குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

2 responses to “குறும்பு பார்வை பார்த்தவரே ……

  1. மனதை தொட்டது அன்புடன்

    Like

பின்னூட்டமொன்றை இடுக