரு பெரிய போராட்டத்தை ஐந்து வருடங்களாக போராடி வருகிறாள்.

முதல் முதலாக புற்று நோய் கண்டறிய பட்ட போது என் தோள்களில் சாய்ந்து அழுத அவளை
இதுவும் கடந்து போகும் என்று தேற்றினேனே..

புற்று நோய்க்கு சவால் விடுத்து தன் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக போட்டு நடக்கும் போராட்டம்.

தன் மகனுக்கு வேண்டியாவது தான் வாழ வேண்டும் என்று தனக்கு தானே உர்ச்சாகமளிதுக்கொண்டு வாழ்கிறாள்…
ஒரு மாதமாக கண் பார்வை இல்லை… உபயம்: நோயின் வீரியம்…

வாழ ஆசை.
உண்ண ஆசை
உடுக்க ஆசை
அலங்கரித்துக்கொள்ள ஆசை
நண்பர்களுடன் நேரம் செலவிட ஆசை.
பண்டிகைகளை விடாமல் அழகாக செய்ய ஆசை..

அதனால் தான் அந்நோய்க்கு உன்னிடம் இதனை ஆசையோ ?

சீக்கிரம் உன் பார்வை நேராகி, உன் உடல் நிலை தேறி
நீ இப்போது இருக்கும் கொடிய வேலிக்குள்ளிருந்து மீண்டு வர நான் ஓயாமல் அந்த கடவுளை பிரார்த்திக்கிறேன்…

உனக்கு பிடித்த தாளிச்சு கொட்டிய தயிர் சாதம் என் கையால் தயார் செய்து கொடுக்கிறேன்…
சீக்கிரம் வா………………..
என் இதயம் கனக்கிறது பெண்ணே..

என் பிரார்த்தனைகள் வீண் போகாது …..அவள் பிரார்த்தனைகளும் தான்….