Tag Archives: postoftheday

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

மூட் நம்மை முடக்கக்கூடாது ..

sorrow faceஎவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு  நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,

படித்ததும், கேட்டதும், உணர்ந்ததும், கடை பிடிக்க முயன்றதும் நம் கைவிட்டு போகிறது…
நமக்கு வேண்டப்பட்ட ஒருவர், நாம் நன்றாக அறிந்தவர், ஒரு வார்த்தை சொல்லி விட்டால், நாம் ஏன் இவ்வளவு பரிதவித்து போகிறோம்?
உடனே கோபமும், அழுகையும் பொத்துக்கொண்டு வருகிறதே ?
பழசையெல்லாம் கிண்டி கிளறி எடுக்கிறது மனசு
அந்த குப்பயோடேயே வருகிறது, சுய பச்சாதாபம் ….
‘நானாக்கம் இதெல்லாம் தாங்கின்டேன் ” என்று புலம்புகிறது மனசு….
“அதனாலென்ன, இன்று எல்லாம் நன்றாகத்  தானே இருக்கு”  என்று புத்தி ஒரு பக்கம் சமாதானம் கூறினாலும்,
” அதெப்படி, அப்பிடி ஒரு வார்த்தை என்னை பார்த்து சொல்லி விட்டார்கள் ” என்று திரும்ப திரும்ப வேதனையை பறைசாற்றுவதற்கு அங்கீகாரம் தேடுகிறது மனசு….
ஒரு நாள் முழுவதும் மூஞ்சி பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
எதிலும் ஈடுபட மறுக்கிறது
வருத்தப்படுவதையும், மூஞ்சி அறுந்து தொங்குவதையும் நியாயப்படுத்த தேடுகிறது மனசு….( அதில் ஒரு தனீ  சுகம் அந்த வேளையில் )
உண்டா இல்லையா ? மறைக்காமல் சொல்லுங்கள் !!!!!
வாய் விட்டு அழுதாலும், நண்பர்களை அழைத்து தொலை பேசியில் புலம்பித்  தீர்த்தாலும் அடங்குவதில்லை…
இப்போதெல்லாம் முகநூலில் ( facebook ) ஸ்டேடஸ் அப்டேட் (status update ) செய்தால் கூட தணிவதில்லை !!!!!
அதற்க்கான நேரம் குறைந்தது ( நம் பிடியில் விஷயம் இருந்தால் ) 24 மணி நேரம்…..
புயல் சின்ன அறிகுறி போல் …………..
சூறாவளியாக வீசிவிட்டு மெது மெதுவே சகஜ நிலைக்கு திரும்புகிறது.
நாம் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் கூட நம்முடன் தங்கிவிட்டு போக தயார்தான்…..
ஆனால் அடித்து விரட்டவிட்டால், ஈஷிக்கொண்டு இருந்துவிடும்
அப்பறம் நாம் முன்னேறுவது எங்கிருந்து ???