Tag Archives: இல்லங்கள்

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

ஆத்ம திருப்தி

.ஆத்ம திருப்தி …….
இதை மீண்டும் இன்று ஒருமுறை நான் அனுபவித்தபோது, நான் இருந்த இடம்
அக்ஷயா டிரஸ்ட் நடத்தும் முதியோர் இல்லத்தில்…..

இன்று கணவரின் பிறந்தநாளை ஒட்டி, முதியோர் இல்லத்து வாசிகளுக்கு, ஒரு நாள் உணவுக்கு, பணம் கட்டியிருந்தோம் . அத்தோடு நின்றுவிடாமல் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடவும் அவர்களுக்கு உணவு பரிமாறவும் எண்ணி அங்கு சென்றேன்….

முதியோர் இல்லங்களுக்கு போவது எனக்கு இது முதல் தடவை அல்ல
.பல முறை சென்றாலும்’, மனதை நெருடுகிறது..
நம்மை பெற்றவர்களை, எப்படி இப்படி விட முடியும்?
நாம் குடிக்கும் கஞ்சியோ .கூழோ ஏன் அவர்களுக்கு ஊத்த முடியாமல் போகிறது
தனது சாப்பாட்டில் ஒரு பகுதியை கருவிலேயே நமக்கு கொடுக்க தொடங்கியவளுக்கு உணவளிப்பதும் அவளை பராமரிப்பதும் அவ்வளவு பெரிய கஷ்டமா..?
நம் படிப்பிற்கும், ஏனைய தேவைகளுக்கும் அயராது உழைத்த தந்தையை, உதறி விடுவது அவ்வளவு எளிதானதா?
வருங்கின்ற உபயதாரர்களை பார்த்து என்பதும் எண்பத்தி ஐந்து ம் தொட்டவர்கள் கை எடுத்து கும்பிடுவது மனதை வாட்டுகிறது …..
உங்கள் கைகள் உயர்வது என்னை ஆசிர்வதிக்க மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் கூறினேன்…..
தங்களின் பழைய கால கதைகள் ……
தாங்கள் அங்கு வந்த கதை …
புறக்கணிக்க பட்டது எப்படி…..
இவை கேட்கப்படும் போது , ”
கடவுளே, எனக்கு நல்ல புத்தி தந்தமைக்கும், நல்ல குணம் கொடுத்ததற்கும் நன்றி என்று கூறத் தோன்றிற்று…..
அழகாக வரிசையாக வந்து சாப்பிட உட்காருகிறார்கள்…..
அழகாக ஒரு பிரார்த்தினை ….
அன்றைய தினம் பிறந்தநாள் காண்பவரோ , கல்யாண நாள் காண்பவரோ , அவர் பெயர் சொல்லி அவரும் அவர் குடும்பத்தினரும் வாழ்க என்று வாழ்த்தும் போது , மனது நிறைகிறது
தங்கள் தட்டை கைவசம் கொண்டு வந்து, கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார்கள் ….

old couple

இதுல ஒண்ணு அதுல ஒண்ணு பெத்தேன் ….. ஆனால் இன்று இங்கு இருக்கிறேன் (மகன் ஒன்று மகள் ஒன்று ) என்பதை அப்படிச் சொன்னார் அந்த அம்மையார் …..
அடுத்த நிமிடமே,
இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறவும் தவறவில்லை எதையும் நினச்சு பாகர்தில்லை என்று அந்த அம்மையார் கூறிய போது , அதில் ஒரு வலியும் வலி கற்று தந்த பக்குவமும் தெரிந்தது …..
தன் தந்தைக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற நாடு துறந்த அந்த தசரத சக்ரவர்த்தியின் கதையை நாம ராமாயணமாக அவர்களக்கு பாடிவிட்டு, என்ன ஒரு முரண்பாடு என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன்.