Category Archives: பகுக்கப்படாதது

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

அடி வயிற்றில் ஒரு சுழற்சி
தொண்டையில் ஒரு உருண்டை
கண்களில் மூட்டிக் கொண்டு நிற்கும் கண்ணீர்

ஒவ்வொரு தாய்க்கும் ,தாய் அமுதம் சுரக்கும் தந்தைக்கும் பிள்ளைகளை விட்டு பிரியும் தருணத்தில் ஏற்படும் உணர்ச்சி .

ஸ்டீரீங் வீல் பக்கதில் கை தொலைபேசியில் GPS வழி காட்டுகிறது. பின் சீட்டில் இருந்து கொண்டு எட்டி பார்க்கிறேன். 44 நிமிடங்கள் விமனனதளம் சென்றடைய என்கிறது. மனம் அதை 45ஆக ரவுண்டு ஆப் செய்து கொள்கிறது. ஏதோ பேசிக்கொள்கிறோம். ஒரு படபடப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. மறுபடியும் பார்க்கையில் 10 நிமிடம் பின் 9,8,7,6,5 4,3,2,1. இறங்கும் இடம் வந்து இறங்கி, பெட்டிகளை வெளியில் எடுத்து வைத்து விட்டு கட்டிக் கொள்கிறேன் மகளை .
இரண்டு வாரங்கள் முன்பு இளையவளை பிரியும் போதும் இன்று மூத்தவளை பிரியும் போதும் கட்டிக்கொள்ளும் அந்த நொடியில்
மீண்டும் அவர்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டுவிட மாட்டோமா என்று தவிக்கிறேன்.

முடிந்தால் ஒவ்வொரு தாயும் செய்திருப்பாளே !

அனால் அதற்க்காக பெறவில்லையே !

பொங்கும் உணர்ச்சிகளை நன்றாக கையாண்டு, சிரித்து, சின்னதாக மென்மையாக புத்தி சொல்லி ( வேறென்ன வேளா வேளைக்கு சாப்பிட ) இறைவனை துணையிருக்க அழைத்துவிட்டு கையசைத்து விடை கொடுத்தேன்.
மீண்டும் பார்க்கும் வரை கைத்தொலை பேசியும் கணினியும் துணை !
நான் அழுது பிள்ளைகளை பலவீனமாக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி கொண்டேன் மூத்தவள் பிறந்த போதே !இன்று வரை வெற்றி. போக போக எப்படியோ தெரியாது.

பயணங்கள் முடிவதில்லை
அஞ்ஞானங்கள் விடுவதில்லை
மனங்கள் அடங்குவதில்லை
ஆனால் அடங்கித் தான் ஆக வேண்டும் . நமக்காகவும் பிள்ளைகளுக்காகவும்.
புத்தியை வேறு விதமாக மாற்ற பழகுங்கள் . என் கையில் படிக்க புத்தகமும், ஸ்வெட்டர் போடுவதற்கு நூலும் ஊசியும் இருக்கு.

தித்திக்கும் என் 25 வருஷ சக்கரை பொங்கல் !

அன்புள்ள ஷ்ரியா ,
உன்னோடு இருக்கும் போது
நான் உலகத்தை திரும்பி பார்க்க விரும்புவதில்லை !
என் நெஞ்சில் முகம் புதைக்கும் போது
உன் கண்கள் மூடி நீயும் அதையே உணர்த்துகிறாய் .
உன் வயது ஏற ஏற என் வயது குறைகிறது
என் புடவை தலைப்பில் நீ ஒளிந்த காலம் மாறி உன் துப்பட்டாவில் நான் முகம் புதைக்கிறேன் .
உனக்கு பால் சாதம் ஊட்டியது போய் இன்று நீ எனக்கு பாஸ்தா ஊட்டுகிறாய் !
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாரதியின் பாட்டு உனக்காக அன்று நான் பாடினேன்
என் கண்ணில் பிறரால் நீர் வழிந்தால் உன் கண்ணில் கனல் பறக்கிறது இன்று !
25 வருஷம் உன் தலை கோதி , உச்சி முகர்ந்து ( அந்த மணம் ஒரு கிறக்கத்தை தரும் ) என் கண்ணின் கருமணியாய் உன்னை வளர்த்து, இன்று பெருமையாய், உன் சேயாய் மாறியுள்ளேன்.

நீ எல்லா வளமும் குணமும் நலமும் பெற்று
ஆசைகள் நிறைவேறி, இன்று போல் என்றும் தெளிவாக தைரியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
இப்படிக்கு ,

உனக்கு அம்மாவாக படைக்கப் பட்டதில் கர்வம் கொள்ளும் தாய் !
தித்திக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💕💕💕💕🥰🥰🥰😘😘😘😘

பொ(டவ) போச்சே !

வடிவேலு ஒரு படத்தில், ‘வட போச்சே ‘னு சொல்வாரே அது போல தாங்க எனக்கும்
ஒண்ணு நடந்தது.
சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாங்க்ர கதையா , நண்பி சாந்தி , இதை
பாருங்கோ buddy னு ஒரு அரை டஜன் பொடவைகளோட போட்டோ வை அனுப்ப , அந்த ஒரு
நொடி சலனத்துக்கு நான் பலியாக , வேற என்ன ஆர்டர் தான். ஒண்ணுக்கு பதிலா
ரெண்டு பிளஸ் மாமியாருக்கு ஒண்ணு . நீங்க வாங்கலையா னு கேட்டா, புண்யவதி,
பக்கத்துக்கு எலைக்கு தான் பா பாயசம் ஊத்த சொன்னேன் எங்கிட்ட ஏற்கனவே
எக்கச்சக்கமா இருக்கு னு சொல்லி எஸ் ஆயிட்டா !

சரி நம்ம பங்குக்கு நம்மளும் பக்கத்துக்கு எலைக்கு பாயசம் ஊத்தலாம் னு
நம்ம பத்மா மாமிய இழுத்து விட்டேன். அவா பார்த்துட்டு எனக்கு
பிடிச்சதெல்லாம் வித்து போச்சு பா னு சொல்லிட்டா . சரி பாக்கலாம் அப்பறமா
ஏதானும் நல்லதா வாங்கிக்கோங்கோ னு சொல்லி சமாதான படுத்த்தினேன்.

சரினு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில போய் ஆர்டர் பண்ணிட்டு பணத்த
அனுப்பலாம் னு பார்த்தா அந்த பக்கதிலேந்து மெசேஜ் மும்பைக்கு கொரியர்
போறதில்லயாம் மேடம் னு ! ஓ அப்பிடியா னு கொஞ்சம் ஸ்வரம் இறங்கினாலும்
டக்குன்னு பத்மா மாமிய கூப்ட்டு நான் செலக்ட் பண்ணினதுல உங்களுக்கு
பிடிச்சுதே அத நீங்க வாங்கிக்கோங்கோ னு சொல்ல , அப்பப்பா உங்களுக்கு
எவ்ளோ பெரிய மனசு னு ஏகத்துக்கு என்ன புகழ்ந்து தள்ளிட்டா னா பாத்துக்கோங்களேன். நானா இருந்தா ரொம்ப வருத்த பட்டிருப்பேன் னு சொல்லி மாஞ்சு போனா பத்மா மாமி.

என்னடான்னு பாத்தா அதுலேந்து ஒரு புடவைய எனக்கு வாங்கி என் பிறந்தநாளுக்கு பரிசு ! எவ்வளவு சமயோஜிதமான எண்ணம் இல்ல ?

படத்தில் கட்டி கொண்டிருக்கும் புடவை தான் அது. ரவிக்கை துணியோட மஞ்சள் குங்குமம் வளையளோட என் கூட பொறந்த akka இருந்தா எப்பிடி அனுப்புவாளோ அது மாதிரி அனுப்பின பத்மா மாமி

 

ஆனா இதுல என்னனா எனக்கு பெரிசா ஏமாற்றமா இல்ல ! ஏன்னா அது ஒண்ணும் நமக்கு புதுசு இல்லியே ! அதுக்காக எனக்கு வாழ்க்கையே ஏமாற்றம் தான் னு எல்லாம் நா ஒளர போறதில்லை. சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். எதிர்பார்ப்புகள் இருக்கற இடத்தில தான் ஏமாற்றங்கள் ஆனா எதிர்பார்ப்பு இல்லாமல் எப்படி வாழறது ? எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் கொஞ்ச நாள் ல பழகிடும் .

சரி எதிர்பாக்காமலே இருக்க முடியுமா நா இல்லை னு தான் எனக்கு தோன்றது. எவ்வளவு வயசானாலும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு – நடக்கலை னா ஏமாற்றமும் இருக்கு. சின்ன வயசுல அதோட பாதிப்பு அதிகமா இருக்கு, வயசான கொறையுது.

ரென்டு வருஷம் முன்னாடி buddy ஷாந்தி ய சந்தித்தபோது ஒரு புடவை வெச்சு குடுத்தா.சந்தோஷம் பிடிபடலை ( கூட பொறந்த பொறப்புன்னு ஒண்ணு இல்லாததால இந்த மாதிரி பாசத்தில தொபுக்கடீர் னு வழுக்கி விழுந்திடுவேன். பாசமா அடி படும்போது வலிக்காது. மறுபடியும் இப்போ அப்பிடி ஒரு பாச வழுக்கல். இதே போல நான் எல்லாரோடும் சந்தோஷமா இருக்கணும் னு வேண்டிக்கறேன். ஒரு புடவைக்கு என்ன இவ்வளவு பேச்சு நீங்க கேக்கலாம் .. ஆனா புடவைக்கு பின்னாடி அவர்களுக்கு என் மேல் இருக்கும் அன்பு நிர்மலமானது !

ஷாந்தி அன்பளித்த புடவை

எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்ல போகிறோம். இருக்கும் காலம் வரை எல்லோரிடமும் அன்பான வார்த்தைகள் பேசுவோம், சின்ன சின்ன செயல்களினால் அன்பைவெளிப்படுத்துவோம், எதுக்கு அனு இந்த விளம்பரம் னு கேட்ட போது, ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவருடன் அன்பாக இருப்பது எப்பிடி, எதிர்பார்ப்பு இல்லாத (unconditional) அன்பை வெளிப்படுத்துவது எப்பிடி னு மக்களுக்கு சொல்லலாமே னு தான் னு சொன்னேன்.

இந்த ஊரடங்கு வேளையில் வீட்டுக்கு வந்து துணியை வாங்கி கொண்டு போய் ரவிக்கை தைத்து கொடுத்த எங்கள் பிரகாஷ் bhai கும் நன்றிகள் பல .

வாங்க பழகலாம் !!

அன்பை பொழியலாம் !!

 

வாட்சாப்(ப்பு) …..

வாட்சாப் – இன்றைய நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு மூலப் பொருள்.

நமக்கு பல நேரங்களில் வைக்கிறது ஆப்பு !

லாஸ்ட் சீன் – நேர்ல எப்போ கடைசியா பாத்தோம் னு தெரியாது ஆனா வாட்ஸ் ஆப் ல

“நா பாத்தேன் கடைசியா 5.53 கு இருந்தான் சார் அவன். ” னு நம்ப அவரை வேவு பாக்றத பெருமை பேசும் காலம் இது.

ப்ளூ டிக் வந்தது, உடனே offline போய்ட்டாங்க என்று குத்தம் சொல்லும் காலம்.

மெசேஜ் பார்த்துட்டாங்க எப்பவோ ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல என்று குமுறும் காலம்.

நாம கேக்காமலேயே காலைல கண் முழிக்கும் போது ,

You have been added to ……..என்று ஒரு இம்சை. நாம கடுப்புல இருந்தா , add பண்ணவன் எவனா இருந்தாலும் பரவா இல்லை னு உடனே exit பண்ணிடுவோம். அவன் நேரம் நல்லா இருந்து, நம்ம போயிட்டு போறான் பய னு விட்டோம், செத்தோம். காலை வணக்கத்தில ஆரம்பிச்சு, இரவு வணக்கம் வரைக்கும், சகல விதமான forward கள் போட்டு நம்மை திக்குமுக்காட வெச்சுருவாங்க.

உடனே அந்த குரூப் அட்மின் செட்டிங் மாத் துவாரு. ஓன்லி அட்மினிஸ் னு. அப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

அதுலேயும் என்னை போல நடுத்தர வயதும், எழுவது எண்வதுகள் ல இருக்கறவங்களும் அடிக்கற லூட்டி இருக்கே சொல்லி மாளாது போங்க !

என் பிறந்தநாளுக்கு ஒரு குரூப் ,

என் வீட்டு நாய் குட்டிக்கு ஒரு குரூப், என்அடுக்குமாடி குடியிருப்பு குரூப்

என் பள்ளி தோழிகள் / தோழர்கள் ஒரு குரூப் ( இதுல நீங்க 2/3 பள்ளிகள் படிச்சிருந்தீங்க அவ்ளோ தான் சுத்தம் )

கல்லூரி தோழர்கள் ஒரு குரூப் , அதுல நம்மோடு நல்லா ஒத்துபோகற நாலு பேரோட ஒரு தனி கூட்டணி( குரூப்)

ஆன்மீக குரூப் (கள் )

இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்

(எண்ணியதில், விருப்பத்துடன் இரண்டு அல்லது மூன்றிலும், கட்டாயத்தில் மற்றவைகளிலுமாக நானே பதினோரு குரூப் களில் இருக்கேங்க 🙂 🙂

சரி இருக்கறது கூட பரவாயில்லைனு பாத்தா , இந்த மனஸ்தாபம் இருக்கே , இது ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி. தனி மெஸ்ஸஜும் சரி, குரூப் லேயும் சரி, குண்டக்க மண்டக்க புரிஞ்சுக்கறதே மக்களுக்கு பொழப்பா போச்சுங்கறேன் !

ஒரு நல்ல பழமொழி பாத்தோம்னா சரி பகிரலாம்னா உடனே அதுக்குள்ளாற பூந்து அவங்களா ஒரு அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு ஏன் என்ன வருத்தம், உன்னை யாரு என்ன சொன்னாங்க னு கேட்டு ஒரே கொடச்சல்.

K னு போட்டா ஒகே வாம்

S னு போட்டா yes ஆம்

TIA நா THANKING IN ADVANCE ஆம்

இப்படி ஒரு தனி அகராதியை இருக்கு ….

இதேயும் மீறி ஒகே னு அடிச்சதை பிச்சி பீராஞ்சு நான் அவமானப்பட்டேன் அசிங்கப்பட்டேன் எப்பிடி நீங்க ஒகே மட்டும் அடிக்கலாம்னு ஐந்து வருட உறவு ஒன்று கசந்து போனது போன வாரம். நானும் மன்னாடி பார்த்து, கெஞ்சி அழுது புரியவைக்க பார்த்தேன். நாப்பது நிமிடம் போராடிய பின் கைவிட்டேன். சில பரிச்சயங்கள் எக்ஸ்பயரி தேதியோடு வருமோ என்னவோ. !!!

எது எப்படியோ, இந்த பூமில இருக்குற கொஞ்ச காலத்தில தேவையில்லாத மனஸ்தாபங்களை தவிர்ப்போம். என்னை போல பேசி தீர்க்க முயற்சிப்போம். அதையும் மீறி விதி இருந்தால் தாங்கும். இல்லையென்றால் நாலு நாட்களுக்கு நம் மண்டையை காயவெச்சிட்டு போகும். !!!

ஒரு டெக்னாலஜி வந்தா அதை ஆக்கபூர்வமா கூட பயன் படுத்தலாம். சிறு பிள்ளை தனமாக விவாதங்களிலும், வெறுப்பிலும் ஈடுபடவேண்டாம்.

மொத்தத்தில் வாட்ஸ் ஆப் ஆப்பு உறவுகளிடையே வைக்காமல் இருக்க வாழ்த்துக்கள்

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

பதிவிற்குள் பதிவு

மயிலேயே கயிலை

கயிலையே மயிலை..

ஐம்பது வருட உறவை நினைவு கூர்ந்தேன்..

தோழி ஒருத்தி கூறினாள்.. கண்ணீர் முட்டுகிறதென்று…

மண்ணாசை வேண்டாம் என்றேன்

மண்ணாசை அல்ல…விலக்க முடியாத நினைவுகளின் வியாதி என்றாள்.

நினைவுகளையும் தேர்ந்தெடுங்கள் என்றேன்.

என்னிடம் இருப்பவையெல்லாம் நல்ல நினைவுகள் மட்டுமே ……

மார்கழி மாதத்து அதிகாலை இருளில் போட்ட கோலம்.

இரவு உணவிற்கு பின் நாயர் கடையில் தம் அடித்துவிட்டு, அப்பா வாங்கி வரும் வாழைப்பழம்

இன்று வரை யாருக்கு யார் என்ன வேண்டும் என்று புரியாத கோடி வீட்டு குருக்கள் குடும்பம்…

காலியாக இருந்த தெருவில் ஞாயிறு களில் வாடகை சைக்கள் பழகியது

இதயம் பேசுகிறது வார இதழ்க்காக காத்திருந்தது

பாலங்கள் படித்தது…சிவசங்கரியின் வாக்கு வேதமாக இருந்தது

பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றது

பத்தில் கோட்டை விட்டது

பன்னண்டில் பாரிஸில் படித்தது

கல்லூரிக்கு தோழியுடன் சென்றது

ரவி புக் ஹௌஸ் இல் தினம் ஏதாவது ஒன்று வாங்கியது

கண்ணாடி வளையலை புடவை மெல் வைத்து பார்த்து வாங்கியது

கொலுசு போட்டுக் கொண்டு வீட்டின் முற்றத்தில் மேலும் கீழும் நடந்தது

மருதாணி வைத்துக் கொண்டு ரசித்தது

அப்பாவுக்கு புற்று நோய் என தெரிந்ததும் அம்மாவிடம் ..நான் இருக்கிறேன் என தோள் கொடுத்தது

என்னவர் என்னைப் பல வருடங்கள் கழித்து பார்த்தது, அவருக்காக பாடியது

வாழை மரம் நட்டு , மணப் பெண் கோலம் பூண்டது

22 வருடங்கள் பூரணமாக இருந்தது

28 வருடங்கள் வந்து வந்து போனது

மொத்தம் 50!!!!

கருமையே அழகு காந்தாலே ருசி …..

கண்னா கருமை நிற கண்ணா…என்று விஜயகுமாரி 50 களிலோ 60 களிலோ ஒரு படத்தில் பாடுவார். தான் கருப்பாக பிறந்துவிட்டதற்காக தன்னை எல்லோரும் வெறுப்பதாக.

அழகாக பிறந்த வாழைக்காய் அன்று என் கையில் அகப்பட்டு இந்த பாடலை பாடியது.

எல்லா நாட்களும் ஒரு போல இருந்து விடுவதில்லை. ஆனால் எனக்கு பிடிவாதம் அதிகம்… எவ்வளவு கஷ்டமான நாளாக இருந்தாலும், மண்டையை தலையணையில் சாய்க்கும் போது எனக்கு நானே சொல்லிக் கொள்வது…

நாளைய பொழுது நன்றாக விடியும் !!!!

சரி…வாழக்காய்க்கு வருவோம்….

முதல் நாள் முழுவதும் ஏன் ஏன்… என்று அவ்வப்பொழுது விடை தெரியாது நடக்கும் சம்பவங்களில் ஒன்று நடந்து, மனம் முழுவதும் துக்கம் பரவி , கண்களை மூடினால் மனம் பதறி, புரண்டு புரண்டு, கனத்த மனதுடன் எழுந்து, சமைக்க முற்ப்படும்போது தாளித்து கொட்டிய உளுத்தம்பருப்பு ஒரு நொடியில் கருத்து, உள்ளே போக வேண்டிய வாழைக்காய், உள்ளே பாதி வெளியே பாதி என்று விழுந்து, என்னவோ போங்களேன்…. கறுத்து .. நன்றாக வேகாமல், என்னவெல்லாம் ஆக முடியுமோ அவ்வளவு ஆயிற்று…. அதையும் விடாமல் தின்றுவிட்டோம் என்பது வேறு கதை.

ஆனால், அது தானே யதார்த்தம் ?

சில நாட்கள் இப்படியும் இருக்கும். இன்று நான் என்ன சமைத்தேன் பாருங்கள் என்று எப்போதும் ஒரு போல அழகாக அமைத்த தட்டில் எல்லாம் அழகாகவே காட்ட முடியுமா?

ஒரு நாள் தீயிந்து விட்ட வாழைக்காயையும் காட்டுவோம் என்று தோன்றியது.

பக்குவம் இல்லாதவர்களுக்கு, சோஷியல் மீடியா தான் நிஜம் என்று நம்பத் தோன்றும் . எல்லாமே அழகாக, அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஆனால் இப்போது சிலர் அவ்வப்போது தெரிவிக்கிறார்கள், இந்த சோஷியல் மீடியாவை தாண்டி நானும் சராசரி மனித இனம் தான், என் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளன, கண்ணீரும் கவலையும் உள்ளது, நாங்களும் கணவன் மனைவி சண்டைகள் போடுவோம், எங்கள் குழந்தைகளுக்கும் உடல் நலம் கெடும்,எங்களுக்கும் அடி சருக்கும், எங்களுக்கும் மூட் அவுட் ஆகும்,எங்கள் வாழ்விலும் ரோஜாக்கள் முட்களுடன் தான் உள்ளன.

தீயிந்து போவதோ, துக்கம் வருவதோ, உடைந்து போவதோ, எல்லோர் வாழ்விலும் நடக்கும்.

ஆனால் 2 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, எழுந்து வேலையை பார்க்க வேண்டியதுதான். உனக்கென்ன, சொல்லி விட்டாய்…என்கிறீர்கள்… கேட்கிறது.ஆனால் உண்மையை சொல்லுங்கள். நீங்களும் அதை தானே செய்தீர்கள்/ செய்கிறீர்கள்.

அதான் அதே தான்……என் பாட்டி, எங்கள் காலனி நாகராஜன் மாமா, போன வாரம் மகனையும் மருமகளையும் பரி கொடுத்த பெற்றோர், (கல்யாணம் ஆகி இரண்டே மாதம் ஆன ஜோடி, ஒன்றாக உயிரை விட்டன)கணவனை பறி கொடுத்த என் தோழி,எல்லோரும் தங்களை ஆசுவாச படுத்திக்கொண்டு எழுந்து நடக்கிறார்கள்.நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவ்வப்போது ஒரு ரிமைண்டர் தேவை படுகிறது. மகான்கள் , வாழ்வியல் நிபுணர்கள் சொல்லாததை ஒன்றும் நான் சொல்லி விடவில்லை. ஆனால் என் எழுத்து உங்களில் ஒருவருக்காவது ஆறுதல் அளித்தால் அது என் பாக்கியம்.

ஈன்ற பொழுதினும்….

ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன் மகன்/மகள் சான்றோன் எனக் கேட்டத் தாய்.

வேறென்ன வேண்டும் ஒரு தாய்க்கு?

தன் உதிரத்தை உணவாக்கி கொடுத்து வளர்த்து தன் பிள்ளை நல்லவனாக அல்லது நல்லவளாக வாழ்வில் திகழ வேண்டும் என்பதை தவிர வேற ஒரு எண்ணம் எந்த தாய்க்கும் இருக்காது.

என் இரண்டாவது கண் இன்று தன் மனதில் உள்ளதை, தன் முதல் வகுப்பு ஆசிரியையை நினைவு கூர்ந்து பெற்ற தாய் அல்லாத தாய் போன்றவள் என்கிற தலைப்பில் ஏழுதியிருப்பது மிக பெருமையாக இருக்கிறது.இங்கே படியுங்கள் அவள் எழுதியதை

https://www.timesofamma.com/

கண்ணீர் மல்க மல்க படித்தேன்.

அந்த ஆசிரியைக்கு நானும் என்றும் கடமை பட்டிருக்கிறேன்.

பிள்ளைகளை பொறுமையுடன் வளர்க்க வேண்டுகிறேன்.

நீங்கள் பெரியவர்கள், உலகம் கண்டவர்கள். அவர்கள் இப்போது தான் பூத்திருக்கிறார்கள்

உங்கள் கண்ணோட்டத்தில் அவர்களையும் பார்க்க சொல்லி வற்புறுத்தாதீர்கள். உங்கள் வயது வரும் போது பார்ப்பார்கள். நம்புங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரின் கண்ணோட்டத்தில் பார்த்தீர்களா …?

இல்லியே …அப்பறம் இப்போது ஏன் ஏதிர்பார்க்கிறீர்கள்?

பொறுமை..தலையாய குணம்.

சும்மா வருவது இல்லை இந்த பதவி

இன்று நீங்கள் காட்டும்.பொறுமையும் அன்பும் நாளை நல்ல மரமாக வளர்ந்து, பின்னாளில் வ்ருக்ஷமாக விரிந்து பரந்து இருக்கும் போது உலகம் ஹா ஹா ஹா என்று அதன் பெருமை பேசும்.

சமீபத்தில், என் நண்பர்கள் மீனாவும் ரங்காவும் தன் மகளை எப்பிடி வளர்த்துள்ளார்கள் என்பதை முகநூலில் படித்தபோது மெய் சிலிர்த்தது. சின்ன வயதில் தானே செய்த ஆபரணங்களை விற்று வந்த காசில் தன் தெருவில் உள்ள தள்ளு வண்டி இஸ்திரி காரரின் மகளுக்கு படிப்பிற்கு அளித்துள்ளாள் அந்த குழந்தை.

எங்கிருந்து வரும் இந்த குணம் 10 -12 வயதில். ?

அதற்கான மார்க்கம் காண்பிக்கும் போது மட்டுமே.

மார்க்கம் யார் காண்பிப்பார்கள்?

பெற்றவர்கள் மட்டுமே!

வாழ்ந்து காட்ட வேண்டும் பிள்ளைகளுக்கு. ஓதினால் மட்டும் போதாது.

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே

என்று என் தோழி மீனாவுக்கு எழுதினேன். மெய்சிலிர்த்து கண்ணீர் வந்தது என்றாள். ஆனந்த கண்ணீர்.

அந்தப் பொழுதிர்க்காக தவம் கிடக்கிறோம்.அன்று மனதளவில் தளர்ந்த என் குழந்தை இன்று எனக்கு தாய். காலம் மாறும் என்று நான் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை.வாழ்ந்து காட்டி வெற்றி பெறுங்கள்.யார் சொன்னார்கள் படிக்கும் காலத்தில் மட்டும் தான் தேர்வுகள். நீங்கள் பெற்றோர் என்றால் தினம் தினம் தேர்வு தான். எல்லாமே அவுட் ஆப் சிலபஸ் தான் ,😎இது எனக்கு தெரியாதே என்று கையெல்லாம் விரிக்க முடியாது. கூகுளை கேட்காதீர்கள. உங்களை பெற்றவர்கள், அவர்களை பெற்றவர்களை கேளுங்கள். அத்துடன் கொஞ்சம் இந்த கால கணக்கு படி இதமாக பதமாக பொறுக்கும் சூட்டில் குழந்தையை குளிப்பாட்டுங்கள் !!!!வங்கியில் நாம் வைத்திருக்கும் சேவிங்ஸ் அகௌண்ட் போல தான். சிறுக சிறுக சேமிப்பை சேருங்கள் நாளை ஒரு பெரிய பொருள் ஈட்டுவீர்கள்…. வட்டியும் முதலுமாக….என் அனுபவத்தை இங்கே பதித்துள்ளேன். என்னை விட வயதில் மூத்தோர் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். என்னிலும் இளயவர்களுக்கு என் ஆசிகள். நீங்கள் தளரும் போது என்னை தொடர்பு கொள்ளுங்கள். உதவ காத்திருக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் அனு…..

காலம் படு வேகமாக சுழன்று, மையிலையில் பிறந்த என்னை, இன்று ஒக்லஹோமாவில் (அமெரிக்காவில்) கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மகள் இருக்கும் இடத்தில் அவளுடன் இருக்க வந்திருக்கும் இந்நாளில், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எல்லோருக்கும் எல்லா க்ஷேமங்களும் கிட்ட பிரர்த்திக்கிறேன்.

பாலைவனமாக காட்சி தரும் இடத்தில் இருந்து பழக்கம் இல்லையே அதனால் வந்த 2 தினங்கள் 2 யுகங்களாக நழுவின.

அந்தி சாயும் பொழுது,

முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்று,

கடந்து செல்லும் கார்கள்,

அமெரிக்காவின் வெறிச்சோடிய தெருக்கள்,

10 -11வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்த போது இருந்த உற்சாகம் ஏனோ இப்போது இல்லை. வயதா? இல்லை காலமா?

ஓராயிரம் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. எங்கிருந்து தொடங்கி எதை திருத்துவது என்று விளங்கவில்லை.

அதிகம் மௌனமாக இருக்கிறேன்

என் மௌனம் கணவரையும் குழந்தைகளையும், சிந்திக்க வைக்கிறது. எனக்கும் புரிகிறது.பல கேள்விகளுக்கு விடை இன்று இல்லை என்னிடம். ஆனால் கடவுள் அருளால் காலம்நல்ல தீர்ப்பையே தரும் என்று காத்திருக்கிறேன்.

Change ia the only constant change என்பார்களே, இந்த மாற்றம் புதிது. 10 நாட்கள் ஆன நிலையில், இன்று அதிக சிரமமாக இல்லை. சமைப்பதும், தொப்பி பின்னுவதுமாக நேரம் போகிறது. இறை அருளால், என்னை நான் மும்மரமாக எதிலாவது ஈடுபடுத்திக்கொள்ள தெரிவதால் எங்கு போனாலும் இருந்து விடலாம் என்கிற தெம்பு….இதை படிக்கும் என் வாசகர்களும் என்னுடன் இருப்பது பெரிய தெம்பு.நன்றிஇங்கிருக்கும் இந்த மாதங்களில், இந்தியாவில் இருப்பது போல் அரக்க பறக்க வேலைகள் இல்லாததால் எழுதுவது கூட கூடலாம்.