Daily Archives: ஓகஸ்ட் 30, 2018

வானப்பிரஸ்தம்

ப்ரஹம்மச்சர்ய

கிரஹஸ்தாஸ்ரமம்

வானப்ரஸ்தம்

முதல் இரண்டும் வாழ்வின் உற்சாகத்தில் இருக்கும்போது நடந்து விடுகிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இயல்பாக, மனதிற்கு கஷ்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், அப்படியே காலம் ஓடி நம் கைகளில் சிக்காமல் கடக்கிறது.

மூன்றாவதாக வரும் வானப்ரஸ்தம் நம்மிடம் சவால் விடுகிறது.

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்குஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

இதை எனக்கு கூகுள் சொல்கிறது.

என்னுடைய தாழ்மையான அபிப்ப்ராயத்தில், 60வது வயதிற்கு மேல் இல்லை… இன்னும் எவ்வளவு முன்னதாக மனதளவில் கடைபிடிக்க இயலுமோ அவ்வளவு நல்லது.

நீ சாமியார் …என்று என் வீட்டில் என்னை ஒருவர் கூறுவார்.

இல்லவே இல்லை. அதற்கான தகுதி எனக்கு இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருப்பது துறவறம் இல்லை.

நான் என முப்பத்தைந்து நாற்பதுகளிலேயே வானப்ரஸ்தாசரமத்திற்கு தயார் செய்து கொண்டுவிட்டேன்.

அதில் என் குருமார்கள் என் அப்பாவும் அம்மாவும். அவர்கள் வாழ்ந்த யதார்த்த வாழ்க்கை. ஒரு நிலைக்கு மேலே நாங்கள் எங்கள் கருத்துக்களை மட்டும் கூறுவோம், முடிவு உன்னுடையது என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.

எங்களை காடு வா வா என்கிறது … நீ உன் வாழ்க்கையை பார். உன் கணவன் குழந்தைகள் அவர்கள் எதிர் காலத்தை கவனி என்றார்கள்.

ஒரு விதத்திலும் எமோஷனல் பிளாக் மெயில் செய்யவில்லை.

ஸ்வாமி சுகபோதானந்தா அவர்களின் புத்தகத்தில் பல வருடங்கள் முன் படித்த ஞாபகம்.

வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ் போல… நீ ஓடி முடிக்கும் போது அடுத்தவனிடன் கம்பை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நிதர்சனமான உதாரணம்.

நாமும் பாசம் கண்ணை கட்டாமல்,

அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே.

அவர்கள் தவறினால் திருத்தி கொடுக்கலாம். தவறு செய்தால் தானே அவர்களும் கற்று கொள்வார்கள்.

1. எல்லா வேலைகளும்நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பகிர்ந்து செய்தால் எல்லாரும் active ஆக இருக்கலாம்.

2. வரவு செலவில் ரொம்பவும் மூக்கை நுழைக்காதீர்கள். பெண் பிள்ளைகள் அதிகமாக செலவு செய்வதாக தோன்றினால்… நல்ல முறையில் சொல்லுங்கள். நக்கல், குத்தல் , நாலு பேர் முன் சொல்வது இதெல்லாம் வேண்டாமே. அதையும் மீறி,

நான் பாதுக்கறேன் அப்பா/அம்மா என்று சொன்னால் விட்டு விடுங்கள். புலம்ப வேண்டாம்.

3. உங்கள் வயதுள்ளவர்களை சந்தித்தால், இந்த காலத்து பசங்க எங்க… என்று ஆரம்பித்து புலம்ப வேண்டாம். கைகளை போச்சு எல்லாம் என்று காட்டுவது, தலையில் அடித்து கொள்வது, உதட்டை கோணுவது…வேண்டவே வேண்டாம்.

Body language என்று சொல்லப்படும் நம் உடல் பாவனை ரொம்ப முக்கியம்.

4. நாளை நாம் ஓய்வு பெறுவோம் என்று முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், திடீரென்று நிறைய நேரமும், செய்வதற்கு ஒன்றும் இல்லாது போலவும் தோன்றும். அப்போது யார் எது சொன்னாலும் தப்பாகவும் தோன்றும். புத்தகம் இன்றியமையாத துணை. கொஞ்சம் டெக்னாலஜி தெரிந்தால் தூள் கிளப்பலாம்.

5. வாட்ஸ் ஆப் / facebook…இன்ஸ்டாகிராம்

எப்பவுமே என்ன வேன்டிற்கு என்று குற்றம் சொல்லாமல், தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனுப்பின message கு ப்ளூ டிக் வந்தது.. ஆனாலும் நீ பதில் அனுப்பல னு பெண் பிள்ளையை நோண்டாதீர்கள்… அவர்கள் என்ன வேலையாய் இருக்கர்களோ…கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்…

(ரொம்பவே நேரம் கடத்தினால் வளாசுங்கள் ,,😎)

இன்னிக்கி என்ன சமையல்? என்று தினமும் கொடையாதீர்கள். என்னத்தையோ சமைக்கட்டும் சாப்பிடட்டும்…

6. எனக்கு பொழுது போகவில்லை, வீடு வெறிச்சுன்னு இருக்கு, வாழ பிடிக்கலை, இதெல்லம் சொல்லி குழந்தைகளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தாதீர்கள்.

7. முதியோர் இல்லம்.

இன்று பல ஊர்களில் முதியோர் இல்லம் என்கிற பேரில், நல்ல ஹோட்டல் போல வசதிகள் தருகிறார்கள். அதனால், அங்கு போய் இருப்பதை, ஒரு தண்டனை போல பாவிக்காமல், ஜாலியாக இருக்க பாருங்கள்.

உங்களால் ஒரு வீட்டை நடத்துவதற்கு, சிரமமாக இருந்தால், முதியோர் இல்லத்தில் சென்று இருப்பதில் தவறில்லை.

8. Selflove: உங்களை உங்களுக்காக விரும்புங்கள். அதில் தவறே இல்லை. குற்ற உணர்வும் வேண்டாம். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, மணமுடித்து செட்டில் செய்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக வாழலாமே. பிடித்த சினிமா பாருங்கள்…கோவிலுக்கு சென்று வாருங்கள், ஊட்டியோ கொடைக்கானலோ போய் வாருங்கள். போகும் இடத்தில் சௌகரியமாக தங்கி, உண்டு, இளைப்பாருங்கள்.

50 வது வயதில் எனது 50 வது பதிவு இது.

வாழ்க்கை வாழ்வதற்க்கே. எல்லோருமே தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மால் ஆனது, எல்லோருக்கும் நல்ல வாக்கு சொல்லுவோம். தளர்ந்த உள்ளங்களுக்கு

இதுவும் கடந்து போகும் கண்ணே ….

என்று உற்சாகமூட்டுவோம்.

என்னை அக்காவாக, அத்தையாக, மமியாக, பெரியம்மாவாக, தோழியாக பார்க்கும் எல்லோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.