கப்பலா, சிப்பலா?

இது மனதை சற்று கனமாக்க கூடிய பதிவு. அதே சமயம், மனதிற்கு தைரியமும், நம்பிக்கையும் தரும் என்று முயற்சிக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்கிற தத்துவத்தை முன் நிறுத்தியும் எழுதுகிறேன்.

கப்பல், எல்லோர்க்கும் தெரிந்தது. சிப்பல், இன்றைய தலைமுறை அறிவார்களா என்று தெரியவில்லை.

வீடுகளில், அந்த காலத்தில், வெண்கல பானையில் அரிசி வடிக்கும் போது, அதன் மேல் மூடவும், சிறிது சிறிதாக எடுத்து பரிமாறவும், இந்த சிப்பல் என்ற தட்டு உபயோகித்தார்கள். ஒரே தட்டில், ஒரு பக்கம் ஓட்டைகள் இருக்கும், ஒரு பக்கம் இருக்காது. பொங்கிய சாதத்தில் இருக்கும் அதிகப்படி கஞ்சியை இந்த ஓட்டைகள் வழியாக வடித்தார்கள். சரி இப்போது சிப்பல் என்றால் என்ன அதில் கொஞ்சம் தான் கொள்ளும் என்று தெரிந்தது.

சமீபத்தில், தோழி சாந்தி ராமச்சந்திரன் (சாந்த்ராம் என்று இன்ஸ்டா கிராம் குடும்பத்தில் பிரபலமானவர்) அவர்களின் தம்பி இறைவனடி சேர்ந்தார். புற்றுநோயுடன் போராடி, தன்னால் இயன்றவரை எதிர்த்து இறுதியில் தளர்ந்தார். அன்னாருக்கு எனது நமஸ்காரங்கள்.

Buddy , my brother lost his battle against cancer என்று சாந்தியிடமிருந்து ஒரு நாள் எனக்கு செய்தி. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று சொல்லிவிட்டு, அவரை இரண்டு வாரங்கள் கழித்து நேற்று தொலைபேசியில் அழைத்தேன். அரை மணி பேச்சு, இருவருக்குமே ஆசுவாசத்தை கொடுத்தது. ஒரு அக்காவாக, அவர் வருத்தம், அவரின் வேதனை என்னை உலுக்கியது. அவர் பெற்றோரை நினைத்து எனக்கு, மிக அதிக வேதனையாக இருந்தது. புத்ர சோகம் கொடுமையிலும் கொடுமை. தொண்ணூற்றி மூன்று வயது தந்தை பார்க்க வேண்டியது இல்லை தன் மகனின் மரணம். என் அம்மம்மா, இறந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நூற்றி மூன்று வயது வாழ்ந்தவர்.

தன் கணவரின் மரணம்,

தன் தலைச்சன் மகனின் மரணம்,

தன் இரு மாப்பிள்ளைகளின் மரணம்,

தன் தலைச்சன் மகளின் மரணம், இப்பிடி ஐந்து மரணங்கள் பார்த்தவர்.

ஆனால், நான் ஏன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டதே இல்லை. அது அவர்கள் கர்மா, அதை பார்க்க வேண்டியது என் கர்மா என்ற கண்ணோட்டம்.

நான் அம்மமாவிடம் கற்ற மிக முக்கியமான வாழக்கை பாடம்.

இது கலி காலம் மா, கனியிருக்க காய் உதிரும் என்பார் மாமனார். கனிந்த, முதிர்ந்த, பெரியோர்கள் இருக்கும் போது, பிஞ்சு காய்களான இளம் வயதினர் மரித்தல்.

சாந்திக்கு ஆறுதல் கூறும் போது, என் மாமனார் இச்சந்தர்பங்களில், கூறும் வார்த்தைகள், வழக்கு சொற்கள் கூறினேன்.

ஐயோ ஐயோ…இன்னார் இள வயதில் மரித்தார் என்று நான் அனத்தும் போது,

என்னம்மா பண்ணுவது, சிலர் கப்பலில் கட்டிக் கொண்டு வருவார்கள், சிலர் சிப்பலில் கட்டிக்கொண்டு வருவார்கள். யாருடையது எப்போது தீருகிறதோ அப்போது கிளம்ப வேண்டியது தான். கட்டிக்கொண்டு வருவது என்று குறிப்பிடுவது நம் கர்மா என்று கொள்ளலாம். கப்பல் அளவு தொலைக்க வேண்டிய கர்மாக்களை தொலைத்தால் தானே, அடுத்த கட்டம்.கொண்டு வந்தது தீரும் வரை, இருந்து/ வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒரு வேளை, கொஞ்சம் தான் கழிக்க வேண்டியதிருந்தால், வந்தான் வென்றான் சென்றான் என்று துரிதமாக கிளம்பி விடலாம். இல்லையென்றால் என் அம்மம்மா போல, கண்டு, முதிர்ந்து, அனுபவங்களை ஏற்று, அதை என் போன்ற பேத்திகளுக்கு, கற்பித்து, பின் விடைபெறலாம்.

எது எப்படியோ, புறப்பும் இறப்பும் இன்றும் ஒரு புதிர். அதற்கு விடை கிடைத்து விட்டால், நாம் கடவுள். காலம் நம் கையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

சாந்த்ராம் இப்போது இடும் பதிவுகளில், #thistooshallpass. அது தான் நிஜம். எவ்வளவு அழுது புரண்டாலும், அடுத்த வேளை பொழுது விடியும், நாக்கு காப்பியை தேடும், பசி எட்டிப் பார்க்கும், மௌனம் கலையும், சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை மறுபடியும் அமையும். எதுவும் எதற்காகவும் நிற்காது.

என் அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன், ஒரே மகளான நான், என் அம்மாவின் தோளோடு தோள் நின்று, சமாளித்தேன். ஆனால், இரவில் அழுது மறுகி, அப்பாவின் மூச்சு சீராக உள்ளதா என்று, அருகில் சென்று பார்ப்பேன். செல்ல அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை எப்பிடி கொண்டு செல்வது? சாத்தியமே இல்லையே என்று அன்று நினைத்தேன். ஆனால், அப்பா இறந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டன. அவர் இறந்த பதின்மூன்றாவது நாள் அம்மாவை சென்னையில் விட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். எது நின்றது?உப்பும் தண்ணியும் ஊற ஊற எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்ன அம்மாவை தனியாக விட்டுவிட்டு போகும் போது மனது கனத்தது.

வந்த ராஜுவும், ராமசாமியும் (சாந்தியின் தம்பியும், என் அப்பாவும்) தங்கிவிட்டுருந்தால், நமக்கு ஆனந்தமே. ஆனால் இல்லையே.. அது நம் முடிவு இல்லையே. இனி அவர்களின் நினைவும், வாழ்க்கையை எப்பிடி எதிர் கொண்டார்கள், இருவரும் புற்று நோயை எப்பிடி எதிர்த்து போராடினார்கள் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும்.

கவிஞர் சொன்னது போல

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் எது…

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்,

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்.

சின்ன தோல்விகளுக்கெல்லாம், துவண்டு போவது நம்மை எங்குமே இட்டு செல்லாது. தோல்வி என்ற வார்த்தையை அகற்றி விட்டு, அது ஒரு பாடம் என பார்க்க பழகுங்கள்.

தளராதீர்கள் நண்பர்களே, இதுவும் கடந்து போகும்.

11 responses to “கப்பலா, சிப்பலா?

  1. மிகவும் அருமை !
    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி வருவது இயல்பு. அதை சரியாக புரிந்து நடக்க மன பக்குவம் வேண்டும் . சந்தோஷமான தருணத்தில் ஒரேயடியாக குதிப்பதும் வேண்டாம் , துக்கத்தில் துவளவும் வேண்டாம். நடுநிலைமை கையாள படுத்த கற்று கொள்ள வேண்டும் . அதை கைவசப்படுத்தினால் வாழ்க்கை நிம்மதியாக நடக்கும் .
    Take it easy policy… இதை Moral science class போல் பசங்களுக்கு சொல்லித்தர வேண்டும். It’s only good for their well being !!
    Failure is only the stepping stone for success !

    Like

  2. மனதை உருக்கும் ஆனால் புடம் போடும் பதிவு அனு,ஆற்றாமையால் தளரும் என் மனதுக்கும் தேவையான மருந்து இது,நன்றி என் தோழியே😍😘🙏

    Like

  3. பாலசுப்ரமணியன்

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே. புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனே ஜடரே சயனம்……….
    வாழ்க்கையின் தத்துவமே இதுதானே.

    Like

  4. Expressed your thoughts very well… The last 3 lines are influencing.

    Like

  5. அனு ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு அழுது கரைந்தேன் ….. கரையும் சேர்ந்தேன் …… எம்மைவிட்டுச் சென்ற அப்பா, தோழி பிரேமா, நண்பன் குரு, ராமலிங்கம் அண்ணன், என் அருமை மருமகன் சுதன், இனிய கிரிஜா ஆண்ட்டி …… எல்லாரையும் நினைத்து கண்ணீருடன் கரைந்தேன் ….. இருப்பினும் உன் வார்த்தைகள் மிகச் சத்தியம் ….. இதுவும் எதுவம் கடந்துதான் போகிறது ….. மிக வேகமாக …… அதனால் வாழும்வரை மகிழ்ந்திருப்போம் ….. எல்லாரையும் மகிழ்விப்போம் …… அனு ….. இப்பதிவுக்கு நன்றி.

    Like

Shanthiskitchen Shanthi Ramachandran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி