Tag Archives: வாழ்த்து

குறும்பு பார்வை பார்த்தவரே ……

பட்டு சேலை காத்தாட , பருவ மேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அணைத்தவளே …..

அரும்பு மீசை துள்ளிவர, அழகு புன்னகை அள்ளிவர

குறும்பு பார்வை பார்த்தவரே என்னை கூட்டுக் கிளியாய் அணைத்தவரே

அப்பப்பா….புடவையை கையில் பிடித்துக்கொண்டு முகத்திலிருந்து கீழிறக்கி, கண்களில் நாணம் ததும்ப தலையை இசைக்கேற்ப ஆட்டி, குறும்பு பார்வை பார்த்தவரே என்று சொல்லும்போது எத்தனை அழகு !

கே. வி. மஹாதேவன் அவர்கள் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் மற்றும் பி . சுசீலா அவர்களின் இனிய குரலில் , எம்.ஜி. ஆர் & சரோஜா தேவி நடிப்பில் தாய்ச் சொல்லை தட்டாதே என்ற திரை படத்தில் வந்த பாடல்.

குறும்பு பார்வை காதலன் பார்க்கும் போது ஓகே !

ஆனா இந்த உலகம் பார்க்கும் ‘குறுகுறு ‘ பார்வை ? ம்ஹும் ‘நாட் ஓகே ‘.

நேற்று இன்ஸ்டாவில் ஒரு தாயின் எழுத்துக்களை படித்தேன். அட நான் சொல்லவந்ததையும் செய்ததையும் எழுதியிருக்கிறார்களே என்று சந்தோஷம்.

என்னை தெரிந்தவர்களுக்கு என் மகள்களையும் தெரியும். உயரம் குறைவு. அதனால ? அது நானும் என் மகள்களும் என் குடும்பமும் என் ஆத்மார்த்த நண்பர்களும் கேட்கும் “அதனால ” ! ஆனா நம்ம மக்கள் அப்பிடியில்லயே.

ஒருவர் பார்ப்பதிலும் / பேசுவதிலும் / நடப்பதிலும் வித்யாசமாக இருந்தால் அந்த நொடியில் உங்கள் மண்டையில் ஒரு மணி அடிக்கிறது பாருங்கள் அதை உதாசீன படுத்தாமல், பார்வையை வேறு இடத்தில திருப்புங்கள். உங்கள் “குறுகுறு ” பார்வை சகிக்கலை /தேவையில்லை என்று சொல்லவேண்டும் போல் இருக்கும்.

பொறுத்தது போதும் என்று நாங்கள் பொங்கி எழுந்த நாட்கள் உண்டு

பாத்துட்டு போகட்டும் போ என்று நடந்த நாட்கள் உண்டு

யெஸ் , என்ன வேணும் நீங்கள் ஏதானும் கேட்க நினைக்கிறீர்களா. என்று அட்டாக் செய்து அவர்கள் பயத்தில் அசடு வழிய விலகிய நாட்கள் உண்டு

திரும்ப குறுகுறு பார்வை பார்த்ததுண்டு ( இப்போ எப்பிடி இருக்கு என்று அவர்களை நெளிய வைத்ததுண்டு ) அன்று எங்கள் மனநிலை எப்படியோ அப்பிடி.

பார்ப்பவர்களை பழி வாங்கும் விதத்தில் எங்களுக்குள் அவர்களை பார்த்து கையசைத்து,சுட்டிக் காட்டி சிரித்து, (பின்ன அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ) . என்ன பண்ண சாமீ, ஒரு டிபென்ஸ் மெக்கானிசம் (defense mechanism ) தான் !

மாற்று திறனாளிகளை பாருங்கள். பார்வையால் புண் படுத்தாமல் பாருங்கள், பழகுங்கள் பேசுங்கள். உங்கள் உச்சு கொட்டலும், ஐயோ பாவமும் அவர்களுக்கு தேவையில்லை. பட்டென்று உங்கள் ஆர்வத்தை அடக்கி ஹாய் என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருங்களேன். ஒரு புன்னகையை அள்ளி வீசி குட் மார்னிங் அல்லது குட் ஈவினிங் அல்லது பை கூட சொல்லிவிட்டு நடையை கட்டலாமே !

அந்த ஐயோ பாவம் / அல்லது வேடிக்கை பார்க்கும் பார்வை பார்த்து அவர்களும் புண்பட்டு நீங்களும் நெளிந்து அல்லது வாங்கி கட்டிக் கொண்டு போகாமல் ஸ்மூத் ஆக கையாளலாமே. இல்லையா ?

இதையெல்லாம் தாண்டி ஒடிந்து அழுத நாட்களும் உண்டு என்பது தான் நிஜம். நீங்கள் என் செல்வங்கள் டா. இந்த குழந்தைகளை இவள் வயிற்றில் பிறந்தால் நன்றாக கொண்டு வருவாள் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாக்களின் நானும் ஒருத்தி. ஸ்பெஷல் அம்மா டு ஸ்பெஷல் சில்ட்ரன் ! அதில் எனக்கு தலை கனம் .chosen few வில் நாங்களும் உண்டு.

வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு… பொழப்பை பாருங்க… கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் …

இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் காணும் என் சிங்கக்குட்டி ஷ்ரியாவிற்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

அன்பான, தைரியமான, மனிதாபிமானமுள்ள மக்களை பெற்ற மகராசி !

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

இன்றும் என்றும்

எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…..

கோவிலுக்கு சென்று வந்தீர்களா ?

நல்ல துடக்கமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மக்கள் யாவரும், ஒருவருடன், ஒருவர் அன்புடனும், நட்புடனும்  பொறுமையுடனும், வாழ வேண்டுவோம்.

வீட்டில் எல்லோருடனும், நட்புடனும், அன்யோன்யதுடனும் பழகுவோம்….

உடல் நலத்திற்கு முக்யத்துவம் கொடுப்போம், வருடாந்திர செக் அப் செய்யவேண்டியதை நேரத்திற்கு செய்வோம். அலட்சியப் படுத்தாதீர்கள்.

முடிந்தால், ஒரு குழந்தைக்காவது, இலவசமாக, பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

நேரத்தை திட்டமிட்டு, செயல் படுத்தலாம்.

ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர் வாரம் ஒரு முறை மௌன விரதம் இருப்பார்…..( அரை  நாள் கூட முடியுமா என்னால் என்று தெரியவில்லை.)ஆனால் இருந்தால் எனக்கும் நல்லது, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதோ என்னமோ !!!!!மௌன விரததன்று இங்கு வலைபதிவில் கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். !!!!!!!!!!!!!!!!!!!!!

தினமும் சிறிது நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இந்த ஆண்டில், தன்னம்பிக்கையுடனும், தைர்யத்துடனும், மன உறுதியுடனும், இருந்து, நமக்காகவும்,பிறர்காகவும் வாழ்வோமே..!!!!!

 

 

 

 

 

 

என் கண்ணின் கருமணி !!!!!!!!!

என் கண்ணின் கருமணி,

என் இதயத்தின் துடிப்பு,
என் உயிர் நாடி,
எனக்கு பதவி உயர்வு அளித்தவள்,
வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்று தந்தவள்,
வாழ்கையை செம்மை படுத்தியவள்,
நான் உதிர்த்த, உதிர்க்கும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் அன்றும், கனிவான இதயத்தால் இன்றும், தேற்றுபவள்,
என்னை தன் குழந்தையாக ஒரு நிமிடமும், தாயாக மறு நிமிடமும் பார்க்கும் திறன் உள்ளவள்,
என்னை முற்றிலும் அறிந்தவள், என் பலங்களையும் பலவீனங்களையும், அறிந்து, ஆராய்ந்து விஷயங்களை பகிர்பவள்,
என் செவிலித்தாயாக ஆறு மாத காலம் என்னை பாதுகாத்தவள்,
எனக்கு வலி தெரியாமல் இருக்க என் நெற்றி வருடி என்னை தூங்க வைத்தவள்,
என் கை பக்குவத்தின் முதல் விசிறி !!!
என்னை போலவே சிந்திப்பவள், ( ஆனால் என்னை விட தெளிவாக சிந்திப்பவள்),
என் ஆசிரியை, என் தோழி, என் நலன் விரும்பி, என் விசிறி,
என் எல்லாம் …….
என் மகள்,
நான் வணங்கும் என் செஞ்சுலட்சுமி தாயாரின் பிரதிநிதி…..