Monthly Archives: மே 2019

அவள் மெல்லச் சிரித்தாள் ……

அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை

. ஜீன்ஸ் பாண்ட், மேலே சிவப்பு கலரில் பூப்போட்ட சட்டை அணிந்து ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் அவள் நிற்க, அடித்த இளவெய்யில் காற்றில் அவள் கூந்தல் பறக்க, இரண்டு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி அவள் மெலிதாக சிரிக்க, அவள் கிளிக் செய்யப்பட்டாள். தனக்கே தன் கோலம்   பிடித்துப்போக, அவருக்கு அனுப்பினால் நன்றாக இருக்குமே என்று எண்ணி உடனடியாக வாட்ஸ் ஆப் செய்தாள் . ஏதோ நேற்று தான் அவரை முதன்முதலில் பார்த்தது போலும் அவருடன் முதல் முறையாக தொடர்பு கொள்வது போலவும் ஒரு பரபரப்பு. இரண்டு டிக் வந்தும், அது நீல நிறத்திற்கு மாறாதது சலிப்பை தந்தது…

என்னமா ….போன் பாத்துண்டே இருக்க என்ற பெண்ணை… ஒன்னும் மில்லடா சும்மாத்தான் என்று சொல்லி சமாளித்தாள்.

சிறிது இடைவெளிக்கு பின், smile often என்று கணவனிடமிருந்து பதில் வந்தது. த்ச் ….. அவ்வளவு தானா என்று ஒரு ஏமாற்றம். நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே.. இந்த உடை உனக்கு பொருந்துகிறது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதையும் சொல்லாமல், அடிக்கடி இப்படி சிரி என்று மட்டுமா சொல்வார்கள்? இந்த ஆண்களே அப்பிடித்தானா?

ஒரு இளம் பெண்ணாகஅவருக்கு அறிமுகமாகி, மேலே சொன்ன பாட்டில் வருவது போல வெட்கம் பெறுக பெறுக சிரித்தவள் அதே சிரிப்பை  திருமணமாகி முப்பதும் நாற்பதும், ஐம்பதும் வருடங்கள் ஆனா பிறகும் சிரிக்க முடியுமா? சிரிக்க கூடாது என்று அவளுக்கு ஒன்றும் வேண்டுதலும் இல்லை. ஆனால் சிரிப்பதில்லை. இயல்பாக இருப்பதாக அவள் நினைத்திருந்தாள் , அனால் அவள் சிரிப்பு தொலைந்ததை அவள் அறியவில்லை. எங்கே தொலைத்தாள், தேடினால் கிடைக்குமா?

இளம் மனைவியாக, புது சூழலில் மிரண்ட  விழிகளுடன் இருக்கும் பொது முதலில் தொலைத்திருக்க வேண்டும்

பின் தாய்மையின் பொறுப்புகளில், எதிர்பார்ப்புகளில், இன்னும் கொஞ்சம் தொலைந்திருக்கும்.

அலுவலகத்தில் , அந்த கதாபாத்திரத்தின், எதிர்பார்ப்புகளில் இன்னும் கொஞ்சம்,

வாலிப வயது பெண் பிள்ளைகளை புரிந்து கொள்வதில் கொஞ்சம்

வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், தான் பெற்ற  பிள்ளைகளையும் தலைமுறை மாற்று கருத்துக்களில் நாட்டாமை செய்தும் கொஞ்சம்

திருமண வயது பெண்ணோ பிள்ளையோ இருந்து, வரன் தேடும், அந்த நீண்ட பயணத்தில் கொஞ்சம்

தான்  அதுவரை நடு வயது எட்டியிருந்தால், தன் உடல் உபாதைகளில் கொஞ்சம்

எது எப்படி இருந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போக கூடாது என்று ஒரு கழக் கூத்தாடி போல, அந்த சம்சாரம் என்ற கயிற்றில் இந்த பக்கமும் விழாமல் அந்த பக்கமும் விழாமல், நடக்கும் போது கொஞ்சம்

இப்படி சிறிது சிறிதாக தொலைந்தது, அவளையும் அறியாமல் விட்டு போனதோ? ஆனால் இன்று அடிக்கடி சிரி  என்று கணவர் சொன்னபோது உணர்ந்தாள், அது கடினம் என்று.

பெண் மட்டுமே சம்சார சுழர்ச்சியில் சிரிப்பை தொலைப்பதில்லை,

பல ஆண்களும் தொலைக்கிறார்கள்.