Tag Archives: இன்றைய இடுகை

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

கூவி அழைக்க கூ(ட்)டாதா

கூவி அழைத்தால் குருபரன் வருவான். கூவிக் கூவி அழைத்தாலும் கூட்டு சாப்பிட வரமாட்டார்கள்.

என்ன தான் அந்த கூட்டிற்கு சாபமோ. நல்ல மிளகு ஜீரகம் தூக்கலாக பொரிச்ச கூட்டு, புளி விட்ட கூட்டு, மோர் கூட்டு, வறுத்து அரைச்சு கூட்டு, என எவ்வளவு விதம்.

இன்று ஒரு இடைவெளிக்கு பிறகு சுரைக்காய் கூட்டு. கீன்வா அரிசி சாதத்திற்கு பதிலாக. ஒரு பிடி பிடித்தேன். நல்ல வக்கணயாக, தேங்காய் மிளகு ஜீரகம் மிளகாய் வத்தல், எல்லாம் வைத்து அரைத்து, கலந்து, ஒரு கொதி வந்ததும், அப்பிடியே தேங்காய் எண்ணையை ஒரு சுழட்டு சுழட்டி விட்டு, பின் இன்னும் கொஞ்சம் எண்ணையில், கடுகும் உளுந்தும்(பொன் நிறமாக) வறுத்து, ஒரு கொத்து, கறிவேப்பிலையும் கிள்ளி போட்டு, பெருங்காயம் தூக்கலா, செய்து, எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டு ஒரு பிடி பிடித்தேன். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து இதை எழுதி கொண்டிருக்கும் போது, சின்னதாக ஒரு ஏப்பம். என்ன ஒரு ஆத்ம திருப்தி. பருப்பு, காய், கொஞ்சம் தேங்காய், ரொம்பவே கொஞ்சம் எண்ணெய், இதை விட ஆரோக்கியமான ஒரு ஐட்டம் உண்டோ? எங்கள் வீட்டில் அத்துடன் ஒரு சுட்ட அப்பளம் கூட போதும். சில சமயம் வடாம் பொறிப்பது உண்டு. எனக்கு, எல்லா கூட்டமே பிடிக்கும் என்றாலும், இந்த முட்டை கோஸ் கூட்டும், உருளை கிழங்கு கார கரமேதும், தேவாம்ருதம். நல்ல ஆவக்காய் விழுதும், நல்ல ஜோடி. அதோடு, அந்த சாதத்தின் மேலே அப்பிடியே கூட்டு விட்டு கொள்ள கூடாது. பக்கத்தில் விட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சாப்பிடுவது ஒரு தனி ருஜி.

சமையல் ஒரு கலை என்றால், ருசித்து உண்பது ஒரு கலை.

பெங்களூர் கத்தரிக்காய் பொரிச்ச கூட்டு,

வாழைத்தண்டு மோர் கூட்டு

பூஷணிக்காய் / கொத்தவரங்காய் புளி கூட்டு தொட்டுக்கொள்ள டாங்கர் பச்சடி ( பதமாக வறுத்த உளுத்தம் பருப்பில் பொடித்து தாளித்து கொட்டியது ). என் அம்மா அத்துடன் ஊற வாய்த்த கொண்டக்கடலை போட்டு செய்வார்கள் …என்ன ருசி என்ன ருசி !! ஹூம் வருமா அந்த நாட்கள் இனி !

கூட்டை இனி வெறுக்காமல் உண்ணுங்கள் !

அம்மா மார்களே / மனைவி மார்களே அதற்காக தினமும் ஒரு கூட்டு செய்து துன்புறுத்தாதீர்கள்

அடுத்த முறை கூட்டு சாப்பிடும் பொது என்னை நினைத்து கொள்ளுங்கள்… எனக்கும் சேர்த்து ஒரு வாய் சாப்பிடுங்கள்..

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

வாட்சாப்(ப்பு) …..

வாட்சாப் – இன்றைய நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு மூலப் பொருள்.

நமக்கு பல நேரங்களில் வைக்கிறது ஆப்பு !

லாஸ்ட் சீன் – நேர்ல எப்போ கடைசியா பாத்தோம் னு தெரியாது ஆனா வாட்ஸ் ஆப் ல

“நா பாத்தேன் கடைசியா 5.53 கு இருந்தான் சார் அவன். ” னு நம்ப அவரை வேவு பாக்றத பெருமை பேசும் காலம் இது.

ப்ளூ டிக் வந்தது, உடனே offline போய்ட்டாங்க என்று குத்தம் சொல்லும் காலம்.

மெசேஜ் பார்த்துட்டாங்க எப்பவோ ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல என்று குமுறும் காலம்.

நாம கேக்காமலேயே காலைல கண் முழிக்கும் போது ,

You have been added to ……..என்று ஒரு இம்சை. நாம கடுப்புல இருந்தா , add பண்ணவன் எவனா இருந்தாலும் பரவா இல்லை னு உடனே exit பண்ணிடுவோம். அவன் நேரம் நல்லா இருந்து, நம்ம போயிட்டு போறான் பய னு விட்டோம், செத்தோம். காலை வணக்கத்தில ஆரம்பிச்சு, இரவு வணக்கம் வரைக்கும், சகல விதமான forward கள் போட்டு நம்மை திக்குமுக்காட வெச்சுருவாங்க.

உடனே அந்த குரூப் அட்மின் செட்டிங் மாத் துவாரு. ஓன்லி அட்மினிஸ் னு. அப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

அதுலேயும் என்னை போல நடுத்தர வயதும், எழுவது எண்வதுகள் ல இருக்கறவங்களும் அடிக்கற லூட்டி இருக்கே சொல்லி மாளாது போங்க !

என் பிறந்தநாளுக்கு ஒரு குரூப் ,

என் வீட்டு நாய் குட்டிக்கு ஒரு குரூப், என்அடுக்குமாடி குடியிருப்பு குரூப்

என் பள்ளி தோழிகள் / தோழர்கள் ஒரு குரூப் ( இதுல நீங்க 2/3 பள்ளிகள் படிச்சிருந்தீங்க அவ்ளோ தான் சுத்தம் )

கல்லூரி தோழர்கள் ஒரு குரூப் , அதுல நம்மோடு நல்லா ஒத்துபோகற நாலு பேரோட ஒரு தனி கூட்டணி( குரூப்)

ஆன்மீக குரூப் (கள் )

இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்

(எண்ணியதில், விருப்பத்துடன் இரண்டு அல்லது மூன்றிலும், கட்டாயத்தில் மற்றவைகளிலுமாக நானே பதினோரு குரூப் களில் இருக்கேங்க 🙂 🙂

சரி இருக்கறது கூட பரவாயில்லைனு பாத்தா , இந்த மனஸ்தாபம் இருக்கே , இது ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி. தனி மெஸ்ஸஜும் சரி, குரூப் லேயும் சரி, குண்டக்க மண்டக்க புரிஞ்சுக்கறதே மக்களுக்கு பொழப்பா போச்சுங்கறேன் !

ஒரு நல்ல பழமொழி பாத்தோம்னா சரி பகிரலாம்னா உடனே அதுக்குள்ளாற பூந்து அவங்களா ஒரு அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு ஏன் என்ன வருத்தம், உன்னை யாரு என்ன சொன்னாங்க னு கேட்டு ஒரே கொடச்சல்.

K னு போட்டா ஒகே வாம்

S னு போட்டா yes ஆம்

TIA நா THANKING IN ADVANCE ஆம்

இப்படி ஒரு தனி அகராதியை இருக்கு ….

இதேயும் மீறி ஒகே னு அடிச்சதை பிச்சி பீராஞ்சு நான் அவமானப்பட்டேன் அசிங்கப்பட்டேன் எப்பிடி நீங்க ஒகே மட்டும் அடிக்கலாம்னு ஐந்து வருட உறவு ஒன்று கசந்து போனது போன வாரம். நானும் மன்னாடி பார்த்து, கெஞ்சி அழுது புரியவைக்க பார்த்தேன். நாப்பது நிமிடம் போராடிய பின் கைவிட்டேன். சில பரிச்சயங்கள் எக்ஸ்பயரி தேதியோடு வருமோ என்னவோ. !!!

எது எப்படியோ, இந்த பூமில இருக்குற கொஞ்ச காலத்தில தேவையில்லாத மனஸ்தாபங்களை தவிர்ப்போம். என்னை போல பேசி தீர்க்க முயற்சிப்போம். அதையும் மீறி விதி இருந்தால் தாங்கும். இல்லையென்றால் நாலு நாட்களுக்கு நம் மண்டையை காயவெச்சிட்டு போகும். !!!

ஒரு டெக்னாலஜி வந்தா அதை ஆக்கபூர்வமா கூட பயன் படுத்தலாம். சிறு பிள்ளை தனமாக விவாதங்களிலும், வெறுப்பிலும் ஈடுபடவேண்டாம்.

மொத்தத்தில் வாட்ஸ் ஆப் ஆப்பு உறவுகளிடையே வைக்காமல் இருக்க வாழ்த்துக்கள்

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

வானப்பிரஸ்தம்

ப்ரஹம்மச்சர்ய

கிரஹஸ்தாஸ்ரமம்

வானப்ரஸ்தம்

முதல் இரண்டும் வாழ்வின் உற்சாகத்தில் இருக்கும்போது நடந்து விடுகிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இயல்பாக, மனதிற்கு கஷ்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், அப்படியே காலம் ஓடி நம் கைகளில் சிக்காமல் கடக்கிறது.

மூன்றாவதாக வரும் வானப்ரஸ்தம் நம்மிடம் சவால் விடுகிறது.

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்குஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

இதை எனக்கு கூகுள் சொல்கிறது.

என்னுடைய தாழ்மையான அபிப்ப்ராயத்தில், 60வது வயதிற்கு மேல் இல்லை… இன்னும் எவ்வளவு முன்னதாக மனதளவில் கடைபிடிக்க இயலுமோ அவ்வளவு நல்லது.

நீ சாமியார் …என்று என் வீட்டில் என்னை ஒருவர் கூறுவார்.

இல்லவே இல்லை. அதற்கான தகுதி எனக்கு இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருப்பது துறவறம் இல்லை.

நான் என முப்பத்தைந்து நாற்பதுகளிலேயே வானப்ரஸ்தாசரமத்திற்கு தயார் செய்து கொண்டுவிட்டேன்.

அதில் என் குருமார்கள் என் அப்பாவும் அம்மாவும். அவர்கள் வாழ்ந்த யதார்த்த வாழ்க்கை. ஒரு நிலைக்கு மேலே நாங்கள் எங்கள் கருத்துக்களை மட்டும் கூறுவோம், முடிவு உன்னுடையது என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.

எங்களை காடு வா வா என்கிறது … நீ உன் வாழ்க்கையை பார். உன் கணவன் குழந்தைகள் அவர்கள் எதிர் காலத்தை கவனி என்றார்கள்.

ஒரு விதத்திலும் எமோஷனல் பிளாக் மெயில் செய்யவில்லை.

ஸ்வாமி சுகபோதானந்தா அவர்களின் புத்தகத்தில் பல வருடங்கள் முன் படித்த ஞாபகம்.

வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ் போல… நீ ஓடி முடிக்கும் போது அடுத்தவனிடன் கம்பை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நிதர்சனமான உதாரணம்.

நாமும் பாசம் கண்ணை கட்டாமல்,

அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே.

அவர்கள் தவறினால் திருத்தி கொடுக்கலாம். தவறு செய்தால் தானே அவர்களும் கற்று கொள்வார்கள்.

1. எல்லா வேலைகளும்நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பகிர்ந்து செய்தால் எல்லாரும் active ஆக இருக்கலாம்.

2. வரவு செலவில் ரொம்பவும் மூக்கை நுழைக்காதீர்கள். பெண் பிள்ளைகள் அதிகமாக செலவு செய்வதாக தோன்றினால்… நல்ல முறையில் சொல்லுங்கள். நக்கல், குத்தல் , நாலு பேர் முன் சொல்வது இதெல்லாம் வேண்டாமே. அதையும் மீறி,

நான் பாதுக்கறேன் அப்பா/அம்மா என்று சொன்னால் விட்டு விடுங்கள். புலம்ப வேண்டாம்.

3. உங்கள் வயதுள்ளவர்களை சந்தித்தால், இந்த காலத்து பசங்க எங்க… என்று ஆரம்பித்து புலம்ப வேண்டாம். கைகளை போச்சு எல்லாம் என்று காட்டுவது, தலையில் அடித்து கொள்வது, உதட்டை கோணுவது…வேண்டவே வேண்டாம்.

Body language என்று சொல்லப்படும் நம் உடல் பாவனை ரொம்ப முக்கியம்.

4. நாளை நாம் ஓய்வு பெறுவோம் என்று முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், திடீரென்று நிறைய நேரமும், செய்வதற்கு ஒன்றும் இல்லாது போலவும் தோன்றும். அப்போது யார் எது சொன்னாலும் தப்பாகவும் தோன்றும். புத்தகம் இன்றியமையாத துணை. கொஞ்சம் டெக்னாலஜி தெரிந்தால் தூள் கிளப்பலாம்.

5. வாட்ஸ் ஆப் / facebook…இன்ஸ்டாகிராம்

எப்பவுமே என்ன வேன்டிற்கு என்று குற்றம் சொல்லாமல், தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனுப்பின message கு ப்ளூ டிக் வந்தது.. ஆனாலும் நீ பதில் அனுப்பல னு பெண் பிள்ளையை நோண்டாதீர்கள்… அவர்கள் என்ன வேலையாய் இருக்கர்களோ…கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்…

(ரொம்பவே நேரம் கடத்தினால் வளாசுங்கள் ,,😎)

இன்னிக்கி என்ன சமையல்? என்று தினமும் கொடையாதீர்கள். என்னத்தையோ சமைக்கட்டும் சாப்பிடட்டும்…

6. எனக்கு பொழுது போகவில்லை, வீடு வெறிச்சுன்னு இருக்கு, வாழ பிடிக்கலை, இதெல்லம் சொல்லி குழந்தைகளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தாதீர்கள்.

7. முதியோர் இல்லம்.

இன்று பல ஊர்களில் முதியோர் இல்லம் என்கிற பேரில், நல்ல ஹோட்டல் போல வசதிகள் தருகிறார்கள். அதனால், அங்கு போய் இருப்பதை, ஒரு தண்டனை போல பாவிக்காமல், ஜாலியாக இருக்க பாருங்கள்.

உங்களால் ஒரு வீட்டை நடத்துவதற்கு, சிரமமாக இருந்தால், முதியோர் இல்லத்தில் சென்று இருப்பதில் தவறில்லை.

8. Selflove: உங்களை உங்களுக்காக விரும்புங்கள். அதில் தவறே இல்லை. குற்ற உணர்வும் வேண்டாம். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, மணமுடித்து செட்டில் செய்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக வாழலாமே. பிடித்த சினிமா பாருங்கள்…கோவிலுக்கு சென்று வாருங்கள், ஊட்டியோ கொடைக்கானலோ போய் வாருங்கள். போகும் இடத்தில் சௌகரியமாக தங்கி, உண்டு, இளைப்பாருங்கள்.

50 வது வயதில் எனது 50 வது பதிவு இது.

வாழ்க்கை வாழ்வதற்க்கே. எல்லோருமே தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மால் ஆனது, எல்லோருக்கும் நல்ல வாக்கு சொல்லுவோம். தளர்ந்த உள்ளங்களுக்கு

இதுவும் கடந்து போகும் கண்ணே ….

என்று உற்சாகமூட்டுவோம்.

என்னை அக்காவாக, அத்தையாக, மமியாக, பெரியம்மாவாக, தோழியாக பார்க்கும் எல்லோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

இந்த தெரபி தேவைதானா ?????

இன்று காலை செய்தித்  தாளில் படித்த ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.

யுக்ரேன் நாட்டில் ஒருவர், ‘ சவப் பெட்டி தெரபி ‘ தருகிறாராம்…
உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது.!!!!
உயிருடன் இருக்கும் போதே சவப் பெட்டியில் படுக்க வேண்டும் என்றால் எப்பிடி இருக்கும் ?நினைத்து பாருங்கள். !!
அச்சமாகவும், அச்சான்யமாகவும்  இருக்கும் !!!!
ஆனால் யோசித்து பார்த்ததில், அட இது நம்மளை எவ்வளவு மேம்படுத்தும் என்று தோன்றியது.
நம் மதத்தில், நாம் நெற்றிக்க்கிட்டுக்கொள்ளும் பழக்கம் அதற்க்கு தான்…சாம்பலாகிய  விபூதியை பூசும் போது, உன் உடம்பும் ஒரு நாள் சம்பலாகப்போகிறது பார்த்து நடந்துகொள் என்று நினைவூற்றிக்கொள்வதர்க்கு …..
திருமான் காப்பும் அதே தத்துவத்தை தான்  கூறுகிறது…நீ மண்ணிலிரிந்து வந்தாய் மீண்டும் மண்ணிற்கு போவாய்…. என்று…
ஆனால் இன்று நெற்றிக்கு இட்டுக்கொள்வதும் குறைந்து விட்டது, அது கற்று கொடுக்கும் பாடமும் மறந்து விட்டது…
மண்ணின் மீது மனிதனுக்காசை 
மனிதன் மீது மண்ணுக்காசை 
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது 
இதை மனம்தான் உணர மறுக்கிறது …..
 
என்ன ஆழ்ந்த அர்த்தபூர்வமான வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்களது…!!!!!!
நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததை விட்டுவிட்டால் இந்த மாதிரி தெரபியை தேடி ஓடலாம்…
நினைத்து பாருங்களேன்….
ஒரு பதினைந்து நிமிடம் படுக்க வேண்டுமாம் அந்த பெட்டியில்….
மூடியை திறந்து வைத்துக்கொள்வதும், மூடி வைத்துக்கொள்வதும் நமக்கு ‘சாய்ஸ் ‘ !!!!
அடா அடா என்ன ஒரு சாய்ஸ் !!!!
அந்த பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கைக்கு தயாராகி போகிறார்களாம் மனிதர்கள்….
அந்த நேரம் பெட்டியில் இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் தோன்றும்….
வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம் …..
எவ்வளவு செய்ய வேண்டி உள்ளது …நாம் காலத்தை எப்படி விரயம்  செய்கிறோம்
ஏன் பந்துக்களுடம் சண்டை போடுகிறோம்….
ஏன் மற்றவர் மனது புண் படும்படி நடக்கிறோம் ……….
ஏன் உதவி செய்ய யோசிக்கிறோம் ………
ஏன் சின்ன விஷயங்களை ஊதி ஊதி (பலூன் வியாபாரி போல் ) பெரிதாக்கிக் கொள்கிறோம்…..
ஏன் நமக்கு கிடைத்த /நடந்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு நடக்காததையும் கிடைக்கததையும் நினைத்து புலம்பி, அங்கலாய்த்து போகிறோம் ……….
எல்லாம் எல்லாம் தோன்றும்
சுய பரிசோதனை நடதிக்கொள்வோம்….
ஒரு தடவை பெட்டியிலிருந்து வெளியே வந்தோமானால், மனது இதெல்லாவற்றையும் மறந்து விடுகிறததா ? ……நினைக்க மறுக்கிறதா?
ஒருவரது, இறப்பிலும்,  சவ ஊர்வலத்திலும், ஈமக்க்ரியைகள் நடக்கும் போதும் இதெல்லாம் நமக்கு தோன்றும் …பிறகு..எதையும் நாம் நினைக்க விரும்புவதில்லை….
அது தான் ஸ்மசான வைராக்யமா ?